இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் ‘அடங்காப்பற்று’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் தாயகத்து உறவுகளின் மறு வாழ்வுக்காக நிதி உதவி வேண்டி கடந்த ஆறு வருடங்களாக ரசனா நடனப்பள்ளி நடாத்தி வரும் நாட்டிய நிகழ்வின் ஒரு தொடராக இவ்வருடம் நடந்தேறிய நாட்டிய நிகழ்வுதான் அடங்காப்பற்று.
இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் ‘அடங்காப்பற்று’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் தாயகத்து உறவுகளின் மறு வாழ்வுக்காக நிதி உதவி வேண்டி கடந்த ஆறு வருடங்களாக ரசனா நடனப்பள்ளி நடாத்தி வரும் நாட்டிய நிகழ்வின் ஒரு தொடராக இவ்வருடம் நடந்தேறிய நாட்டிய நிகழ்வுதான் அடங்காப்பற்று.
மூன்றாவது முறையாக Patchwork அமைப்பிற்கு நிதியளிப்பதற்காக அடங்காப்பற்று அரங்கேற்றப்பட்டது. போரின் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி அவையங்களை இழந்து, தனித்து இயங்கமுடியாமல் இருக்கும் எம் உறவுகளுக்கு உதவி வழங்கிப் பராமரித்து வரும் அமைப்புத்தான் Patchwork. கடந்து மூன்று வருட்களாகச் செயற்பட்டு வரும் இந்த அமைப்பு முழுமையாக மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பின் செயற்பாட்டுக்கு உறுதுணை வழங்குவதற்காக, ரசனா நடனப்பள்ளி 2013இல் அடங்காப்பற்று என்ற தொனிப்பொருளில் நாட்டிய நாடகத்தை வழங்கியது. இது ரசனா நடனப்பள்ளியின் நீண்டநாள், கடின உழைப்பின் ஆறாவது அரங்கேற்றம்.
19.10.2013 அன்று மாலை 6.30 Hurstville Entertainment Centre (Sydney) இல் நிகழ்வு ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆறு மணிக்கே கூட்டம் கூடத்தொடங்கிவிட்டது. தமிழர்கள் மட்டுமல்ல, கணிசமான அளவில் வேற்று இனத்தவர்களும் வந்திருந்தார்கள். ஈழத்தமிழர் மீது அபிமானம் கொண்ட பசுமைக்கட்சியின் (Green Party) உறுப்பினர்களும் வருகை தந்திருந்தார்கள். 6.20 மணியளவில் பார்வையாளர்கள் அரங்கத்திற்குள் அனுமதிக்கபட்டார்கள். பிரமாண்டமான, ஆனால் அடக்கமான அரங்கம். மேடையின் நடுவில் கம்பு, வாள், அம்பு, என பண்டைய போர்க்கால ஆயுதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அரங்கத்தின் முன்னிலை ஓரமாக, நாட்டியத்தின் தந்தை நடராஜரின் உருவச்சிலையுடன் ஈழத்தமிழரின் வரலாற்று நாயகி ‘நல்ல நாச்சியார்’ அவரின் படமும் வைக்கப்பட்டிருந்தது. வாளேந்தியபடி குதிரை மீது அவர் அமர்ந்திருந்த தோற்றம், பண்டைய ஆயுதங்களின் தொகுப்பு என்பன நிகழ்வு தொடர்பாக ஒரு பலத்த எதிர்பார்ப்பைக் கொடுத்திருந்தன. ஆவலுடன் காத்திருந்தபோது, நிகழ்வு ஆரம்பிப்பதற்கான அறிவிப்பு வந்தது.
வைத்தியக் கலாநிதிகளான திரு திருமதி தவசீலன் தம்பதிகளின் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து, எம் மண்ணுக்காக வித்தாகிப்போன மாவீர தெய்வங்களுக்கும், இலங்கை மற்றும் இந்தியப்படைகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்குமாக அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கட்டன. முதல் நிகழ்வாக, நாட்டிய மரபின்படி, ‘புஸ்பாஞ்சலி’ நடனத்தின் மூலம் நடனத்திற்கும், குருவிற்கும் அவைக்கும் வணக்கம் வைக்கப்பட்டது. நாற்றிசைக்கும் கரம்கூப்பி மூவர் ஆடிய புஸ்பாஞ்சாலி நல்ல ஆரம்பமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது.
