Formula One எனப்படும் கார் ஓட்டப் பந்தய இரசிகர்களுக்கு கடந்த ஆண்டு சோகமானதகவே நிறைவுபெற்றது. ஆம். கார் ஓட்டப்பந்தயத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கல் சூமேக்கர் (Michael Schumacher) தலையில் பலத்த அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். பலவிதமான கார் ஓட்டப்பந்தயங்கள் உலகில் நடக்கின்றபோதும் அதிக விறுவிறுப்பானதும் அதிகளவு மக்களால் இரசிக்கப்படுவதாகவும் அதிகளவு ஆபத்தானதாகவுள்ள விளையாட்டுத்தான் இந்த Formula One. இந்த வேகப்பந்தயத்தில் 1994 முதல் 2004 வரையான பத்தாண்டுகளில் ஏழு முறைகள் வெற்றிவாகை சூடி தன்னிகரில்லாதவராகத் தன்னை நிலைநிறுத்திய பின்னர் 2006இல் பந்தயத்திலிருந்து ஓய்வு பெற்றார். உலகில் அதிஆபத்தான விளையாட்டாகக் கருதப்படும் கார்ப் பந்தயத்திலிருந்து ஓய்வுபெற்றுங்கூட பொழுதுபோக்காக மேற்கொண்ட பனிச்சறுக்கு விளையாட்டில் உயிராபத்தை எதிர்கொள்ளுமளவு படுகாயமடைந்துள்ளார்.
வாகனப் பந்தயங்கள் எப்போதும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் மக்களால் இரசிக்கப்படுபவை. பண்டைக்காலத் தேர்ப் பந்தயங்களிலிருந்து இன்றுவரை மானுடர்களிடம் காணப்படும் இந்த விறுவிறுப் பந்தயங்கள் மீதான பிரியம் குறைந்தபாடில்லை. எவ்வளவோ உயிரிழப்புக்களைச் சந்தித்தும்கூட அதன்மீதான வெறித்தனமான ஆர்வம் போட்டியாளருக்கோ பார்வையாளருக்கோ குறையவில்லை. அதிவேகப் பந்தயமான Formula One இல் மட்டுமே இதுவரை 27 போட்டியாளர்கள் மாண்டுள்ளார்கள். எல்லாப் போட்டிகளையும் கருத்திற்கொண்டால் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்களும் நூற்றுக்கணக்கான பணியாளர்களும் பார்வையாளர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். நவீன வரலாற்றில் மிக மோசமான வேகக் கார்ப்பந்தய விபத்தாக கருதபப்படும் 1955இல் நிகழ்ந்த 24Hours of Le Mans இல் ஒரு போட்டியாளரும் 80 பார்வையாளர்களும் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Formula One இல் பங்குபற்றும் போட்டியாளர்களின் உயிராபத்துக்கான வாய்ப்புநிலை மிகமிக அதிகமானதாகும். ஒவ்வொருவருமே தமதுயிரைப் பணயம் வைத்துதான் இப்போட்டியில் பங்குபற்றுகின்றனர். சூமேக்கரின் புகழ்கூட அவர் எடுத்த திகில் நிறைந்த ‘ உயிராபத்தான முயல்வுகளின் வழி வந்தவையே. பந்தய உலகில் அவரை ஒரு கிறுக்கனாகவே சிலர் கருதுகின்றனர். வெற்றிக்காக எதையுமே ‘தனதுயிரை மட்டுமல்ல போட்டியாளரின் உயிரையும் கூட ஆபத்துக்குள்ளாக்கத் தயங்காதவர் என்ற கருத்து அவர் குறித்து உண்டு. திருப்பங்களிலும், முடிவிடங்களிலும் அவரின் உயிராபத்தான முயல்வுகள் மயிர்கூச்செறியச் செய்பவை. குறிப்பாக மிக ஆபத்தான சீரற்ற காலநிலையைத் தனக்குச் சாதகமாக்கி வெற்றியைக் கைக்கொள்ளும் அவரது கிறுக்குத்தனம் பிரசித்தமானதும் கடுமையாக விமர்சிக்கப்படுவதும்கூட.
