தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவாக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் ‘தியாகதீப கலைமாலை’ நிகழ்வு இம்முறையும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. திலீபனின் 27ஆவது ஆண்டுநினைவுகளை சுமந்தவாறு கடந்த சனிக்கிழமை 27 – 09 – 2014 அன்று மெல்பேணில் அமைந்துள்ள சென்.ஜூட் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் இந்நிகழ்வு தொடங்கியது.
தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவாக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் ‘தியாகதீப கலைமாலை’ நிகழ்வு இம்முறையும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. திலீபனின் 27ஆவது ஆண்டுநினைவுகளை சுமந்தவாறு கடந்த சனிக்கிழமை 27 – 09 – 2014 அன்று மெல்பேணில் அமைந்துள்ள சென்.ஜூட் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் இந்நிகழ்வு தொடங்கியது.
அவுஸ்திரேலிய தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மெல்பேண் பிரதிநிதி திருமதி உதயா சிங்கராசா அவர்கள் ஏற்றிவைக்க அதைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை திரு தயாநிதி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
தியாகி லெப்.கேணல் திலீபனின் திருவுருவப்படத்துக்கு திரு. விக்னேஸ்வரனும், மாவீரர் கேணல் சங்கரின் திருவுருவப்படத்துக்கு திரு. குணரட்ணமும், மாவீரர் கேணல் ராயுவின் திருவுருவப்படத்துக்கு திருமதி கமலராணி தயாநிதியும் ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர். அதைத் தொடர்ந்து பொதுக்கள் அனைவரும் வரிசையாகக் சென்று மலர்வணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் அடுத்ததாக, அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தைத் தொடர்ந்து ‘பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கின்றான்’ என்ற காணொலி காட்சிப்படுத்தப்பட்டது. பத்துநிமிடக் காணொலியானது தியாகி திலீபனின் உண்ணாநோன்புப் போராட்டத்தின் பதிவுகளைக் கொண்டு தொகுக்கப்பட்டிருந்தது. இக்காட்சிப்படுத்தலை அடுத்து Andrew Cheesman அவர்களி் உரை இடம்பெற்றது. Andrew அவர்கள் அவுஸ்திரேலியாவிலுள்ள மனிதவுரிமைச்செயற்பாட்டாளருள் முக்கியமானவர். குறிப்பாக அகதிகள் விடயத்தில் கடுமையாகப் போராடி வருபவர்.
அவர் தனதுரையில் “உலகில் போராட்டத்துக்கான தேவை எப்போதும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றது. மனித சமத்துவத்துக்கான தேவை இருக்கும்வரை போராட்டங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அவ்வகையில் இலங்கைத்தீவில் தமிழினம் தனக்கான சமத்துவத்துக்காகப் போராடுகின்றது. இப்போராட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். தனியே அரசுகளை நம்பிக்கொண்டிராமல் உலக சமத்துவத்துக்காகப் போராடும் அனைத்து அடிமட்டப் போராட்ட அமைப்புக்களோடும் கைகோர்த்துப் போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். திலீபனின் இறுதிக் கோரிக்கையான மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்பதை நெஞ்சில் நிறுத்தி தொடர்ந்து போராடுவோம்” எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் அடுத்து குர்திஸ் இனத்தவரின் பாரம்பரிய நடனம் இடம்பெற்றது. மிகநீண்டகாலமாகவே தமது விடுதலைக்காகப் போராடிவரும் குர்திஸ் இனத்தின் விடுதலைப் போராட்டம் தமிழீழவிடுதலைப் போராட்டத்தோடு ஒன்றித்துப் பயணித்துவருவதும் ஈரினத்தவரும் ஒருவரையொருவர் தொடர்ந்தும் ஆதரித்து வருவதையும் குறிப்பிட்டு ஓர் அறிமுகவுரை நிகழ்த்தப்பட்ட பின்னர், விக்ரோறிய மாநில குர்திஸ் அமைப்பைச் சேர்ந்த Basak Gel அவர்கள் குர்திஸ் விடுதலைப் போராட்டத்தையும் தற்போதைய சூழ்நிலையையும், குர்திஸ் இனம் தற்காலத்தில் சந்தித்துவரும் மிகப்பெரும் இனப்படுகொலையையும் விளக்கி உரையாற்றினார். இவரின் உரையைத் தொடர்ந்து குர்திஸ் இனத்தின் பாரம்பரிய நடனம் அரங்கேற்றப்பட்டது.
தொடர்ந்து தற்போது ஐ.நா. சபையால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்குழு தொடர்பான விளக்கமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இவ்விசாரணைக் குழுவின் முக்கியத்துவம், தமிழர்கள் தமது சாட்சியங்களைப் பதிவுசெய்யவேண்டிய வரலாற்றுத்தேவை என்பவற்றை விளக்கியபின் அவுஸ்திரேலியாவில் சாட்சித்திரட்டல்கள் எவ்வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன என்ற விளக்கமும் தகவல்களும் வழங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஆறு தாயகப்பாடல்கள் இசையோடு பாடப்பட்டன. தியாகி திலீபனின் நினைவுகளோடு தாயகஉணர்வுகளை சுமந்தவாறும் எமது விடுதலைப்போராட்டத்தின் வேட்கையை பதிவுசெய்தவாறும் பாடல்கள் அமைந்திருந்தன. இளையோர்களதும் சிறுவர்களதும் பங்களிப்போடு நிகழ்த்தப்பட்ட இந்த இன்னிசை நிகழ்ச்சியில் பங்கெடுத்த கலைஞர்களுக்கான பாராட்டுச்சான்றிதழ்களை திரு. நந்தகுமார் அவர்கள் வழங்கினார்.
இறுதிநிகழ்வாக தேசியக்கொடியிறக்கப்பட்டதை தொடர்ந்து உறுதிமொழியோடு நிகழ்வுகள் யாவும் இரவு எட்டு மணிக்கு நிறைவுற்றன.
Eelamurasu Australia Online News Portal










