வருடமொருமுறை வரும் ஆரியாதிக்கமிக்க வருடப்பிறப்பும் அதன் திணிப்பும்

தொன்றுதொட்டு இயற்கை வழிபாட்டில் ஊன்றித் திளைத்தவர்களாகிய எம் தமிழினம், இயற்கையையும் முருகனையும் தொன்றுதொட்டே வழிபட்டு வந்தனர். எம் மதம் சைவம் என்பதே எம் இனத்திற்கான அடையாளமாகவும், சைவத்தில் தளைத்தோங்கிய நாம் என்றென்றும் சைவர்களாக இல்லாமல் இந்துவாக மாற்றம் பெற்றது எப்போதோ அப்போதிருந்தே எம்மீதான எம் இனத்தின் மத அடையாளத்தைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஆரியன் செவ்வன தன் கைங்காரியத்தினை ஆற்றினான்.

வட இந்திய மன்னனான வாலிச மன்னன் முடிசூடிய இந்நாளே ஆரியர்களினால் கொண்டாட்ட நாளாகவும், தாம் திராவிட இனத்தை வென்று தமக்கான புது வசந்த வாழ்வை அமைத்த நாளாகவும் கொண்டாட ஆரம்பித்தனர். ஆரியப் படையெடுப்பானது தெற்குத்திசை நோக்கி நகருகையில் அவர்களுக்கான ஆட்சிபீடத்தை அமைப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு இருந்தனர். 9ஆம் நூற்றாண்டு காலத்தில் (பல்லவர் ஆட்சிக் காலத்தில்) தமிழர்கள் மீது படையெடுப்பை மேற்கொண்ட ஆரியர்கள்; எம்மீது சமஸ்கிருதத்தையும், ஆகம வழிபாட்டு முறையினையும், திணித்தனர். பல கல்விச் சாலைகளை அழித்தனர். எம் சமய குருமார்களை சிறைப்படுத்தினர். அதன் ஒரு வழியாக ஓர் சமரசத்தினை எம்மீது திணித்தனர். சிவன் பார்வதி, தந்தை தாய் ஆகவும், பிள்ளையார் முருகன் அவர்களின் பிள்ளைகளாகவும் சித்தரித்து எம்மீது எம் முழுமுதற் கடவுளாக இருந்த முருகனை பின் தள்ளினர். அதை நிறைவேற்ற புராணக் கதைகளையும் புனைந்தனர்.

எம் ஒரே தெய்வமாக இருந்த முருகனைப் புறந்தள்ளி, முதலில் தம் கடவுளான பிள்ளையாரை வழிபடவேண்டும் என்றும், பின்னரே முருகனை வழிபடவேண்டும் என்றும் நிபந்தனையை இட்டனர். எம் மதகுருமார்களான கப்புறாளைகளை அழித்து, அவர் சந்ததிகளை தீண்டத்தகாதவர்களாக்கி, சமஸ்கிருதம் படித்தவர்களே எமக்கான மந்திரங்களை ஓத நியமித்தனர். இவை அனைத்தையும் ஏன் அவர்கள் மேற்கொள்ளவேண்டுமெனின், அன்றைய காலப்பகுதியில் கல்வியறிவானது ஆலயங்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததும், தமக்கெதிரான திட்டங்கள் அங்கே தீட்டப்பட்டு விடக்கூடாது என்ற நயவஞ்சகப் போக்கிலேயே இவ்வாறான மாற்றங்களை அமுல்ப்படுத்தினர். தீண்டிய திராவிடம் தீ கொண்டு எழக்கூடாது என்பதற்காகவே ஓர் சமரச மதத்தினை அங்கே அமுல்ப்படுத்தினர். சைவக் கோவில்கள் எல்லாம், ஆழ்வார் கோவில்களாகவும், சிவன் பார்வதி கோவில்களாகவும் உருமாற்றம் பெற்றன, அங்கே முருகனுக்கும் ஓர் இடம் கொடுக்கப்பட்டது.