இவ்வாறான திகிலான, சுவாரசியமான, விறுவிறுப்பான கார் விரைவுப்பந்தய உலகின் உண்மைக் கதையொன்றை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படமே RUSH. Formula One பந்தயத்தில் எழுபதுகளில் நிகழ்ந்த இரண்டு ஆளுமைகளுக்கடையிலான தொடர் மனப்போரே இந்தத் திரைப்படம். பிரித்தானியாவைச் சேர்ந்த James Hunt ஒஸ்ரியாவைச் சேர்ந்த Niki Lauda ஆகிய இருவருக்குமிடையிலான போட்டியும் அவர்களின் மனப்போராட்டமும் அதைச்சுற்றிய அக்காலகட்ட போட்டிகளுமே கதைக்களம்.
இவர்களில் ஜேம்ஸ் நெடிய, கவர்ச்சியான உடல்வாகுடன் காணப்படுவார். எப்போதும் விளையாட்டுத்தனமாகவும் உல்லாசமாகவும் காணப்படுவதோடு வாழ்க்கையென்பது அவ்வப்போதே மகிழ்ச்சியாக வாழ்வதற்குத்தான் என்ற நிலைப்பாட்டோடு இருப்பவர். பெண்களிடத்தில் அதிக கவனத்தைப் பெறுபவராகவும் எவருடனும் நிரந்தர உறவின்றி எல்லாப்பெண்களோடும் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பவராகவும் அவரது வாழ்க்கைப் பாத்திரம் அமைந்துள்ளது. இப்பாத்திரத்தில் நடித்தவர் அவுஸ்திரேலிய நடிகர் Chris Hemsworth.
நிக்கியின் பாத்திரமோ ஜேம்சுக்கு மாறானது. அவருக்கு பந்தயக் கார்களும் அவற்றின் பொறியமைப்பும் இயங்குதன்மை பற்றியும் அதிகம் தெரியும். வாழ்க்கையை ஒரு குறிக்கோளோடு திட்டமிட்டு நகர்த்திக் கொண்டிருப்பவர். எதையும் திட்டமிட்டு நிதானமாகச் செய்து பழக்கப்பட்டவர். விளையாட்டுத்தனம், உல்லாசம் என்பவற்றை விட்டு கூடிய பொறுப்புணர்வோடு எதையும் அணுகுபவர். கார்ப்பந்தயத்தில் முன்னணியில் இருக்கும்போதே பெண்ணொருத்தியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்.
இவ்வாறு இருவேறுபட்ட துருவங்களுக்கிடையில் பந்தய உலகின் முன்னிலைக்காக நடைபெறும் போட்டியை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இரண்டு மணிநேரத்தில் சொல்கிறது RUSH திரைப்படம். இறுதியில் உண்மையான நிக்கின் சாட்சியத்தோடு நெகிழ்ச்சியாக நிறைவடைகின்றது. திரைப்படக்காட்சிகள் எழுபதுகளின் பந்தயச் சூழலை மிகக்கச்சிதமாகக் கொண்டுவந்துள்ளதாக அக்காலத்திலே குறித்த பந்தயங்களைக் கண்டு இரசித்தவர்கள் இப்படம் குறித்துத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்கள். போட்டியாளரின் உடைகள், கார்களின் வடிவமைப்பு, பந்தயத் திடல்கள் என்பன அச்சொட்டாக அக்காலத்தைப் பிரதிபலிப்பன. பந்தயக் காட்சிகளில் காட்டப்படும் அந்த விறுவிறுப்பு, வேகம் பார்வையாளரை இருக்கை நுனிக்குக் கொண்டு வருகின்றன.
