மக்களைச் சென்றடைதல் என்பது அரசியலில் மிகவும் முக்கியமானதொரு தேவையாகும். அரசியல் கட்சி அல்லது அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதன் ஊடாகத்தான் மக்களின் ஆதரவைப் பெற முடியும். அதன் அடிப்படையில்தான் மக்களை அணி திரட்ட முடியும். அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க, முடியும்.
ஆகவே மக்களைச் சென்றடைவதற்காக அரசியல்வாதிகள் எதனையும் சொல்வார்கள். எதனையும் செய்வார்கள். ஆனால், இவ்வாறு எதனையும் சொல்வதும், செய்வதும் ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல. மக்களின் தேவைகள், அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பவற்றையும் நாட்டின் சுபிட்சம், எதிர்காலப் போக்கு என்பவற்றைச் சிந்தனையில் கொண்டு அதற்கேற்ற வகையில் மக்களை அணி திரட்ட வேண்டியது அவசியம்.
மக்களை, தங்கள் பக்கம் அணி திரட்ட வேண்டும். அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சுய அரசியல் இலாபச் செயற்பாடுகள் நிலைத்து நிற்கக் கூடிய வகையில், மக்களுடைய ஆதரவைப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. அவ்வாறான ஆதரவைப் பெறுகின்ற அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் நீண்டகாலம் செல்வாக்கு மிக்கவர்களாகத் திகழவும் முடியாது.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசத்தில் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், அவற்றோடு, தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் மக்களைச் சென்றடைய வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டிருந்தது. யுத்தம் முடிவடைந்ததையடுத்து, யுத்த பிரதேசத்து மக்கள் மத்தியில் வலுவானதோர் அரசியல் கட்டமைப்பும், வலிமையான அரசியல் தலைமையும் இல்லாதிருந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
யுத்தம் நடைபெற்ற போது விடுதலைப்புலிகள் தமிழர் தரப்பில் ஆயுத பலம் மிக்கதோர் அமைப்பாக செயற்பட்டிருந்தனர். அவர்களின் செயற்பாடுகள், யுத்த களத்திலும்சரி, அரசியல் களத்திலும்சரி இலங்கை அரசாங்கத்திற்குப் பெரும் தலையிடி கொடுப்பனவாக அமைந்திருந்தன. அதேநேரம் பாராளுமன்ற ஜனநாயக அரசியலில் தமிழர் தரப்பின் வலுவான கட்டமைப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு திகழ்ந்தது.
ஆயினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஓர் அரசியல் சக்தியாக – அமைப்பாக, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு உட்பட்டதாகவே இருந்தது. இதனால் தமிழர் தரப்பு அரசியல் தலைமை என்பது விடுதலைப்புலிகள் என்ற கட்டமைப்பையே முழுமையாகச் சார்ந்திருந்தது. ஆனால், 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு, அதன் முக்கிய தலைவர்களும் இல்லாமற் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் மக்களுடைய அரசியலில் ஒரு பாரிய வெற்றிடம் ஒன்று ஏற்பட்டிருந்தது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அப்போது உயிர்த்துடிப்புடன் இருந்த போதிலும், விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத சூழலில் தமிழ் மக்களுடைய அரசியல் தலைமையாக அது உடனடியாகப் பரிணமித்திருக்கவில்லை. ஆயினும் யுத்தம் முடிவடைந்தவுடன் நடத்தப்பட்ட தேர்தல்களில் மக்கள் விடுதலைப்புலிகளின் வழிநடத்தலின்றி, அவர்கள் சுயமாக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் தமது அரசியல் தலைமைத்துவமாகத் தெரிவு செய்திருந்ததை சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியிருந்தார்கள்.
ஆகவே, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அரசியல் வெற்றிடத்தில் புகுந்து அந்த மக்களின் அரசியல் தலைமையைத் தன்வசப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ முழு வீச்சில் ஈடுபட்டிருந்தார்.