ஆரியர்கள் எம்மீது திணித்தவை இவை ஒன்றுமட்டுமல்ல, எம்மீது எம் கலாச்சாரத்தையே புடம்போட்டுப் போயினர். தமிழ் மன்னனான இராவணனை அரக்கனாகச் சித்தரித்து மட்டுமல்லாது, வானரமாக திராவிடனைப் புடம்போட்டு எம்மைக் கேலிக்குள்ளாகினர், அதையே எம்மை ஏற்றுக்கொள்ளவும் சமயச் சடங்காக ஆக்கவும் அறிமுகப்படுத்தினர். இதனை விடக் கேவலம் என்றால், சூரன் என்கின்ற தமிழ் மன்னனைக் கொன்றது ஆரியன், அதை சூர சம்ஹாரம் என்று (சூரன் வதை) என்று கூறி அதைச் செய்தது தமிழ்க் கடவுள் முருகன் என்று தாம் செய்த கொலைக்கு எம் கடவுள் மேல் கொலைப்பழியைச் சுமத்தி எம் மக்களைக்க் கொண்டாடச் செய்தனர். இடையர்களாக, ஆட்டுமந்தைகளை மேய்த்துக்கொண்டு தென்பகுதி நோக்கி வந்தவர்களிடம் ஓர் சோலைவனமாக எம் மக்கள் வாழும் பூமி கண்டதும் எம் மக்களை அன்றிலிருந்தே கொல்லவும், எம்மைக் கேலிப்பொருளாக்கவும் பழக்கிக்கொண்டார்கள். புலால் உண்ணல், மது அருந்தல் போன்ற பழக்கத்தினைக் கொண்டிராத திராவுட இனம் மீது அன்று அதனைத் திணிக்க எத்தனித்தனர். இதன் வழியாக வந்ததே அசுரன் என்னும் சொல். சுரன் என்றால் மது, அதாவது மது அருந்துபவர்கள். அசுரன் என்றால் மது அருந்தாதோர் என்பது பொருட்பட திராவிட இனத்தை அசுரராக்கினர்.

பலம் பொருந்திய எம் சிறு நில மன்னர்களை எல்லாம் அசுரனாக்கி அவர்களை வெற்றிகொண்டு கொண்டாடும் இன்னொரு நாள் தான் தீபாவளி. நரகாசுரனை வதம் செய்த நாளாம். திராவிட மன்னனை ஆரியர் வெற்றிகொண்ட நாளை அவர்கள் எம்மீது எவ்வாறு திணித்தனர்? புலாலை உண்ணக் கொடுத்தார்கள், சுரனை அள்ளி வழங்கினார்கள், இவ்வழியே எம் மதத்தின் மீது புலால் உண்ணும் பழக்கத்தை திணித்தார்கள். எவ்விடத்திலாவது எம்மதத்தில் சொல்லப்படுகின்றதா, பண்டிகை நாளில் புலால் உண் என்று? ஏன் தீபாவளிக்கு மட்டும் நாம் அவ்வாறு செய்யவேண்டும் என்று எண்ணியதுண்டா?

மருத்து நீர் வைத்து நீராடல் அவசியம் என்பதை அன்று ஆரியர்தான் எம்மீது திணித்தனர். சைவர்களாக, அசைவம் உண்ணாது இருந்த எம் மக்கள், பசுவையும், இயற்கையையும் கடவுளாக மதித்தனர். அவர்களின் நம்பிக்கையை உடைக்கும் முகமாக ஆரியர் திராவிடரை வெற்றிகொண்ட கணமே, அவர்கள் தம் வெற்றிக் கொண்டாட்டத்தை பசுவின் சலத்தை எடுத்து, சாணியோடு குழைத்து எம் மக்கள் மீது ஊற்றியதை சமயக் காரணங்களைக்கூறிக்கொண்டு எம்மீது சமய வழக்காக மருத்துநீர் என்னும் போர்வையில் அதனை ஊற்றிக்கொண்டாடி வருகின்றார்கள்.

