புரட்சிகரமான முன்னேற்றங்களை கண்டு வருகின்ற நவீன காலமிது. இந்த முன்னேற்றங்களை பார்த்து எம்மால் புளகாங்கிதம் அடையாமலிருக்க முடியாது. ஆனாலும் கண்ணோடு கண்ணோக்கி ஆளோடு ஆள் உரையாடுவதென்பது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம்! அதில் உருவாகும் உறவிற்கு இணையேது?
அன்று நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த என் நண்பனும் நானும் அந்தப் பூங்காவில் உலாவந்து கொண்டிருந்தோம். கதைக்க எவ்வளவோ விடயங்கள் இருந்தன. ஆனால் செல்போனைக் காதில் வைத்து உரையாடிக் கொண்டிருந்த நண்பனது செய்கை என்னைக் குழப்பியது! நண்பன் உரையாடலை செல் போனுக்குள்ளால் நகர்த்திக் கொண்டு போனதினால் நான் பக்கத்திலிருந்தும் இல்லாதவனாய்ப் போனேன்!
அந்தி மாலைவேளையில் அழகான பூங்காவில் மக்கள் நிறைந்திருந்தனர். பலர் காதில் செல்போனை வைத்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். மற்றவர்களைப் பார்த்து ‘ஹாய்’ சொல்லக்கூட அவர்களுக்கு நேரமிருக்கவில்லை! பூங்காவில் பிள்ளைகள் குதூகலமாக விளையாடித்திரிந்தனர். அங்கு பல வர்ணப்பூக்கள் பூத்துக்குலுங்கியிருந்தன. இப்படி எத்தனை கோடி இன்பங்கள் கொட்டிக்கிடந்தும். எதையுமே மக்கள் ரசிப்பதாக இல்லை! ஏலெக்ரோனிக்குரல் மனித நேரடி உரையாடலை விட அற்பமானதாகிவிட்டது! பக்கத்தில் இல்லாவதவரோடு பேசுவதற்கு தொலைபேசி வந்தது. ஆனால் இப்போ பக்கத்திலிருப்பவரே இல்லாமல் போகின்ற நிலை!
அண்மையில் நான்கு நண்பர்களோடு காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன். உரையாடிக் கொண்டிருந்த எங்களை நண்பர்களில் ஒருவன் தன் வாயில் விரலை வைத்து மௌனமாயிருக்கும்படி சைகை காட்டினார்! ஏனெனில் மறுமுனையிலிருந்து செல்போனில் கதைப்பவருடைய கதை அவருக்கு கேட்கவில்லையாம்! நாங்கள் மூவரும் மௌனமாயிருந்தோம். தொடர்பாடலை இலகு படுத்தக்கண்டு பிடிக்கப் பட்ட கருவியினால் உரையாட முடியாமல் மூவரும் அமர்ந்திருந்தோம்.
நவீன தொடர்புகள் அதிகமதிகமாக எம்மை இணைக்க அதிகமதிகமாக தொடர்பறுந்த உணர்வு ஏற்படுவது ஏன்?
ஓவ்வொரு தொடர்பும் அந்நியோன்யத்தை பின்னைடயச் செய்கின்றது. மின் அஞ்சல், இணையம் (Email,Internet) போன்ற வசதிகளால் ஓருவரை ஒருவர் பார்க்காமலும் பேசாமலும் செய்திகளைப் பரிமாறலாம். குரல் அஞ்சல் (Voice Email) முறையில் முழு உரையாலையும் யாரையும் போய்ச் சேராமல் குரல் அஞ்சலில் நிகழ்த்தலாம். அதில் உங்கள் பதிலை விட்டுச் செல்லலாம். உதாரணத்திற்கு என் நண்பனுக்கு ஏதாவது ஒரு விடயம்பற்றிய விளக்கம் தேவைப்பாட்டால் அவனுக்கு குரல்அஞ்சலில் உங்கள் பதிலை விட்டுச் செல்லலாம். மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடல் தானியங்கும்-இயந்திரயமாக்கப்பட்டு, அந்நியப்படுத்தப் பட்டுள்ளோம்.