அரசியல் ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் இராணுவ ரீதியாகவும், இதற்கான செயற்பாடுகளை அவர் முன்னெடுத்திருந்தார். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், விடுதலைப்புலிகளினால் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களை, தனது அரச படைகளே விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்டெடுத்திருந்தன என்ற பிரசாரத்தை முன்னாள் ஜனாதிபதி முடுக்கிவிட்டிருந்தார்.
பயங்கரவாத யுத்தத்தைத் தொடுத்திருந்த விடுதலைப்புலிகளை தமது அரசாங்கமே இல்லாமற் செய்து, யுத்தத்திற்கு முடிவுகட்டி, அமைதியையும் சமாதானத்தையும் நாட்டில் ஏற்படுத்தியிருந்ததாகவும், எனவே, அதற்காக தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே அவர் மேடைகளில் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களை, யுத்த பிரதேசத்தில் இருந்து வெளி யேற்றி, அகதிகளாக, அவர்களை செட்டிகுளம் மனிக்பாம் அகதி முகாமில் அப்போதைய அரசாங்கம் அடைத்து வைத்திருந்தது. யுத்தகளத்தில் சிக்கியிருந்து, படாதபாடுபட்டு, தெய்வாதீனமாக உயிர்தப்பி – இடம்பெயர்ந்து, எந்தவிதமான உடை மைகளுமின்றி, அகதிகளாக வந்த மக்களாக அவர்களை அரசாங்கம் அப்போது கருதவில்லை.
மாறாக அவர்களையும் பயங்கரவாதிகளாகவே கருதியிருந்தது. இதன் காரணமாகவே, அவர்களை, முட்கம்பி வேலி அமைத்து, மனிக்பாம் முகாமுக்குள் பலத்த இராணுவ பாதுகாப்புக்குள் அப்போதைய அராசங்கம் அடைத்து வைத்திருந்தது. வெளியில் அவர்கள் எவருடனும் தொடர்பு கொள்ள முடியாது. வெளியில் இருந்து வருபவர்கள் அவர்களை சுதந்திரமாகப் பார்க்க முடியாது.
இயல்பாகவும், சுதந்திரமாகவும் அவர்களுடன் முகாமில் இருந்தவர்கள் பேச முடியாது. வெளியில் இருந்து, உள்ளே இருந்தவர்களுக்கு அடிப்படையாகத் தேவைப்பட்ட பொருட்களைக்கூட கொண்டு சென்று கொடுக்க முடியாத அளவுக்குக் கெடுபிடிகள் மனிக்பாம் முகாமில் கோலோச்சியிருந்தன.
தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட ரீதியில் தமது உறவினர்கள் என்ற வகையில் அவசியமான பொருட்களைக் கொண்டு செல்ல முடியாதவாறு, நடைமுறைகள் இருந்தன. தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களும்கூட, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் நிவாரணப் பொருட்களையோ உதவிப் பொருட்களையோ, அங்கு கொண்டு சென்று விநியோகிக்க முடியாத வகையில் இறுக்கமான போக்கு அங்கு கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் எவரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.
மனிக்பாம் முகாம் மட்டுமல்ல. வவுனியா, செட்டிகுளம் மற்றும் புல்மோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் போன்ற முக்கிய இடங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்திய வசதிகள் அளிக்கப்பட்ட வைத்தியசாலைகளில்கூட ஊடகவியலாளர்கள் செல்ல முடியாதவாறு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வைத்தியசாலைகள் அனைத்திலும் இராணுவத்தினர் காவலுக்கு நிறுத்தப்பட்டு கடும் சோதனைக்குப் பின்னர், ஆள் அடையாளங்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசீலனை செய்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பொது அமைப்புக்களை;ச சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த வைத்தியசாலைகளின் வெளிவாசல்களில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்கள். அந்த அளவுக்கு கடுமையான நடைமுறைகள் அப்போது பின்பற்றப்பட்டிருந்தன. யுத்தம் நடைபெற்ற சூழலிலும்கூட, யுத்தபிரதேசத்தில் அரசாங்கத்தினால் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
அங்கிருந்த மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அந்த மக்கள் தேர்தல்களில் பங்கு கொண்டு, தமக்கு விருப்பமானவர்களை தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருந்தனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்த எதிரணியைச் சேர்ந்தவர்களான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைக்கூட, அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட, மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் சென்று பார்வையிடுதவற்கு, அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற்று வரவேண்டும் என்று, அங்கு செல்ல முயன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதுவும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று விசேடமாகக் கூறப்பட்டது. மனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களைப் பார்வையிடுவதற்கு அனும திக்க வேண்டும் என்று அப்போது, பல தடவைகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரியிருந்தது.