புஸ்பாஞ்சலியின் நிறைவைத் தொடர்ந்து, ‘அடங்காப்பற்று’ நிகழ்வு மேடையேறியது. நிகழ்வின் முதல் அங்கமாக அன்றைய நிகழ்வின் நாயகி வீரவன்னிச்சி நல்ல நாச்சியாருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அந்த மறத்தமிழச்சி ஏன் வாளேந்தினாள்? அந்த வரலாறு என்ன? என்ற கேள்விகளுடன் ‘அடங்காப்பற்று’ என்ற எண்ணக்கருவுக்கான தெளிவான விளக்கத்தைக் பின்னணிக்குரல்கள் கொடுக்கத்தொடங்கின. அடங்காப்பற்று இரண்டு வகையான கருப்பொருளைக்கொண்டது. தீராத பற்று, அடிபணியாத தேசம். ஆம் தமிழ் மீது கொண்டது தீராத பற்று, இது ஒரு அடங்காப்பற்று. யாருக்கும் அடிபணியாத தேசம் எம் வன்னிமண் இது மற்றொரு அடங்காப்பற்று. தமிழ் மீதும் அன்னை மண் மீதும் தீராத பற்றுக்கொண்டு, யாருக்கும் அடிபணிந்து வாழமாட்டோம் என வெள்ளையனோடு போராடி வீரமரணம் அடைந்த எங்கள் முப்பாட்டன் குலசேகரன் வீரமுத்துப் பண்டார வன்னியனின் வீரவரலாற்றை கதைக்களமாகக் கொண்டு அடங்காப்பற்று பயணிக்கத் தொடங்கியது.
பின்னணி வசனம். இசை, பாடல்களுடன் ஒரு வரலாற்றை நாட்டியமாகத் தந்துகொண்டிருந்தது ரசனா நடனப்பள்ளி. பண்டாரவன்னியன் அவனது தமிழப்பற்று, வீரம், எவ்வாறு காக்கை வன்னியனால் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டான்? குருவிச்சி நாச்சியார் யார்? அவர் எப்படி ஒரு போராளியானார்? போர்க்களத்தில் அவர் சாதனைகள் என்ன? என ஒரு வலராற்றுக் காவியம் இடைவேளை வரை நேர்த்தியாக நகர்ந்தது. இடைவேளையின் பின்னர், சிங்களப் பேரினவாதத்தின் அடக்கு முறையையும், அதை எதிர்கொண்ட ஆயுதப்போராட்டத்தையும், அந்த ஆயுதப்போராட்டம் பல நாடுகளின் ஒத்துழைப்புடன் வீழ்த்தப்பட்டதையும், அதன் பின்னரான கொடுமைகளையும் சிறப்பாக எடுத்துக்காட்டி, எத்தனை தடை வந்தாலும் விழ விழ எழுவோம் அடிபணிய மாட்டோம் எனத் துணிவாக எழுந்து ‘நிமிர்ந்து நில், தொடர்ந்து செல்’ என்ற கோசத்துடன் நாட்டிய நாடகம் நிறைவுக்கு வந்தது.
நாட்டிய நிகழ்வின் நாயகன் சேரன் சிறிபாலன். ஒரு நடனப்பள்ளியின் குருவாக, தேர்ச்சிபெற்ற அவரது நடனம், எந்தவிதமான தளம்பலோ தளர்வோ இல்லாமல் நேர்த்தியாக இருந்தது. காதல், சோகம், கோபம், ஆத்திரம், இயலாமை என ஒவ்வொரு உணர்வின் பரிமாணத்தையும் தனது முகபாவங்களில் அவர் காட்டியவிதத்தில் வார்த்தைகளுக்கான தேவை இருக்கவில்லை. எமது முப்பாட்டி குருவிச்சி நல்ல நாச்சியாரை எம் கண்முன்னே கொண்டு வந்த மீனா கிருஸ்ணமூர்த்தியின் நடனத்திற்கு அரங்கம் நிறைந்த கரகோசம் கிடைத்தது. தொடர்ச்சியாக, நீண்ட நேரம் தளர்வின்றி ஆடிக்கொண்டிருந்தார். அவருடைய முகபாவங்களிலும், உணர்வுகளை வெளிப்படுத்திய விதத்திலும் அவரது நாட்டியத்தின் மீதான பற்றும் தேர்ச்சியும் வெளிப்படையாகத் தெரிந்தது. பின்னணிக்குரல்களுக்கு ஈடுகொடுத்துக் காட்டிய நடிப்பில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.
