திரைப்படங்களைப் பொதுவாக அதன் கதைக்களத்தினையும் காட்சியமைப்பையும் வைத்து வகைபிரித்து வைப்பார்கள். காதல், நகைச்சுவை, திகில் போன்ற வகைகளில் திரைப்படங்களைக் குறிப்பிடுவார்கள்.பொதுவாகவே உலகத்திரைப்படங்கள் தனியொரு வகையினதாகவோ அல்லது ஓரிரு வகைகள் பொருந்தக் கூடியதாகவோ அமைகின்றன.
தமிழ்த் திரையுலகில் இவ்வாறு ஒவ்வொரு படத்தையும் வகைபிரித்துச் சொல்வது மிகமிகக் கடினம் எனுமளவுக்குத்தான் படங்கள் உள்ளன. பெரும்பாலான படங்கள் ஒரேமாதிரியான அடைப்பலகைக்குள் அடங்குமாற்போன்றே உள்ளன. காதல், நகைச்சுவை, நாலு சண்டை, நாலு பாட்டு என்ற சமன்பாட்டின்படியே பெருமளவு படங்கள் வந்துவிடும். ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் அந்தக் கதைக்களனை ஒட்டியே பத்துப் பதினைந்து படங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும். அவ்வப்போது ஒளிக்கீற்றுகள் தோன்றினாலும்கூட எண்ணிக்கையளவில் பார்த்தால் பெருமளவில் அரைத்த மாவையே அரைக்கும் வகையில்தான் படங்கள் வெளிவந்துகொண்டிருந்தன. தமிழ்ச்சினிமா மலடுதட்டிவிட்டது போன்ற தோற்றப்பாடு தென்படுமளவுக்கே கடந்த காலம் இருந்தது.
ஆனால் அண்மைக்காலத்தில் புதியவர்கள் பலரது வருகையால் புத்துணர்ச்சியுடன் தமிழ்ச்சினிமா நடைபோடுகின்றது. வெளிவரும் படங்களுள் இரசிக்கத்தக்கதாக வெளிவரும் படங்களின் வீதம் சடுதியாக அதிகரித்துள்ளது போன்றே தோன்றுகின்றது. கடந்த ஓராண்டிற்குள் வந்த படங்களென்று பார்த்தால், பீசா, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம், சூதுகவ்வும், மூடர்கூடம், விடியுமுன் என்று எனக்குப் பிடித்த வகையில் நிறையப் படங்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு படமுமே தமிழ்ச்சினிமா குறித்து எனக்கிருக்கும் உருவகத்தை விட்டு வெளியேதான் பொருந்துகின்றன. அவ்வகையில் அண்மையில் வெளிவந்த ‘வில்லா’ திரைப்படமும் அமைகின்றது.
வில்லாவைப் பார்க்க வேண்டுமென்று என்னைத் தூண்டியது, அது ‘பீசா 2’ என்று விளம்பரப்படுத்தப்பட்டதுதான். முதலில் பீசா திரைப்படத்தைப்பற்றி நான் கேள்விப்பட்டது மெல்பேணில் நிகழ்ந்த ஒரு தமிழ்ப்பட்டிமன்ற நிகழ்ச்சியில். ஆணொருவனும் பெண்ணொருத்தியும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தை பீசா திரைப்படம் ஊக்குவிக்கிக்கின்றது என்று அத்திரைப்படத்தின்மீது ஒரு விமர்சனம் சொல்லப்பட்ட அந்நிகழ்வில் எனக்கு பீசா திரைப்படம் மீதான ஆர்வம் பற்றிக் கொண்டது. இப்போது வில்லா திரைப்படம் பீசா 2 என்ற அடைமொழியோடு வெளிவந்ததால் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டுமென்ற எனது பட்டியலில் வில்லா சேர்ந்து கொண்டது. அவ்வகையில் பீசாவை முன்னொட்டாக வைத்த தயாரிப்பாளரின் எண்ணம் வெற்றியடைந்துள்ளதென்றே சொல்ல வேண்டும்.
ஒரு திரைப்படம் வெற்றியடைந்தால் அதை மையமாக வைத்து அதன் தொடர்ச்சிகள், சிலவேளை முதற்படத்திற்கான முன்கதையேகூட அடுத்தடுத்து வெளியிடுவார்கள். இது அமெரிக்கத் திரைப்பட உலகத்திற்கூட இயல்பேதான். வெற்றியடைந்த அந்த பெயரைப்பயன்படுத்தி தொடர்ந்தும் வியாபாரம் செய்யும் தந்திரம். இங்கே வில்லாவிலும் அத்தந்திரம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பீசாவுக்கும் வில்லாவுக்குமுள்ள தொடர்பு இவற்றின் தயாரிப்பாளர் ஒருவரே என்பதுதான். மற்றுமொரு தொடர்பு இரண்டுமே திகிலான பேய்ப்படம் என்ற வகைக்குள் அடங்குவன என்பது.