ஆயினும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இறுதியாக 2010 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து, ஒரு வருட காலம் கழிந்த பின்னர், மனிக்பாம் முகாமுக்குச் செல்வதற்கான அனுமதி தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் உடனடியாகவே, 2010 ஆம் ஆண்டு, பொதுத் தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்தியது. யுத்தம் முடிவடைந்தபோது, விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பொதுமக்கள் மத்தியில் இருந்து சுயமாக வருவதற்கு விரும்பியிருக்கவில்லை.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் நிலவிய இராணுவ கெடுபிடிகளே, இதற்குக் காரணமாக இருந்தது. எனினும் அகதி முகாம்களில் அகதிகளாக இருந்தவர்களும்கூட, கெடுபிடிகளுக்கு மத்தியில் வேட்பாளர்களாகக் களம் இறங்கியிருந்த நிலைமையும் காணப்பட்டது. அதேநேரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட, தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு, பெரும்பான்மையாக வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காகவும், அவர்களைக் குழப்புவதற்காகவும் அரசாங்கம் பல சுயேச்சை குழுக்களை தேர்தல் களத்தில் இறக்கியிருந்தது.
இத்தகைய பின்னணியில் 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இடம்பெயர்ந்து மனிக்பாம் முகாமில் இருந்த மக்கள் பேருந்துகளில் தமக்கென அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தார்கள். அந்த நிலையிலும் அவர்கள் தமது பிரதிநிதிகளாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களையே தெரிவு செய்திருந்தார்கள். இந்தத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளிடம் பேச்சுக்கள் நடத்துவோம்.
அந்தப் பேச்சுக்களின் ஊடாக தமிழ் ம்ககளுடைய பிரச்சினைகளுக்கும், அவர்கள் எதிர்நோக்கியுள்ள இனப்பிரச்சினைக்கும் அரசியல் தீர்வு காண்போம் என்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ பல தடவைகள் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். ஆனால் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, மனிக்பாம் முகாமில் இடம்பெயர்ந்திருந்த அந்த மக்களைச் சென்று பார்வையிடுவதற்கான அனுமதியை, இழுத்தடிப்பின் பின்னர் அரசாங்கம் வழங்கியிருந்தது.
ஆனால் மனிக்பாம் முகாமுக்குச் சென்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற குழுவினருக்கு மனிக்பாம் முகாமுக்குள் செல்வதற்கு அங்கிருந்த இராணுவம் அப்போது அனுமதி மறுத்துவிட்டது. அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் பாதுகாப்பு அமைச்சின் எழுத்து மூல அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக எழுத்து மூலமான அறிவித்தல் தங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும் அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் தெரிவித்துவிட்டார்கள்.
இதனால் அரசாங்கத்தின் அனுமதி பெற்றிருந்தும்கூட, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவினரால் மனிக்பாம் முகாமுக்குள் செல்ல முடியாமல் போயிருந்தது. அது மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்திருந்த மக்களை 2009 ஆம் ஆண்டு ஒக்டோடபர் மாதமளவில் மீள்குடியேற்றம் செய்வ தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அரசாங்கம், அந்த மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை மீள்குடியேற்றப் பகுதிக்குள் செல்வதற்கும் அனுமதிக்கவில்லை.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னரே அதற்கான அனுமதியை அரசு வழங்கியிருந்தது. ஆயினும் மீள்குடியேற்றச் செயற்பாடுகளிலோ அல்லது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள் கட்டமைப்புப் பணிகளிலோ தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் பங்கெடுக்காதவாறு அரசாங்கம் பார்த்துக் கொண்டது. மீள்குடியேற்றம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள், முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட கூட்டங்கள், மீள்குடியேற்றச் செயற்பாடுகள் தொடர்பிலான மதிப்பீட்டு கூட்டங்கள் என்பவற்றில் எந்தவொரு கூட்டத்திற்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை.
