தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை

தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை அவர்களின் மறைவையொட்டி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை

தமிழின விடுதலைக்காக பல்வேறு தளங்களிலும் செயற்பட்டு, ஓய்வற்று உழைத்து, ஒப்பற்ற பெருமனிதராக வாழ்ந்த “பத்மநாதன் ஐயா” என அனைவராலும் அழைக்கப்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை அவர்களின் மறைவுச்செய்தி அனைவரையும் கவலை கொள்ளச்செய்கின்றது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழ்ந்த பத்மநாதன் ஐயா, தாயகவிடுதலை போராட்ட காலத்தில் தாயகத்திற்கான தேவைகளை நிறைவுசெய்வதில் மிகவும் அர்ப்பணிப்போடு மிகவும் அமைதியான முறையில் பணியாற்றியவர். விடுதலைப் போராட்ட வட்டத்திற்கு வெளியே நின்ற மக்களையும் அணுகி அவர்களையும் எமது விடுதலைப் போராட்டத்தின் பங்காளர்களாக மாற்றியதில் அவரின் பங்கு பெரியதாக இருந்தது. தாயக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வெவ்வேறான திட்டங்களை முன்வைத்தது மட்டுமன்றி அதனை வெற்றிகரமாக முன்னகர்த்துவதிலும் முழுமையாக ஈடுபட்டுச் செயற்பட்டமை இன்றும் நினைவு கூரத்தக்கது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த செயற்பாட்டாளராக இணைந்து கொண்ட அவர் சிட்னியில், அதற்கான அலுவலகம் ஒன்றை நிரந்தரமாக அமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை உருவாக்கி செயற்படுத்தியவராக இருந்தார். தாயக மக்களின் அவலக்குரலையும் உரிமைக்குரலையும் ஏனைய சமூகத்தினரின் மத்தியில் கொண்டு செல்லும் முகமாக தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு துறைசார் பிரமுகர்களை இணைத்து Voice for the Voiceless என்ற குழுமத்தை ஏற்படுத்தி செயற்படுத்தியிருந்தார். தனக்கு வழங்கப்படுகின்ற விடுதலைப்பணியை சிறியது என்றோ பெரியது என்றோ கவனத்தில் கொள்ளாது, அவற்றை எவ்வாறு சிறப்பாக செய்யவேண்டும் என்பதில் தான் கரிசனை கொண்டவராக அவரது செயல்பாடுகள் இருந்தன.

எமது விடுதலை இயக்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பல நாடுகளுக்கும் – நியுசிலாந்து தொடக்கம் கனடா வரை – சென்று, அதன் கட்டமைப்புகளின் கணக்கியல் ரீதியான செயற்பாடுகளை, சுயாதீனமான முறையில் மதிப்பீடு செய்ததுடன், தேவையான முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் பங்காற்றியிருந்தார். ஒரு விடுதலை இயக்கத்தின், ஒரு விடுதலைபெறும் நாட்டின் கணக்கியல் ரீதியான விடயங்களை எத்தகைய நுணுக்கமான முறையில் மதிப்பாய்வு செய்யப்படவேண்டுமென எதிர்பார்ப்படுகின்றதோ, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடியவாறு அவரது மதிப்பீடுகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், தாயகத்திற்கு நேரடியாக சென்ற அவர், தாயக மக்களின் வாழ்வாதார திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான பல முயற்சிகளை மேற்கொண்டார். புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதுடன் மட்டுமன்றி, தாயகத்திலும் நீடித்து நிலைக்கக்கூடிய தற்சார்புடைய சமூகதிட்டங்களை முன்னகர்த்தவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அதற்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பெரும் முயற்சி செய்திருந்தார். வயோதிப வயதிலும் மக்களுக்கான பணி என்ற உன்னத சிந்தனை யும் செயல்பாடுகளும் கொண்டதாகவே அவரது வாழ்வின் இறுதி நாட்கள் அமைந்திருந்தன.

எமது மக்களின் விடுதலைக்கான பணியில் தனது சிந்தனை செயல் என இறுதி வரை உழைத்து நின்ற தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை அவர்களின் துயரால் வாடும் இவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்களோடு, எமது கரங்களையும் இறுகப்பற்றிக்கொள்ளும் நாம், அவர் வழிகாட்டிச் சென்ற வழியில் எமது தேசத்தின் விடுதலைக்காகவும் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்தும் உழைப்போம் என உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்