அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2015” நினைவு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை 19 – 04 – 2015 அன்று எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
மெல்பேணில் ஹைடில்பேர்க் இல் அமைந்துள்ள சென்ற்.ஜோன்ஸ் நிகழ்ச்சி மண்டபத்தில் சரியாக மாலை 6 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு. குணரட்ணம் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மாணிக்கவாசகர் அவர்களும், ஏற்றியதைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களுக்கான ஈகச்சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
நாட்டுப்பற்றாளரான அன்னை பூபதி, கலாநிதி மகேஸ்வரன் ஆகியோருக்கும் மாமனிதர்களான திரு தில்லை ஜெயக்குமார் பேராசிரியர் எலியேசர் ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் நண்பர்களும் ஈகச்சுடரேற்றினர். அதைத்தொடர்ந்து மலர்வணக்கத்துடனும் அகவணக்கத்துடனும் நிகழ்வுகள் தொடங்கின. நிகழ்வை திரு. வசந்தன் தொகுத்து வழங்கினார். நாட்டுப் பற்றாளரினதும் மாமனிதரினதும் நினைவுரையை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி திரு சபேசன் அவர்கள் நிகழ்த்தினார்.
தமிழீழ தாயகத்தின் நெருக்கடியான ஒரு காலத்தில் ஒரு பெண்ணாக ஒரு தாயாக வாழ்ந்த அன்னை பூபதியின் உண்ணாநோன்பு போராட்டத்தின் பின்னனியும், அவரது தியாகம் பற்றியும் திரு சபேசன் அவர்கள் நினைவுகூர்ந்தார்.

மெல்பேணில் வாழ்ந்து மறைந்த மாமனிதர் ஜெயகுமார், மாமனிதர் எலியேசர், நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் பற்றிய எண்ணங்களையும் பகிர்ந்துகொண்ட அவர் 2009 இற்குப்பின்னரான காலத்;தில் மறைந்துபோன பல தேசிய செயற்பாட்டாளர்களும் நினைவில் நிலைநிறுத்தப்படவேண்டியவர்கள் என்ற கருத்தையும் பதிவுசெய்தார்.
அதனைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மாணிக்கவாசகர், தமிழ்மக்கள் தொடர்ச்சியாக, உறுதியான முறையில், தமது விடுதலைக்கான பணிகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தையும், நாடுகடந்த தமிழீழ அரசு என்ற வகையில் அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளித்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
காணொளி ஊடாக அகலதிரையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சமகால அரசியல் பற்றியும் தமிழ்த்தேசியம் என்ற ரீதியில் எவ்வாறு தமிழ்மக்களின் போராட்டம் முன்னகர்த்தப்படவேண்டும் என்றும், வெளியுலக அரசுகளின் நலன்களுக்காக, எமது உரிமைக்கான கோரிக்கையை கைவிட்டுவிடாமல், தொடர்ந்தும் பயணிக்க வேண்டிய அவசியத்தையும் பதிவுசெய்தார்.
அதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளில் நடைபெறும் அன்னை பூபதி நினைவுப் பொது அறிவுப் போட்டி இடம்பெற்றது. இம்முறை ஐந்துபேர் கொண்ட எல்லாளன் சங்கிலியன் அணிகளுக்கிடையில் இப்போட்டி இடம்பெற்றது. மூன்று சுற்றுக்களாக நடாத்தப்பட்ட இப்போட்டியில் சங்கிலியன் அணி 64:63 என்ற நிலையில்வெற்றிபெற்றது.
தொடர்ந்து கொடியிறக்கலுடனும் உறுதி மொழியுடனும் நிகழ்வுகள் எழுச்சியுடன் மாலை 8 மணியளவில் நிறைவடைந்தன.
Eelamurasu Australia Online News Portal