அவர்களைப் புறக்கணித்துவிட்டு, அரசாங்க அமைச்சர்களும், அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுமே இந்தக் கூட்டங்களில் பங்குபற்றியிருந்தார்கள். இதனால் மீள்குடியேற்ற நடவடிக்கையும்சரி, மீள்கட்டமைப்பு செயற்பாடுகளும்சரி, புனர்வாழ்வு நடவடிக்கைகளும்சரி, அரசாங்கத் தரப்பினராலேயே. முழுமையாக செயற்படுத்தப்பட்டது என்றதொரு மாயத் தோற்றத்தை மக்கள் மத்தியில் அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது.
பொது நிகழ்வுகளில் உரையாற்றிய அப்போதைய ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள், அரசாங்கத்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரையில் அனைவருமே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சென்று பார்க்கவில்லை. அவர்களில் அக்கறை காட்டவில்லை. அவர்களுக்குத் தேவையான எந்தவொரு நிவாரண உதவிகளையும் அவர்கள் வழங்கவில்லை என்று நா கூசாமல் கூட்டமைப்புக்கு எதிராகப் பகிரங்கமாகப் பிரசாரம் செய்தார்கள்.
அரசியல் ரீதியாக சேறடித்திருந்தார்கள். தமிழ் மக்களைத் தங்கள் பக்கம் திசை திருப்பி, அவர்களுக்கான அரசியல் தலைமைiயை – அரசியல் தலைமைத்துவத்தைத் தாங்கள் கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே அரசாங்கத்தினால் இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆயினும், தமிழ் மக்கள் இந்த அரைவேக்காட்டுத்தனமான அரசியல் பம்மாத்துக்களில் எடுபட்டுப் போகவில்லை.
அவர்கள் மிகவும் விழிப்போடு இருந்தார்கள். தெளிவோடு செயற்பட்டிருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பை அரசாங்கம், திட்டமிட்டு அரசியல் ரீதியாகப் புறக்கணித்து வருகின்றது என்பதையும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக – அரசியல் தலைவர்களாகத் தோற்றம் பெறுவதற்கு பேரின அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன என்பதையும் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அதனால், அவர்களுடைய அரசியல் கபடத்தனங்களுக்கு அவர்கள் பலியாகிவிடவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமது அரசியல் தலைமை என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் சந்தேகத்திற்கு இடமின்றி நிலைநிறுத்தி வந்துள்ளார்கள். இத்தகைய பின்னணியில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தமக்குள் ஒன்றிணைந்த செயற்பாடுகளின்றி, தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றன என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கின்றன.
மக்களின் செல்வாக்கையும் ஆதரவையும் ஒரு முகமாகப் பெற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அரசியல் ரீதியாகத் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு, தமிழ் மக்களுக்கு ஆளுமை மிக்கதோர் அரசியல் தலைமையை வழங்க முடியாததோர் அவல நிலைக்குள் சிக்குண்டு கிடக்கின்றது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகத் திகழ்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பினுள் தன்னை மாத்திரமே முதன்மைப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கின்றது.
அந்தக் கட்சியானது கட்சி அரசியல் நடத்துவதில் அக்கறையும், ஆர்வமும் காட்டியிருக்கின்றதே தவிர, பல்வேறு நெருக்கடிகள், கபடத்தனமான அரசியல் செயற்பாடுகள் என்பவற்றில் எல்லாம் எடுபட்டு போகாமல், ஒரே அணி – ஒரே அமைப்பு – கூட்டமைப்பு என்ற அரசியல் நிலைப்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் உறுதிப்பாட்டிற்கு அமைவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள மறுத்து வருகின்றது.
