வடக்கு மக்களுடன் வாழ்ந்து வருவதன் காரணமாகவே எனக்குள் மாற்றம் ஏற்பட்டது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் பிராந்திய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனப்படு கொலைத் தீர்மானத்தை நிறை வேற்றியமை, இராணுவ வெளியேற்றம் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பியமை, 13ஆம் திருத்தச்சட்டம் இனப் பிரச்சினைக்கு தீர்வல்ல எனச் சுட்டிக்காட்டியமை உள்ளிட்ட பல கருத்துக்களால் அண்மைய காலத்தில் இலங்கை அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சி. வி. விக்கினேஸ்வரன் மீது சர்வதேச அளவில் கவனம் ஏற்பட்டுள்ளது.
வடக்கில் பெரும் வெற்றியீட்டி மகிந்த ராஜபக்சவின் முன்னால் பதவி ஏற்புடன் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியதால் வடக்கு மக்களினால் விமர்சிக்கப்பட்ட வட மாகாண முதல்வர் இனப்படு கொலைத் தீர்மானத்துடன் மீண்டும் அந்த மக்களின் மனங்களை வென்றுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அவர்களின் குரலாக பல்வேறு விடயங்களைப் பேசியிருக்கும் இந்த நேர்காணலிருந்து சில முக்கிய விடயங்களை தொகுத்திருக்கிறார் எமது விசேட செய்தியாளர்.
தெற்கில் சிங்களவர்கள் மத்தியில் வாழும்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்தாலும் சிங்களவர்களின் மனம் கோணமல் நடக்க வேண்டும் என்று நினைப்பது தெற்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இயல்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிங்களவர்களை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் நிலவுவதாக தெரிவித்த அவர் வடக்கில் நிலமை நேர்மாறானது என்றும் கூறுகிறார். வடக்கில் ஒன்றரை வருடங்காக வாழ்ந்து வரும் நிலையில் மக்களுடன் தொடர்ச்சியாக உறவாடி வந்தமையே தனது மாற்றத்திற்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கொழும்பில் பிறந்து வளர்ந்த தனக்கே இவ்வாறு மாற்றம் ஏற்படுகிறது எனில் தமிழ் தலைவர்கள் கொழும்பில் இருக்காது இங்குள்ள மக்களுடன் இருந்தால் அவர்களும் தன்னைப்போல் செயற்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் எண்ணம் எதுவோ அவற்றையே செயற்படுத்துவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெறுவதுவே தனது சிந்தனை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் தீவிரமான கருத்து எதனையும் கூறவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர் உண்மைகளையே உணர்த்தவிழைவதாகவும் தெரிவித்தார். அத்துடன் உண்மையை கூறுவது தீவிரம் என்றால் பொய் கூறுவது நியாயம் என்றாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரப்பகிர்வு நடைமுறைக்கு ஒத்துவராது எனக் குறிப்பிட்ட அவர் குறுகிய நலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்காது நிரந்தரமான தீர்வினைப் பெறவேண்டும் என்றும் தெரிவித்தார். 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என்றும் அரசியலமைப்பு மாற்றம் தேவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினையில் இருவேறு மனிதப்பிரிவினர் என்ற ரீதியில் ஆள்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளும் தீர்வுதான் நிரந்தரதீர்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை எடுத்துரைக்கவே இனப்படுகொலைத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டும் என்பதற்காக இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்ததோடு எந்த மக்களின் பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டேனோ அந்த மக்களின் தேவைகளை பிரச்சினைகளை எடுத்தியம்புவது தனது கடமை என்றும் அவர் கூறினார்.
சர்வதேசம் எமது விடயம் தொடர்பில் ஆராயும்போது 2009இல் நடந்தவைகளை மாத்திரம் ஆராயாமல் 1948இலிருந்து தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானத்தின் ஊடாக உண்மையை தெரிந்துகொண்டாலே உகந்த நல்லிணக்கம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை எத்தகைய கருத்துமுரண்பாடுகள் ஏற்பட்டாலும் சம்பந்தரை விட்டு விலகப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர் சம்பந்தரே தனக்கு தலைவர் என்றும் குறிப்பிட்டார். கருத்து முரண்பாடுகள் வழமையானவை என்று குறிப்பிட்டுள்ளதுடன் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
தொகுப்பு: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்