தளராத உறுதியுடன் வரலாற்றில் வெளிச்சத்தை தேடி……. தென் ஆசியவியல் மையத்தால் சிட்னியில் 14-09-2013 அன்று ஈழத்தமிழர் வரலாற்று ஆவண கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரத்பீல்ட் நகர மண்டபத்தில் நடைபெற்ற இம்முக்கிய நிகழ்விற்காக, யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி. சிவநாதன் வருகைதந்திருந்தார்.
தளராத உறுதியுடன் வரலாற்றில் வெளிச்சத்தை தேடி……. தென் ஆசியவியல் மையத்தால் சிட்னியில் 14-09-2013 அன்று ஈழத்தமிழர் வரலாற்று ஆவண கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரத்பீல்ட் நகர மண்டபத்தில் நடைபெற்ற இம்முக்கிய நிகழ்விற்காகஇ யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி. சிவநாதன் வருகைதந்திருந்தார். அத்தோடு கிளிநொச்சி லிபரா நூலக ஒருங்கிணைப்பாளர் வண. பிதா லெபோன் சுதன் ஜேசுதாசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
பேராசிரியர் குணசிங்கம் அவர்கள், நீண்டகாலமாக ஈழத்தமிழர்களின் வரலாறு தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துவருபவர். ‘”Sri Lankan Tamil Nationalism: A Study of its Origins” என்ற நூலையும் Tamils in Sri Lanka: A Comprehensive History (300 BC – 2000 AD) என்ற நூலையும் The Tamil Eelam Liberation Struggle (1948 – 2009) என்ற நூலையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியிட்டவர். அன்றைய நிகழ்வு அவரது இன்னொரு வேலைத்திட்டத்தின் நிறைவுநாளாக இருந்தது. அவரால் நான்கு வருடங்களாக பல நாடுகளுக்கு சென்று சேகரிக்கப்பட்ட, ஈழத்தமிழர் தொடர்பான பல்வேறு ஆவணங்களை, நவீன தொழிநுட்பத்தில் டிஜிட்டலைஸ் செய்து தமிழர் தாயகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு கொடுப்பதே, அன்றைய நாளின் முக்கியவிடயமாகவிருந்தது. இதன் பிரதி ஒன்று கான்பரா பல்கலைக்கழகத்திற்கும் கொடுக்கப்படவிருக்கின்றது.
முக்கியமாக இந்தியாவின் கோவா, போர்த்துக்கல், கொலண்ட், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று ஈழத்தமிழர்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களை பேராசிரியர் குணசிங்கம் சேகரித்து இருக்கிறார். இவை 1200 microfilm சுருள்களிலும் 5400 இற்கும் மேற்பட்ட microfiches களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கையால் வரையப்பட்ட18000000 A4 அளவு புராதன இலங்கை வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். முக்கியமான ஆவணங்களை நீண்டகாலத்திற்கு சேகரித்துவைப்பதற்கே microfilm பயன்படுத்தப்பட்டுவருகின்றது. உலகத்தின் பலநாடுகளுக்கும் சென்று திரட்டிய 120 000 டொலர்களை பயன்படுத்திஇ இவ்வரலாற்று ஆவணங்களை பிரதிசெய்து மலேசிய பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பு செய்திருக்கிறார். மலேசிய பல்கலைக்கழகம் அன்பளிப்பாக 30000 டொலர்களை இவருக்கு வழங்கியுள்ளது.
இத்தகைய ஆவணங்களை டிஜிட்டலைஸ் செய்தால் தாயகத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு கொடுக்கலாம் என்பதால் அதற்கான பணியை ஆரம்பித்தார். அதற்கு 50000 டொலர்கள் செலவாகும் என கணிப்பிடப்பட்டது. அதற்கான பணத்தை சேர்ப்பதற்கு முன்னரே, பணிகளை நிறைவுசெய்து யாழ் பல்கலைக்கழககலைப்பீடாதிபதியை வரவழைத்து, அவரிடம் பிரதியை அன்றைய தினமே கையளித்து, மூலப்பிரதியை தமிழ்ச்செயற்பாட்டாளரான சஞ்சயன் அவர்களிடமும், உத்தியோகபூர்வமாக கையளித்து அன்றையதினம் அப்பணியை நிறைவுசெய்தார்.
நிகழ்வின் இறுதியில் பேசும்போபோது, தான் இப்போது வானத்தில் பறப்பது போல சுமையை இறக்கிவைத்துவிட்டதாக உணர்வதாக மனம் திறக்கின்றார் பேராசிரியர் குணசிங்கம் அவர்கள். நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பேராசிரியர் சிவநாதன், இத்தகைய வரலாற்றுப்பொக்கிசம் தமக்கு கிடைத்தமை பெரியபேறு என்றார். தமிழர்களின் வெளிச்சத்திற்கு வராத வரலாறுகள் விரைவில் வெளிவரும் காலம் வரும் என நம்பிக்கை வெளியிட்டார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த, கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவருகின்ற லிபாரா நூலகத்தின் ஒருங்கிணைப்பாளர் வண. பிதா ஜேசுதாசன் தனதுரையில் தமிழ்மொழிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், பேராசிரியர் குணசிங்கம் அவர்கள் போன்று இன்னும் பலர் உருவாகவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
ஆனால் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கு 100 பேர் அளவில் மட்டுமே பங்குகொண்டிருந்தமை கவலைதருவதாகவிருந்தது. பலருக்கு இந்நிகழ்வு நடைபெற்றது தெரிந்திருக்கவில்லை. தாயகத்திலிருந்து இதன் முக்கியத்துவம் கருதி இரண்டு முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தார்கள். எது எப்படியிருந்தபோதிலும் விடாமுயற்சியுடன் அடுத்தபணியை ஆரம்பித்துவிட்டார் பேராசிரியர் குணசிங்கம் அவர்கள். உலகத்தமிழர்களின் வரலாறு பற்றி பதிவு செய்யும் பெரியபணியில், தனது பயணத்தை தொடங்கிவிட்டார். இவரது அடுத்த வேலைத்திட்டம் இதுதான். இப்பொறுப்பினை பழ. நெடுமாறன் அவர்களே அவருக்கு கொடுத்துள்ளார். ஆம் விடுதலையை நேசிப்பவர்கள் ஓடிக்கொண்டேயிருப்பார்கள் இலக்கையடையும்வரை.
(ஈழமுரசு-ஐப்பசி இதழிலிருந்து)