மோசமான ஒரு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, அனைத்தையும் இழந்து உளரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையையும், அரசியலையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது இப்போது அவசரமான தேவையாக இருக்கின்றது. அதற்கு கட்சி அரசியல் செயற்பாடுகள் ஒருபோதும் உதவப் போவதில்லை. மக்கள் ஓரணியில் ஒன்று திரண்டிருக்கின்றார்கள். அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் ஓர் அணியில், ஒரு கட்டமைப்பாக அணி திரள வேண்டும்.
அவ்வாறு ஒன்றிணையாவிட்டால், மக்களைச் சென்றடைந்து அவர்களுடைய மனங்களை மாற்றி, தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதறடிப்பதற்கான சக்திகளின் செயற்பாடுகள் வெற்றியடைவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்த பழி அந்தக் கட்சிகளுக்கே வந்து சேரும். நூறு நாள் வேலைத் திட்டம் ஒன்றை முன்வைத்து நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இப்போதைய கூட்டு அரசாங்கம் (அது இன்னும் தேசிய அரசாங்கமாகப் பரிணமிக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியைப் போன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியினருக்கும் அமைச்சுப் பதவிகளைக் கொடுத்துள்ள போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஒரு கூட்டு அரசாங்கத்தையே உருவாக்க முடிந்திருக்கின்றது. தேசிய அரசாங்கத்தை அவரால் உருவாகக முடியவில்லை. பொதுத் தேர்தல் ஒன்றின் மூலமே இதனை சாதிக்க முடியும் என்று அவர் நம்புகின்றார்.
வரப்போகின்ற பொதுத் தேர்தலை கருத்திற்கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் – மக்களைச் சென்றடைவதற்கு முயன்று கொண்டிருக்கி;ன்றது. அதேபோன்று இலங்கையின் அரசியல் விவகாரங்களில் அக்கறை காட்டத் தொடங்கியுள்ள புதிய இந்திய அரசாங்கமும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடாக, தமிழ் மக்களை அணுகாமல், நேரடியாக தமிழ் மக்களை அணுகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது, அவர் கலந்து கொண்டிருந்த வடபகுதி நிகழ்வுகள், அவற்றின் ஒழுங்கமைப்புக்கள் என்பன இந்த வகையிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்தியா வழங்குகின்ற உதவிகள் நேரடியாக தமிழ் மக்களுக்கே சென்றடையும் வகையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற கருத்தும்கூட, இந்தச் சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன், கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்திய உதவித்திட்ட வீடுகளைக் கையளிக்கும் வைபவத்தில் இந்திய அதிகாரிகள் நேரடியாக மக்களைச் சென்றடைந்திருந்தார்கள்.
இந்த வைபவத்தில் அந்த மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் புறக்கணிக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கதாகும். எனவே மக்களைச் சென்றடைவதற்கான – தமிழ் மக்களைச் சென்றடைவதற்கான பலமுள்ள அரசியல் சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்தச் சூழ்நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதறடிப்பதற்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதற்கும் சக்திகள் முற்படுகின்றன என்று குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதைக் கைவிட்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எந்தெந்த வழிகளிலெல்லாம் பலமுள்ளதாக, வலுவுள்ளதாக்க முடியுமோ அவற்றையெல்லாம் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.
கூட்டமைப்பினர் வெறும் அரசியல் தலைவர்களாக அல்லாமல், மக்களின் மனங்களை வென்ற மக்கள் தலைவர்களாக உருவாக வேண்டும். இது இப்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. மக்களின் மனம் அறிந்து, அவர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கான தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்பட கூட்டமைப்பினர் குறிப்பாக தமிழரசுக் கட்சியினர் முன்வர வேண்டும்.
– செல்வரட்ணம் சிறிதரன்