ஆரிய அழிப்பு என்பது இன்றல்ல நேற்றல்ல பல்லாயிரம் ஆண்டுகளாக எம் இனத்தின் மீது நடந்துகொண்டிருக்கும் ஓர் தொடர் கைங்கரியம் தான். இதன் ஒரு வெளிப்பாடே இந்த ஆரியச் சிங்கள புதுவருடம். இவ்வாறாக பல திணிப்புக்களை எம்மீது திணித்த இந்த ஆரியர்களால் ஒன்றைமட்டும் உடைக்க முடியாமற் போனது என்னவெறால், தமிழினத்தின் மீளெளுட்சி. எவ்வளவு சிதைவுகளை கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் வீறுகொண்டு எழும் இனமாக இருப்பது எம்மினம் மட்டுமே. இன்று அழித்தால் நாளை முளைப்போம் என்பது என்னவோ எம்மினத்தினுள் எழுதப்படாத ஓர் இலக்கணமாகவே இருக்கின்றது. எம் கலைகள், பண்பாடுகள் திருடுபோய் திரிபடைந்து அனைவரும் பயன்பெற நாம் மட்டும் அனைத்தையும் இழந்து மீண்டும் மீண்டும் மற்றவர்களிடம் கையேந்தும் நிலையிலேயே இருக்கின்றோம்.

எம் இதிகாசங்கள், எம்மீதான திணிப்புக்கள் எதும் எமக்குப் புதியன அல்ல, ஒரு முறை திணித்தாலே நாம் பயங்கொள்ளவேண்டும், என் பாட்டன், முப்பாட்டன், அவரின் முப்பாட்டனின் முப்பாட்டனுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே எம்மீது ஆரியர்களின் திணிப்பு என்பது இருந்துகொண்டுதான் இருக்கின்றது.

ஆரியர்களின் வருகைக்கு முன்னர் தமிழர்கள் தை முதலாம் திகதியையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். இயற்கை தெய்வ வழிபாட்டு முறையை கொண்ட தமிழர்கள் தாம் வணங்கி வந்த தெய்வங்களில் ஒன்றான சூரிய பகவானுக்கு புதுவருடம் பிறக்கும் போது பொங்கல் இட்டு வழிபட்டு வந்த வரலாறு சிந்துவெளி குமரிநாடு ஈழம் என பரந்து வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் இருந்து வந்திருக்கிறது. சிந்துவெளி மக்கள் தைமுதல் மார்கழி வரையான பன்னிரண்டு மாதங்களையே தமிழ் மாதங்களாக பின்பற்றி வந்துள்ளனர் என்று வரலாறு கூறுகிறது.

ஆரியனின் வைஸ்ணவ வழிபாட்டு முறையைப் புகுத்தி, சைவ வழிபாட்டுமுறையை முற்றிலும் அழித்து இந்து வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தி அதையே தமிழினத்தையும் தலையில் வைத்துக்கூத்தாட வைத்த பெருமை ஆரிய ஆழ்வார்களையே சாரும். தமிழனின் பழமைதொட்ட பண்பாட்டை அழித்தொழித்து ஆரியனின் பண்பாடே தமிழன் பண்பாடு என்று நம்மவரும் பரம்பரை பரம்பரையாக ஆரியனின் வெற்றிக்கொண்டாட்டத்தில் நாமும் நம்மை நாமே கேவலப்படுத்திக்கொண்டு சிரித்து மகிழ்ந்து கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். எனவே இனியாவது எம் வரலாறு அறிந்து நாம் செய்யும் செயல்கள் சரிதானா என்று திரும்பிப் பார்த்துப் பயணத்தைத் தொடருவோம்.

எம்மினம் அழிந்து ஆரியராதிக்கம் எழுச்சிகொண்ட நாளாக எல்லோரும் கொண்டாடும் இச் சித்திரைப் புத்தாண்டு நாளை கொண்டாடுபவர்களெல்லாம் கொண்டாடுங்கள் என வாழ்த்துக்கூறி, எம்மினம் அழிந்த நாள் எண்ணிக் கவலைக் கண்ணீரோடு என் பாதையைத் தொடர்கின்றேன்.

பத்தன்று நூறன்று பன்நூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வின் புத்தாண்டு தை மாதம் முதல் நாள் பொங்கல் நன்னாள்”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அன்று சொன்னது தான் உண்மை

– யாழ்நிலவன்

Leave a Reply