குருவுடன் நடனமாடும் வாய்ப்புக் கிடைப்பது அரிதானது. ஆனால் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்ற கிருசிகா அரசநாயகம், தமிழ்நிலா யோகசிங்கம் இருவரும் குருவுக்கு ஈடுகொடுத்து ஆடினார்கள். சேரன் சிறிபாலனின் மாணவிகளான அவர்களின் நடனம் தேர்ச்சி பெற்றவர்களின் நடனத்திற்கு இணையாக இருந்தது. ரசனா நடனப்பள்ளி உருவாக்கும் நாட்டியகாரர்களின் பட்டியலில் இவர்களுக்கு முதன்மையான இடம் நிச்சயமாக உண்டு. சிறப்பான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள். வளர்ந்துவரும் கலைஞனான தினேஷ் இரவீந்திரன் நாட்டியத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஆற்றலும் திறமையும் உண்டு என்பதை தெளிவாகக் காட்டியிருந்தார். காக்கை வன்னியன் என்ற நம்பிக்கைத் துரோகியின் வஞ்சகத்தை தனது இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். எமக்குப் பின்னால் இருந்த மழலை ஒன்று ‘அந்த uncle so bad‘ என்று தனது மழலைக்குரலில் கூறும்போதுதான் தெரிந்தது அவருடைய நடிப்பின் தாக்கம். நிச்சயமாக அந்தச்சிறுமிக்கு பண்டார வன்னியன் வரலாறு தெரிந்திருக்காது.
ஆரம்பம் முதல் இறுதிவரை நிகழ்வின் எல்லா அங்கத்திலும் பங்கு கொண்டிருந்த சர்மா நிகஷன், நாட்டியம் பயின்று கொண்டிருக்கும் ஒரு மாணவன். ஆனால் தேர்ச்சிபெற்ற நடனக்கலைஞர்களுக்கு அவன் ஈடுகொடுத்து ஆடிய விதம் அவனுக்கான சிறப்பான எதிர்காலத்தை படம்பிடித்துக்காட்டியிருந்தது. காலில் கட்டுப்போட்டபடி, ஒவ்வொரு அசைவிலும் விட்டுக்கொடுக்காமல் ஆடியவிதம் மனதை நெகிழவைத்தது. யோகனா பால் நிகழ்வின் ஆரம்பத்திலிருந்து இருந்தாலும், இறுதிப்பாகமான ‘விழ விழ எழுவோம்’ என்ற அங்கத்தில் தனிப்பொறுப்பேற்று, நாட்டியத்தில் தனது தனித்துவத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார். ஒரு வெறுமைக்குள் சிக்கித் தவிக்கும் எம்முடைய இன்றைய இயலாமை நிலையையும். அதிலிருந்து மீளத்துடிக்கும் துடிப்பையும் ஒரு சித்திரம் போல தனது முகபாவங்களிலும், நடிப்பிலும் வெளிப்படுத்தியிருந்தார். உளமார்ந்த பாராட்டுக்கள் யோகனா!
அடங்காப்பற்று நிகழ்விற்கு முழுமையாக நடனவடிவமைப்பு செய்தவர் சேரன் சிறிபாலன் அவர்கள். நேர்த்தியாகக் கதையை நகர்த்தக்கூடியவாறு நடனவடிவமைப்பைச் செய்திருந்தார். குறிப்பாக, போர்க்களத்தைச் சித்தரிக்க அமைக்கப்பட்டிருந்த நடனம் மிகவும் சிறப்பாக இருந்தது. நாட்டியக்காரர்கள் அதை வெளிப்படுத்திய விதம், பார்வையாளர்களுக்கு ஆக்ரோசமான உணர்வை நிச்சயம் கொடுத்திருக்கும். அவை தவிர, புஸ்பாஞ்சலியும் இறுதிப்பாகமும் நடனவடிவைப்பின் சிறப்பை எடுத்துக்காட்டும் சான்றுகளாக இருந்தன.நாட்டிய நாடகத்தின் பாடல்கள், எழுத்து சிந்து சேரன். ‘வென்றவன் வரலாற்றை எழுதுகின்றான்’ என்ற உத்வேகத்தோடு தொடங்குகின்றது அவருடைய எழுத்து. உணர்வுகளை சொற்களில் கொட்டி வெளிப்படுத்திய அவருடைய எழுத்துக்கள் தனித்துவமானவை. கதையோட்டத்தை நகர்த்திச்செல்லப் பின்னணிக் குரல் வழங்கிய திரு சிறிபாலன், சஞ்சயன் குலசேகரம் இருவரும் சிறப்பான உச்சரிப்புடன் உணர்வுகைளயும் வேறுபடுத்திக் காட்டியிருந்தனர்.
