தாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்களவருடன் முரண்பட்ட அரச அதிபர் நீக்கம்!

மட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரை நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா, அரசினால் பதவி நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து மட்டக்களப்பின் புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்கக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தமிழ் மக்களின் வாழ்வியலாகக் காணப்படும் விலங்கு வேளாண்மையான கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரையை வனவளத் திணைக்களம் உரிமை கோரித் தடுத்திருக்கும்போது அப்பகுதியில் சிங்கள மக்கள் துப்பரவுப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த விடயத்தைத் தமிழ் மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றதோடு சகல திணைக்களங்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல தரப்பினரோடும் தொடர்பு கொண்டபோதும் தீர்வு கிட்டாத நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரிடமும் சென்று முறையிட்டவேளை, “காணி அற்ற சிங்கள மக்கள் வாழக்கூடாதா? நீங்கள் மேய்ச்சல் தரை கோருகின்றீர்கள் அவர்களோ வாழ்நிலம் கோருகின்றனர். அதனைத் தடுக்க முடியாது” என அதிகாரத் தோரணையில் பதிலளித்திருந்தார்.

இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரான திருமதி கலாமதி பத்மராஜா சம்பவ இடத்துக்கு நேற்று முன் தினம் நேரில் சென்று பர்வையிட்டதோடு ஆவணங்கள் ரீதியிலும் பரீட்சித்தமையால் அங்கிருந்த சிங்கள மக்கள் மாவட்ட அரச அதிபருடன் முரண்பட்டனர். அவரும் தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாடுகளை எடுத்துரைத்தார்.

இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட அரச உடனடியாகவே பதவி நீக்கப்பட்டு அந்த இடத்துக்குக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.