உலகின் அதிவேக விரைவுக் கார்ப்பந்தயத்தை மையமாக வைத்துள்ளதால் அப்பந்தயக் காட்சிகளை வைத்து நிரப்பி படத்தை விறுவிறுப்பாக்கி விடலாமென்று படக்குழுவினர் அற்பத்தனமாக நினைக்கவில்லை. மாறாக மையப்பாத்திரங்களின் வாழ்க்கையை மிக அழகாக உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறார்கள். முழுப்படத்திலும் வரும் பந்தயக் காட்சிகள் மிகமிகச் சொற்பமே. அதிலும், பலசந்தர்ப்பங்களில் போட்டியையே காட்டாமல், அந்தச் சுற்றில் இவர் வென்றார், அந்தச் சுற்றில் அவர் வென்றார் என்ற பாணியில் தரவுகளை மட்டும் தந்துகொண்டு பந்தய வெற்றி விபரங்களை வேகமாகக் கடந்து செல்கிறார்கள். படத்தின் அடிநாதமாக இருவருக்கிடையிலான மனப்போராட்டமும், போட்டிக்கு இடையே இளையோடும் அழகான மெல்லிய நட்பும் மிக அழுத்தமாகச் சொல்லப்படுகின்றது.
ஒரு போட்டியில் மழைபெய்த ஈரத்துடன் போட்டி நடந்தால் எல்லோருக்கும் அது ஆபத்து, எனவே போட்டியை நிறுத்தும்படி நிக்கி ஒரு வேண்டுகோளை வைக்க, ‘நீ உன்னை யாராவது வென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் இப்படிச் சொல்கிறாய்’ என்று நிக்கியின் தன்மானத்தைச் சீண்டுகிறார் ஜேம்ஸ். இறுதியில் ஏனைய போட்டியாளர்களின் விருப்போடு மிக ஆபத்தான அப்போட்டி நடக்கின்றது. அதில் மிகமோசமான உயிராபத்தான ஒரு விபத்தைச் சந்தித்துப் படுக்கையில் வீழ்கிறார் நிக்கி. முகம் உட்பட உடலின் கணிசமான பாகங்கள் எரிந்த நிலையில் உயிர் பிழைப்பாரா என்ற சந்தேகத்தின் மத்தியில் பிழைக்கும் நிக்கி, அனைவரும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சியை அனைவருக்கும் அளிக்கிறார். தனது ஆசை மனைவியின் எதிர்ப்பையும் மீறி கார்ப்பந்தயத்தில் கலந்துகொள்கிறார். காயமடைந்து வெறும் ஆறு வாரங்களிலேயே அதிவேக கார்ப்பந்தயத்தில் அவர் கலந்துகொண்டார். எரிந்த முகத்தில் தலைக்கவசம் அணியக்கூட முடியாநிலையில் கண்பார்வை முழுமையான வீச்சோடு இல்லா நிலையில் வீம்பாகக் கலந்துகொள்ளும் நிக்கி பின்வந்த போட்டிகளில் தான் இன்னும் கார்ப்பந்தயத்தில் நாயகன்தான் என்பதை நிரூபிக்கின்றார்.
ஒரு பந்தய வீரனின் மனப்போராட்டத்தை மிக அருமையாக வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. இதே நிக்கி ஒரு கட்டத்தில் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போதே தனது மனைவிக்காக அப்பந்தயத்தில் இருந்து மட்டுமன்றி, நிரந்தரமாகவே கார்ப்பந்தயத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். உயிராபத்தான காலநிலைகளில் வீம்புக்காகவும், போட்டி நடத்துனர்களினதும், இரசிகர்களினதும் அழுத்தங்களுக்காகவும் உயிரைப் பணயம் வைத்து போட்டிகளில் பங்குபற்றுவது முட்டாள் தனமானது என்பது நிக்கியின் கருத்து.
இதேவிடயத்தில் ஜேம்சின் கருத்து வேறானது. நிக்கி ஓய்வுபெற்ற பின்னர் ஒருமுறை அவரைச் சந்திக்கையில் ‘உயிருக்காக நீ போட்டியிலிருந்து ஒதுங்கும்போது விளையாட்டைக் கொல்கிறாய்’ என்று ஜேம்ஸ் சொல்லிச் செல்வார். ஜேம்ஸ் தனது 45ஆவது வயதில் மாரடைப்பினால் சாவடைந்தார். உண்மையான நிக்கியின் வாக்குமூலத்தோடு திரைப்படம் நிறைவடைகின்றது.
-காந்தன் (ஈழமுரசு -2014 தைமாத இதழிலிருந்து)