பின்னணி வாத்தியக் கலைஞர்களின் இசைக்கோர்ப்பு அற்புதமாக இருந்தது. கணீர்க்குரலில் ஜதி சொன்ன ஜனகன், கிரிஸன், சேகரம், சுரேஸ் சிதம்பரம் ஆகியோர் நாட்டியத்திற்குப் பக்கபலமாக இருந்தனர். பின்னணிப்பாடல்களைப் பாடிய பாரத் மோகன் அவர்களது குரல்வளம் இனிமையாக மட்டுமல்ல, உணர்வுகளின் கதம்பமாகவும் இருந்தது. குறிப்பாக ‘அன்னை மண்ணை இழந்திட மாட்டோம் ……’ என ஏக்கத்துடன் அவர் பாடியது மெய்சிலிர்க்க வைத்ததுடன் எம் அன்னை மண்ணை ஒருமுறை கண் முன்னே கொண்டுவந்தது. ஏதோ ஒரு இனம்புரியாத ஏக்கம் அந்தப்பாடலில் இருந்தது. ஒரு தேர்ச்சி பெற்ற வயலின் கலைஞராக திரு நாராயணதாஸ் கோபிதாஸ் அவர்களின் வயலின் இசை, பல இடங்களில் அரங்கத்தைக் கட்டிப்போட்டது. துக்கத்தை வெளிப்படுத்திய சந்தர்ப்பங்களில் எல்லாம் வயலின் தனித்துவமாக இருந்தது. இசை தனித்து நின்று உணர்வைக்கொடுத்தது.
நாட்டியத்தின் களச்சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடைவடிமைப்புச் செய்யப்பட்டிருந்தது. வடிவமைந்திருந்தவர் சேரன் சிறிபாலன். அந்த வடிவைப்பிற்கு ஏற்ப, எந்தவிதமான சன்மானமும் வாங்காமல், நன்கொடையாக வழங்கியிருந்தார் Fashion Mart Toongabbie உரிமையாளர் மயூரன் தில்லைநாதன் அவர்கள். மொத்தமாக ஏழுபேர் கொண்ட குழுதான் நாட்டிய நாடகத்தை நகா்த்திக்கொண்டிருந்ததால், சூழலுக்கும் கதாபாத்திரங்களுக்கும் ஏற்ப உடையிலும், தோற்றத்திலும் மாற்றங்களைச் செய்யாதது சில இடங்களில் உறுத்தலாக இருந்தது. குறிப்பாக, காக்கை வன்னியன் பண்டார வன்னியனை வஞ்சகமாகக் கூட்டிக்சென்று, கொலை செய்யக்கொடுக்கும்போது, முன்னர் பண்டார வன்னியனுடன் நின்று வெள்ளையருக்கு எதிராகப் போர்புரிந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள், உடையிலோ தோற்றத்திலோ எந்தவிதமான மாறுபாடும் செய்யாமல் அப்படியே வந்து பண்டார வன்னியனைக் கொன்றது ஏற்புடையதாக இருக்கவில்லை. அது பண்டார வன்னியனுடன் நின்றதாகச் சொல்லப்பட்ட தமிழர் எல்லோரும் காக்கை வன்னியனுடன் சேர்ந்து நின்று பண்டார வன்னியனைக் கொலை செய்ததைப்போன்ற ஒரு வரலாற்றுப் பிறழ்வைக் காட்சிப்படுத்தியிருந்தது. இது கண்டிப்பாகத் தவிர்க்கபட்டிருக்க வேண்டும்.
கதையோட்டத்திற்கு ஏற்றவாறு ஆங்கிலத்திலும் பின்னணிக் குரல் கொடுத்தது நிகழ்விற்கு மேலும் சிறப்பைக் கொடுத்தது. வேற்று மொழியாளர்களுக்கு மட்டுமன்றி, எமது இளைய தலைமுறையும் எம்முடைய வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. நிகழ்வின் மூலம் சேகரிக்கப்படும் நிதி யாருக்கானது என்பதைக் காட்டக்கூடியவகையில், பயனாளர்களின் வாக்குமூலம் தாங்கிய பத்து நிமிடக் காணொளி போட்டுக் காண்பிக்கப்பட்டது. மனதை நெருடிய அந்தக் காணொளி, நிகழ்வின் நோக்கத்தை எடுத்துக்காட்டிய ஒரு சிறப்பான சான்று. மொத்தத்தில் ஒரு கூட்டுமுயற்சியாக, நீண்டநாள் உழைப்பைக்கொடுத்து ரசனா நடனப்பள்ளி நடத்திய அடங்காப்பற்றின் இலக்கில் தெளிவிருந்தது, நடிப்பில் நேர்த்தியிருந்தது.