படத்தில் நன்கு அறிந்த முகமென்றால் அது நாசரின் பாத்திரம் மட்டும்தான். அண்மையில் வெளிவந்த ‘சுட்ட கதை’ என்ற படத்திலும் தெரிந்த ஒரே முகமாக நாசரேதான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகன் அசோக் செல்வன் தாடியுடன்தான் படம்முழுவதும் வருகிறார். எழுத்தாளர் என்பதால் ஏற்கனவே தமிழ்ச்சமூக மனத்திரையில் உருவகப்படுத்தப்பட்டிருக்கும் உடையும் தாடியும் அவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது போலும். இதற்கு முன்பு ‘சூது கவ்வும்’ திரைப்படத்தில் கணிப்பொறியியலாளனாக வேலைபார்த்துவிட்டு கடத்தல் தொழில் இறங்கும் துணைப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கதைப்படி, நாயகி சஞ்சிதா ஷெட்டியும் நாயகனும் காதலித்து வருகிறார்கள். தானெழுதிய நாவலை வெளியிட முடியாமல் தவிக்கிறார் நாயகன். கோமாவிலிருந்த நாயகனின் தந்தை நாசர் இறந்துபோய்விட அவரின் சொத்துக்கள் ஒவ்வொன்றும் பறிபோய்க்கொண்டிருக்கிற நிலையில் நாயகனின் பெயரிலேயே பாண்டிச்சேரியில் ஒரு வீட்டை நாசர் எழுதி வைத்திருப்பது தெரிந்து அங்கே போகிறார் நாயகன். அதுதான் ‘வில்லா’. அங்கே தந்தை கீறி வைத்திருந்த ஓவியங்களின் அடிப்படையிலேயே எல்லா நிகழ்வுகளும் நிகழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார். அந்தத் தீய சக்தியை வெல்ல விடாமற்செய்ய ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கிறார் நாயகன்.
தான் செய்யும் காரியத்தால் அந்த ஓவியங்களின் படி நடந்துவரும் அசம்பாவிதங்கள் நிறுத்தப்படுமென்று நம்பி அதைச் செய்கிறார். ஆனால் உண்மையில் அவர் நினைத்தது நடந்ததா? அல்லது நாயகன் செய்கிற காரியம்கூட அந்த ஓவிய ஒழுங்கிற்குள் உட்பட்டுத்தான் நடந்ததா என்பதை திகிலான இறுதிக்காட்சியோடு இயக்குநர் விளக்குகிறார்.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற கணக்காக, வழமையான தமிழ்ச்சினிமாவின் அசட்டுத்தனங்கள் இல்லாத காரணத்தாலேயே சுமாரான படங்கள்கூட சிலவேளை பிடித்துப் போவதுண்டு. வில்லா அவ்வகைதானா என்றால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. காட்சியமைப்புக்களும் பின்னணி இசையும் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டிய அம்சங்கள். விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டிய திரைக்கதை தொய்ந்து போவதாகத் தோன்றுகிறது. இறுதிக் காட்சியில் வரும் திருப்பத்தைத் தவிர்த்துப் பார்த்தால் கதையோட்டத்தில் இருந்திருக்க வேண்டிய திகில் படத்துக்குரிய திகிலும் உயிரோட்டமும் காணாமற்போயுள்ளது போன்றே தோன்றுகின்றது.
எனினும் தற்காலத் தமிழ்ச்சினிமாவில் கட்டாயம் கவனிக்கப்பட வேண்டியதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதுமான பட்டியலில் வில்லா நிச்சயமாக இடம்பெறும். வணிகக் காரணத்துக்காக பீசா படப்பெயர் பயன்படுத்தப்பட்டதும் இப்படம் மீதான மறைநிலை விமர்சனத்துக்கான காரணமாக அமைந்துள்ளது. பீசாவின் தரத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஒட்டுமொத்தத் திரைப்படமாகப் பார்த்தால் பீசா தரத்தால் விஞ்சியே நிற்கின்றது. பீசாவின் இரண்டாம் பாகம் என்ற தொனியில் இப்படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பாளர் ஆசைப்பட்டதில் பணத்தை வேண்டுமானால் அள்ளியிருக்கலாம். ஆனால் பேயைக் காட்டியதோ இல்லையோ பேய்க்காட்டிய படமாக இரசிகர்களால் கருதப்படலாம்.
-செந்தோழன்-(ஈழமுரசு -2014 தைமாத இதழிலிருந்து)