நிலையத்தில் பெற்றோல் நிரப்பப் போகின்றோமா? அங்கு நிற்பவரைப் பார்த்து புன்னகைத்து காலை வந்தனம் கூற வேண்டிய அவசியமில்லை, வங்கியில் வைப்புச் செய்ய வேண்டுமா? அல்லது பணத்தைப் பெறவேண்டுமா? யாருடனும் ‘கதைத்து’ நோத்தைப் போக்கத் தேவையில்லை. ஒரு வேளை வங்கியில் இதற்குப் பொறுப்பாயிருப்பவர் உங்களது அயலில் வாழும் நண்பராயிருக்கலாம். கதைப்பானேன்? ‘ATM மெஷினிற்குள்’ ‘கார்ட்டை’ செலுத்திக் கருமங்களை முடித்து விடலாம்! சுப்பர் மார்க்கூட்டில்’ பொருட்களை வாங்கப் போகின்றீர்களா? ‘ஸ்கானர்’ கருவி விலைப் பட்டியிலைத்தந்து வேலைகளை இலகு படுத்திவிடும்.
மனிதத் தொடர்புகளில் ஏன் சிரத்தை காட்ட வேண்டும்?
புரட்சிகரமான தொழில் நுட்பயுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உறவுகள் தொடர்புகள் என்று கூறி நேரத்தை ‘ வீணடிப்பது’ ‘பழமை’ வாதமாகத் தென்படலாம். செல்போன் மின்னஞ்சல், இணையம், வங்கிக் கார்ட் எல்லாம் இன்று இன்றியமையாதவைகளாகிவிட்டன! அவற்றின் பயன்பாடுகள் மறுப்பதற்கில்லை. எந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வகையில் பிரயோசனமானவையே. ஆனால் அந்த நோக்கங்களையும் விஞ்சிச் செயல் படுவதால் வரும் விளைவுகள் தான் சிந்திக்க வைக்கின்றன!
உரையாடி ஆற்ற வேண்டிய வேலைக்கு மின்னஞ்சலின் பின்னால் அமர்ந்திருப்பது எத்தகைய சலிப்பை தருகின்றது! மனித இணைப்புக்களை தொடர்புகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட இத்தொழில்துறை எம்மை தனிமைப்படுத்துகின்றது! சமூக ஊடாட்டத்தில் எதிரிடையான உணர்வுகளை வளர்க்கின்றது. உயிருள்ள உறவுத்தொடர்புகளை கட்டியெழுப்ப சுயகட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது ஆரோக்கியமானதாகும். அண்டையிலிருப்பவரோடு செல்போனில் தொடர்பெதற்கு? வீட்டிற்கு வரும் உறவுகள், நண்பர்களோடு உரையாடுதலைக் குழப்பித் தொல்லை தரும் தொலைபேசி அழைப்புக்களை தணித்துவிடலாம் தானே?
வீடுகள் தோறும் தொலைக்காட்சிப் பெட்டிகள் மலிந்தியங்கும் காலமிது. குடும்ப அங்கத்தவர்களோடு தொடர்பாடும் நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. இல்லங்கள் தோறும், நாடகங்கள், சினிமாக்காட்சிகளுக்கு முன்னால் ‘ஒட்டிக்’ கொண்டிருப்பதை தவிர்த்து செவிமடுத்து உரையாடினால் உறவுகள் சிறக்கும். மனிதர்களை பார்த்து அவர்கள் குரலைக்கேட்டு அந்நியோன்னியத்தை நெருகத்தை வளர்ப்போமா?
நிலவன் – சிட்னி. (ஈழமுரசு -2014 தைமாத இதழிலிருந்து)