எப்போதுமே, எம்மையும், எம்மைச்சுற்றி உள்ள இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கப் பழக வேண்டும். இதனால் பல தொற்று நோய்கள் பரவுவதைத் தவிர்க்கலாம். பொதுவாக சமையலறைக் கழிவுகளை மூடிய நிலையில் உள்ள நில பங்கரில் போட வேண்டும். இதனூடாக இலையான்கள் உருவாவதைத் தடுக்கலாம். பின்னர் அக்கழிவுகளை தாவர வளர்ச்சிக்கு எருவாகப் பயன்படுத்தலாம். கிணற்றைச்சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பதைத் தடுக்க வேண்டும்.
சவர்க்கார உறைகள், சம்பூ போத்தல்கள் மற்றும் கழிவுப் பொருட்களை கழிவுக் கூடையில் போட்டு நிறைந்த பின்னர் அப்புறப்படுத்த வேண்டும். இதனால் நுளம்பு உற்பத்தியாவதைத் தடுக்கலாம் என அந்த மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார் வழுதி வாத்தியார். வழுதி வாத்தியார் மிகவும் மிகவும் மென்மையான போக்குக் கொண்டவர்கள். மற்றவர்களின் மனம் நோகுமளவுக்கு ஒரு பேச்சுப் பேச மாட்டார்.
அவர் திருமணம் செய்த ஆரம்பத்தில் மனைவியின் சமையலில் உப்பு சற்றுத் தூக்கலாக இருந்தாலோ அல்லது சுவையின்றி இருந்தாலோ ‘நிலானியின் சமையலெண்டால் சொல்லவா வேணும். இப்படிச் சுவையாகச் சாப்பிடுவதற்கு நான் குடுத்து வைத்திருக்க வேணும்.’ என்று தட்டில் போட்ட சாப்பாட்டில் ஒரு பருக்கைச் சோறு கூட மிச்சம் விடாது சாப்பிட்டு தனது மனை வியை மகிழ்விப்பார்.
பின்னர் நிலானியின் தாயாரோ, சகோதரர்களோ சாப்பிட்டு விட்டு ‘என்னடி இது சாப்பாடு… ஒரே உப்பாக இருக்கிறது…’ என்று சொன்ன பின்னர் தான் அவளுக்கே, தன் கணவர் வழுதியின் பெருந்தன்மையை நினைத்து ‘அவர் தனக்கு கணவராகக் கிடைத்ததற்கு நான் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று எண்ணி பெருமையடைவாள். அன்றைய வகுப்பில் மாணவர்கள் அனைவரும் வழுதி வாத்தியாரின் படிப்பித்தலை உன்னிப்பாகக் கேட்டு விளங்கியதுடன், மறுநாள் விடுதி வளாகத்தை சுத்தம் செய்வதாகவும் உறுதி எடுத்துக் கொண்டார்கள்.
அவ்வாறே மறுநாள் மாணவர்கள் அனைவரும், மாணவ தலைவரின் வழிகாட்டலில் குழுக்களாகப் பிரிந்து சமையலறை, கிணறு, தமது இருப்பிடம் என விடுதி வளாகத்தின் அனைத்துப் பகுதியையும் துப்பரவு செய்து வழுதி வாத்தியாரையும் கூட்டிச்சென்று காட்டினார்கள். வழுதி வாத்தியாரும் சந்தோசமடைந்து இனி இவ்வாறு தொடர்ந்து சுத்தம் பேணுங்கள். உங்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறி விட்டு தான் ஒரு வார விடுமுறையில் செல்வதாகக் கூறிவிட்டு மாணவர்களிடம் விடை பெற்றார்.
விடுமுறையின் பின்னர் விடுதிக்கு வந்து, ஆர்வம் பொங்க விடுதியின் சுற்றுப் புறங்களை மாணவர்களுடன் சேர்ந்து பார்வையிட்டார் வழுதி வாத்தியார். அனைத்து இடங்களும் சுத்தமாக இருந்த போதும், கிணற்றைச் சுற்றி, சுத்தம் செய்வதற்கு முன்னர் இருந்தது போன்று, சவர்க்கார உறைகளும், சம்போ போத்தல்களும், ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும் காணப்பட்டன.
மாணவர் தலைவனை அழைத்த வழுதி வாத்தியார் மண்வெட்டி எடுத்து வருமாறு கூறி விட்டு, கிணற்றைச் சுற்றி இருந்த பேப்பர், கஞ்சல்களைத் தானே பொறுக்கத் தொடங்கினார். அப்போது மாணவர்களும் வாத்தியாருடன் சேர்ந்து பொறுக்க முற்பட்ட போது அவர்களைத் தடுத்து நிறுத்திய வழுதி வாத்தியார், ‘இந்த மாணவர் விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் நல்ல மனத்தையும் குணத்தையும் படைத்தவர்கள். எந்நேரமும் சுத்தம் பேணுபவர்கள்’.
‘படிப்பில் கெட்டிக்காரர்கள். விளையாட்டில் வீரர்கள். ஆனால் கடந்த ஒரு வாரம் உங்களால் இந்தக் கிணற்றைச் சுற்றிய வளாகத்தைச் சுத்தம்செய்ய முடியவில்லை. அதற்கு, பாடசாலையில் வழங்கப்பட்ட வீட்டு வேலைகளை செய்வதற்கு பரீட்சைக்குப் பாடங்களை மீட்டுப் பார்ப்பதற்கு என உங்களது நேரத்தை உபயோகித்திருப்பீர்கள்’. ‘அதனால் நானே இந்தக் கிணற்று வளாகத்தை இன்று சுத்தம் செய்கிறேன். நீங்கள் உங்களது இடங்களுக்குச் சென்று படிப்புக்களைத் தொடருங்கள்.’ என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு, சுத்தம் செய்யும் வேலையைத் தொடர்ந்தார். வாத்தியாரை வேலை செய்ய விட விருப்பமில்லாத போதும், அவரது கட்டளைக்குப் பணிந்து அனைவரும் ஒன்றுகூடல்
அறையில் கூடி, வாத்தியாரின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.
45 நிமிடங்களின் பின்னர், வியர்த்து ஒழுக அங்கு வந்த வாத்தியார், ‘இப்போது கிணற்று வளாகம் சுத்தமாக உள்ளது, இனிமேல் அப்படியே பேணுங்கள்.’ என்று சொல்லி அவர்களது அறைகளுக்குச் சென்று படிப்பைத் தொடங்குமாறு பணித்தார். ஆனால் அம்மாணவர்கள் அனைவரும், தமது பிழையை உணர்ந்து, அழுதவாறு வாத்தியாரிடம் மன்னிப்புக் கேட்டு, இனிவரும் காலங்களில் இவ்வாறான பிழைகளை விட மாட்டோம் என்று உறுதி கூறினார்கள்.
‘நாம் எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோமோ, அதைப் பார்த்துத் தான் சிறுவர்கள் பழகுகிறார்கள்’ ‘அதனால் இந்த விடுதியில் இருக்கும் போது, இவ்வாறான சிறு சிறு விடயங்களையும் கருத்திலெடுத்து வேலை செய்யுங்கள் உங்களது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.’ என்று கூறி அனைவரையும் அவர்களது அறைகளுக்கு அனுப்பி வைத்தார் மக்களின் வாழ்வுக்காக வாழ்ந்த வழுதி வாத்தியார்.
அழகன்.