இனப்படுகொலை: கூட்டமைப்பின் தயக்கம் – சிவில் சமூகம்

IMG_0013தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எந்தத் தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம்” இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது தமிழ் சிவில் சமூக அமைப்பு. தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தவும் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையைக் கோரவும் வட மாகாண சபைக்குத் தடை ஒன்றும் இல்லை என அந்த அமைப்பு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழர்கள் மீது நடத்தப்பட்டதும் நடத்தப்படுவதும் இன அழிப்பே என வட மாகாண சபையில், உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணையை பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இச்செயற்பாட்டை கூட்டமைப்பு உயர்பீடம் நியாயப்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் கல்விமான்கள், சட்டத்தரணிகள், சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டோரைக் கொண்ட தமிழ் சிவில் சமூக அமைப்பின் அறிக்கையானது தமிழ்க் கூட்டமைப்பின் இந்தத் தீர்மானத்துக்கும் அதன் வியாக்கியானங்களுக்கும் அடியாக விழுந்துள்ளது.

சிவில் சமூகம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானமொன்றை வட மாகாணசபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ – சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம்.

இனப்படுகொலை தொடர்பில் வட மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதன் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்துக்கள் வருமாறு:-

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட, தொடர்ந்தும் நடத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வட மாகாண சபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது. தேவைப்பட்டவிடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக் கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும் பொருட்டு எம்மால் பெறப்பட்டது.

1) ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான 1948 ஆம் ஆண்டு சமவாயம் இனப்படுகொலையைத் தடுப்பதையும், இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதையும் இலக்காக கொண்டது. இச்சமவாயமானது இனப்படுகொலை என்பதை ஒரு தேசிய இன அல்லது ஒரு மத குழுமத்தை முற்றாக அல்லது பகுதியாக அழித்தல் என வரைவிலக்கணப்படுத்துகிறது (இனப்படுகொலை சமவாயத்தின் 2 ஆம் உறுப்புரை). மேலும் இனப்படுகொலையானது மரபு சார் சர்வதேச சட்டத்தினால் எத்தகைய சந்தர்ப்பத்திலும் மீறப்படமுடியாத ஒரு விதியாக அடையாளங் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் ஒரு தேசிய அல்லது இனம் சார் குழும வகைக்குரியவர்கள் என்பது மறுத்துரைக்கப்பட முடியாதது.

2) சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உரோம் சட்டமானது இனப்படுகொலை (உறுப்புரை 6), போர்க்குற்றங்கள் (உறுப்புரை 8), மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (உறுப்புரை 7) ஆகிய மூன்றையும் குற்றங்களாக வரையறுத்துள்ளது. தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மற்றும் தொடர்ந்து நடத்தப்படும் கொடுமைகளை விசாரிக்கும் எந்தவொரு விசாரணையிலும் இனப்படுகொலை உட்பட மேற்குறித்த மூன்று வகையான குற்றங்களும் விசாரிக்கப்படுதல் அவசியமானதாகும். போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்கு மேலதிகமாக, இனப்படுகொலை பற்றியும் விசாரிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணைக் குழுவைக் கோரும் உரிமை தமிழர்களுக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கும் உண்டு.

இனப்படுகொலை தொடர்பிலான விசாரணையை நாம் கோருவதானது எமக்கெதிராக நடைபெற்ற சர்வதேச சட்டமீறல்கள் எல்லாவற்றையும் அடையாளப்படுத்தி அதனை விசாரிக்கும் முனைப்பினை உறுதிப்படுத்தும். மேலும் இனப்படுகொலையை விசாரிக்கக் கோருவதானது, ஏனைய குற்றங்களான போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு ஐ.நா. விசாரணைக் குழுவிற்குச் சிக்கல்களை ஏற்படுத்தாது. மேலும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் இனப்படுகொலை பற்றிக் குறிப்பிடப்படாமையோ அல்லது ‘இனப்படுகொலை’ என்ற பதத்தை உள்ளடக்காத ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2014 மார்ச் மாத தீர்மானத்தின் உள்ளடக்க வாசகங்களோ, ஐ.நா. விசாரணைக் குழுவானது இனப்படுகொலையை விசாரிப்பதற்குத் தடையாக இருக்க மாட்டாது.

3) தம்மீது நடத்தப்பட்ட, மற்றும் தொடர்ந்து நடாத்தப்படும் கொடூர குற்றங்கள், இனப்படுகொலை என்ற பரிமாணத்திற்குரியது என்பது குறித்த சட்ட ரீதியான கருத்துருவாக்கம் ஒன்றை செய்வதற்கு தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் உரித்துடையவர்கள். அவ்வாறான சட்ட ரீதியான ஒரு கருத்துருவாக்கத்தை செய்வதற்கு எமக்கு போதுமான, நியாயமான அடிப்படைகள் உண்டு. நடந்தது இனப்படுகொலை என்கிற சட்ட நிலைப்பாட்டை எடுத்தல் என்பது அடிப்படைகளற்ற மேம்போக்கான ஒரு முடிவு அன்று.

