அகதிகளின் உரிமைகளை மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு………!

ஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா. வுக்கு சமர்பித்த அறிக்கையில் ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஐ.நா.வின் அனைத்துலக காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், மீளாய்வுக்காக அறிக்கை சமர்பித்துள்ள ஆமென்ஸ்டி அமைப்பு, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களும் அகதிகளும் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்காக ஆளாவதாக கவலைக் கொண்டுள்ளது.

பாதுகாப்புத் தேடி ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களை குறிப்பாக படகு வழியாக தஞ்சமடைந்தவர்களை ஆஸ்திரேலிய அரசு மிகவும் மோசமாக நடத்துவதாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கும் பசிபிக் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் 370க்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள்/ அகதிகள் தொடர்ந்து மோசமான நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது ஆம்னெஸ்டி அமைப்பு.

அதே போல், ஆஸ்திரேலியாவில் பூர்வக்குடிகள் மீது காட்டப்படும் இனப்பாகுப்பாடு குறித்து கவலையையும் ஆமென்ஸ்டி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆஸ்திரேலியர்களுடன் ஒப்பிடுகையில் பழங்குடிகளின் ஆயுள் காலம், கல்வி, வேலையின் நிலை தேசிய சராசரியை விட கீழ்நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.