தாயகமக்களின் மேம்பாட்டுக்கான நிதிசேகரிப்பு என்ற பொதுப்படையான அறிவிப்பைக்கொண்ட ஒரு நிகழ்வைப்போல இல்லாமல், ஆரம்பத்தில் கூறியதைப்போல தெளிவான இலக்குடன் செய்யப்பட்ட நிகழ்வு என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் நிகழ்வு நிறைவுசெய்யப்பட்டது. மூன்றுமாதத்திற்கு மேலாக கொடுக்கப்பட்ட கடின உழைப்பின் விளைவாக, நடாத்தப்பட்ட இந்த நிகழ்வின் மூலம் சேகரிக்கபட்ட நிதி $75,942 Patchwork தலைவர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. காசோலையை நிகழ்வின் பிரதான அனுசரணையாளரான Excellent Jewellery உரிமையாளர் திரு சௌந்தர் அவர்கள் Patchwork தலைவர் அவர்களிடம் வழங்கினார். எதற்காக இந்த நிகழ்வு நடாத்தப்பட்டதோ அதை தெளிவாக நிறைவேற்றிய அந்த வெளிப்படைத்தன்மை நிகழ்வின் பிரதான சிறப்பம்சம்.
துணிந்து எழு, நிமிர்ந்து நில், தடையுடை, தொடர்ந்து செல், அண்ணன் காட்டிய வழியில்…..என்று சொன்ன அடங்காப்பற்று தமிழரின் அடங்காப்பற்றை மீண்டும் ஒருமுறை புடம்போட்டுக் காட்டியிருக்கின்றது. ரசனா நடனப்பள்ளிக்கும், ஒத்துழைப்புக் கொடுத்துப் பயணித்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இதுபோன்ற இலக்கில் தெளிவான, நிகழ்வில் நேர்த்தியான, செயற்பாட்டில் வெளிப்படையான நிகழ்வுகளுக்கு மக்கள் மத்தியில் முழுமையான ஆதரவு எப்போதும் உண்டு. எல்லாவற்றையும் இழந்து ஒரு வெறுமை நிலைக்குள் தள்ளபட்டிருக்கும் இன்றைய சூழலில், தாம் செய்கின்ற உதவிகள், நன்கொடைகள் முழுமையாக தாயகத்து உறவுகளுக்குச் சென்றடையுமா? என்பது புலம்பெயர் தமிழர்களிடம் உள்ள கேள்வி. அந்த ஆதங்கத்தைத் தகர்த்து, அவர்களுடைய நம்பிக்கையைக் கட்டி எழுப்பக்கூடியவகையில், நிகழ்வின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியை அதற்குப் பொறுப்பானவர்களிடம் கையளித்து, அவ்வாறு கையளிக்கப்படும் நிதி எப்படி? யாருக்காகச் செலவு செய்யப்படுகின்றது என்பதையும் தெளிவாகக் காண்பித்த இந்த நிகழ்வின் வெளிப்படைத்தன்மை பராட்டுக்குரியது.
இவ்வாறான நிகழ்வுகளை வரவேற்க மக்கள் தயாராகக் காத்திருக்கின்றார்கள். வாழ்வாதாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தாயகத்து உறவுகளுக்கு உதவிகளை வழங்கத் தயாராகவிருக்கும் புலம்பெயர் மக்களுக்கிடையேயான நம்பிக்கையைக் கட்டி எழுப்பி, உதவித்திட்டங்களை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பதற்கான சிறந்த வழிகாட்டலை வழங்கிய இந்நிகழ்வு ஒரு முன்னுதாரணம். தாயக மக்களுக்காகச் செய்யப்படும் எந்த நிகழ்வும் இப்படியான வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தால் ஒரு மாற்றம் நிச்சயம் நிகழும்.
இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெற அனுசரணையாளர்களும் மக்களும் தங்களுடைய முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.
சாந்தினி – சிட்னி (ஈழமுரசு -2013 ஐப்பசி மாத இதழிலிருந்து)