அவ்வாறே தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை தடுத்து அதிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் பொருட்டு சர்வதேச தலையீட்டை கோருவதற்கு உரிமையுடையவர்கள். இத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் சர்வதேச சட்டத்தினால் மனித உரிமைகளாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் இனப்படுகொலை தொடர்பான சமவாயத்தின் மூலமாக இனபடுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேசத்தின் கடப்பாடுகள் உருவாகின்றன. அண்மைக்காலமாக சர்வதேச சட்டததில் முகிழ்த்துவரும் பாதுகாப்பதற்கான கடப்பாடு எனும் கோட்பாட்டிலும் (Responsibility to Protect) இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேச சமூகத்தின் கடப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தம்மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர குற்றங்களை இனப்படுகொலையின் பாற்பட்டவை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தாமே அடையாளம் காணுதல் அது தொடர்பான விசாரணையின் பக்கச்சார்பர்ற தன்மைக்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்காது. எனவே, தம்மீது நிகழ்த்தப்பட்ட குற்றம், இனப்படுகொலையின் பாற்பட்டது என தமிழர்கள் அடையாளம் காணுமிடத்து, அது எவ்வகையிலும் ஐ.நா. விசாரணைகளைப் பாதிக்காது.

4) மேலும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதித்துவ சபைகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு உதாரணங்கள் உண்டு. அவற்றுள் சில:

அ) வடக்கு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையின் பாற்பட்டவை என ஈராக்கிய நாடாளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

ஆ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பாகிஸ்தான் நாடாளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

இ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பலஸ்தீன ஜனாதிபதி முகமட் அபாஸ் அவர்கள் 2014 செப்ரெம்பர் ஐ.நா. பொதுச்சபையில் ஆற்றிய உரையில் பதிவு செய்து இருந்தார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இரு தரப்புக்களாலும்மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை விசாரிப்பதற்காக ஓர் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்த வேளையிலேயே பலஸ்தீன ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபையில் இக்கருத்தை வெளிப்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஈ) சென்ற நூற்றாண்டின் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் உட்பட உலகின் பல்வேறு நாடாளுமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதன.

5). தமிழர்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டு தமிழர்களும் அவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தம்முடைய நிலைப்பாடுகளை தெளிவாக முன்வைக்க வேண்டும். தமது பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமென்பதற்காக அப்பிரச்சினைகள் சார்ந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் உரையாடல்களை தாமே முன்னெடுப்பதற்கும் அவற்றில் பங்கு கொள்வதற்குமான தார்மீக உரிமை தமிழர்களுக்கு உள்ளது. எனவே,

அ) தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தும்.

ஆ) இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரும்.

இ) இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானமொன்றை வட மாகாணசபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம்.

தமிழ் சிவில் சமூக அமையம், 
24.10.2014 

தமிழ் சிவில் சமுக அமையமானது 2010 இல் தோற்றுவிக்கப்பட்டு இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நூற்றிற்கு மேற்பட்ட சிவில் சமுக செயற்பாட்டாளர்களை கொண்டு இயங்கிவரும் அமைப்பாகும். இவ்வறிக்கை தொடர்பான மேலதிக கேள்விகளுக்கு:
வி. புவிதரன் (சட்டத்தரணி) (puvitharanv@gmail.com, 0777321650),

கு.குருபரன் (சட்டத்தரணி) (rkguruparan@gmail.com) அல்லது

வணபிதா எழில்ராஜன் (0771446663 elilrajan@gmail.com) ஆகியோரில் ஒருவரைத் தொடர்பு கொள்ளலாம்.

 

பின்னிணைப்பு:

இனப்படுகொலை தொடர்பில் கூட்டமைப்பின் அறிக்கை 21 – 10 – 2014 அன்று வடமாகாணசபையில் வெளியிடப்பட்டது அதன் விபரம் வருமாறு:

 

வடமாகாணசபையில், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணை ஒன்று தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் தீர்மானம் எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் கூட்டமைப்பின் உயர்மட்டம் 11 விடயங்களை சுட்டிக்காட்டி தனது விளக்கத்தினை அனுப்பி வைத்துள்ளது.

கடந்த மே மாதம் வடமாகாணசபையில் மேற்படி மாகாணசபை உறுப்பினர் தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஒரு திட்டமிடப்பட்ட இன அழிப்பு என சுட்டிக்காட்டி பிரேரணை ஒன்றினை முன்மொழிந்திருந்தார்.

எனினும் குறித்த பிரேரணை கூட்டமைப்பு சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளும், முயற்சிகளை மலினப்படுத்தும் என சுட்டிக்காட்டி கூட்டமைப்பின் உயர்மட்டம், மேற்படித் தீர்மானத்தை பிற்போட்டு வந்தது.

இந்நிலையில் நேற்றையதினம் கூட்டமைப்பு தனது முடிவினை வடமாகாசபைக்கு அனுப்பியிருக்கின்றது. இதில் 11 விடயங்களை கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருப்பதுடன் சட்ட ஆலோசகர்கள் மூலம், ஆராயப்பட்டே தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் கூறியிருக்கின்றது.

இந்நிலையில் குறித்த தீர்மானம் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனால் தாம் குழப்பமடைந்துள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

மேலும் இன அழிப்பு என்பதை உச்சரிக்க கூட மாகாணசபை தயங்குமானால், தன் பதவியை துறக்கும் நிலையில் தாம் இருப்பதாகவும் இன்றைய தினம் பத்திரிகையாளர்களுக்கு அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதேவேளை கூட்டமைப்பின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களாவன,

01 ‘இனப்படுகொலை’ என்ற சொல்லுக்கு சமூக, அரசியல், ரீதியிலான பல வரைவிலக்கணங்கள் இருந்த போதும் அதற்கான சட்ட வியாக்கியங்களானது இனப்படுகொலை சமவாயத்தின் 2ம் உறுப்புரையிலும், பொருத்தமான சந்தர்ப்பங்களில் மற்றைய சர்வதேச ஆவணங்களிலும் காணப்படுகின்றது.

02. இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை இந்த விரிவாக்கப்பட்ட சமூக அரசியல் வரைவிலக்கணங்களில் தாம் தெரிந்து கொள்ளும் ஒரு கூம்புக் கண்ணாடிக்கூடாக கண்டுகொள்ளும் உரித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும், தமிழ் மக்களுக்கும், இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும், அனைத்துலக சமுகத்தினருக்கும் உண்டு. இவ் உரிமையினை அடிக்கடி அவர்கள் உபயோகிப்பதுண்டு.

03. சர்வதேச குற்றங்களின் விசாரணை ஒன்றுக்கு பொருத்தமான வரைவிலக்கணம் எனப்படுவது இனப்படுகொலை சமவாயத்தின் ஏனைய சர்வதேச ஆவணங்களிலும் காணப்படும் வரைவிலக்கணம் மட்டுமேயாகும்.

04. 1948ம் ஆண்டின் இனப்படுகொலை சமவாயத்தின் 2ம் உறுப்புரையில் காணப்படும் செய்திகள் பல தசாப்பதங்களாக இலங்கை அரசின் செயற்பாட்டாளர்களால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்டு வருவது விவாதத்திற்கு அப்பாற்பட்ட உன்மையாகும்.

05. ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர்கள் தமது அறிக்கையில் இனப்படுகொலை என்ற குற்றம் இழைக்கப்பட்டதற்கான நியாயமான சாட்சிகள் இருப்பதாக சொல்லவில்லை. தமக்கு கொடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஆணைக்குள் இப்படியாக குற்றம் புரிவதற்கான விசேட குற்றமென செயற்றிட்ட எண்ணம் இருந்ததற்கான சான்று இல்லாதது இதற்கான காரணமாக இருக்கலாம்.

06. யுத்தக் குற்றங்களும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களும் இரு சாராரும் இழைத்தமைக்கான நியாயமான சான்று இருப்பதாக இந்த நிபுணர்குழு தீர்மானித்திருக்கின்றது. இதில் அரசாங்க செயற்பாட்டாளர்கள் இழைத்ததாக கூறப்படும் அழிப்பு மற்றும் துன்புறுத்தல் ஆகிய மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களும் அடங்கும்.

07. சர்வதேச குற்றங்களில் உயர்ந்த, தாழ்ந்த படிநிலைகள் இல்லையென்பது எமது நிலைப்பாடாகும். யுத்தக் குற்றத்தாலும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பும் பொறுப்புப்கூறுதலும், இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டோருக்கான பாதுகாப்பும் பொறுப்புக்கூறலும் எவ்விதத்திலும் குறைவுபட்டதல்ல.

08. நிபுணர்குழுவிற்கு கொடுக்கப்பட்ட ஆணையை விட ohchr யினது விசாரணை விரிவானதும் பொருத்தமான விதத்தில் யுத்தக்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை சம்மந்தமான விசாரணை நடத்தும் தேவைப்பாட்டை உணர்த்தியுள்ளது.

09. தற்போது (ohchr) நடத்தும் விசாரணையில் கருத்தில் எடுக்கப்படும் சட்டம் மற்றும் சான்றுகள் பற்றிய அறிவிப்புக்கள் அல்லது தீர்மானங்கள் வடமாகமாகாணசபையோ வேறு அரசியல் கட்டமைப்போ செய்வது பொருத்தமற்ற செயலாகும் என நாம் கருதுகின்றோம்.

10. இந்த சர்வதேச விசாரணையின் சுயாதீன செயற்பாட்டையும் அதற்கான மதிப்பையும் இப்படியான தீர்மானங்கள் பாதிக்கக் கூடும்.

11. இந்த சர்வதேச விசாரணைக்கு தமது சாட்சியங்களையும், சமர்ப்பணங்களையும், முறையான விதிகள் மூலம் மேற்கொள்ளுமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு பொதுமக்களை தொடர்ந்தும் ஊக்குவிக்கும்.

மேலதிக செய்திகள் இணைப்பு

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/10/141020_npc_sivajilingam_genocide

சுமந்திரன் விளக்கம்

Leave a Reply