அம்பாறை தனிமாவட்ட கோரிக்கை – இருபக்க கருத்துகள்

முஸ்லிம் காங்கிரஸ் வேண்டி நிற்கும் அம்பாறை மாவட்டத் தமிழ்பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கை தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபை இணைப்பாளரின் கட்டுரையையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கருத்தினையும் வீரகேசரி பத்திரிகையிலிருந்து மீள்பதிவிடுகின்றோம்.

தமிழ்மக்களின் கருத்து

தற்போதுள்ள அம்பாறை நிர்வாக மாவட்டத்தில் அம்பாறைத் தேர்தல் தொகுதி நீங்கலாக மீதியான பொத்துவில், கல்முனை, சம்மாந்துறைத் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிப் புதிதாகக் ‘கல்முனை மாவட்டம்’ என்ற முஸ்லிம் பெரும்பான்மைக் கரையோர மாவட்டம் ஒன்றினை உருவாக்கும் முயற்சி அதன் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் காலத்திலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முடுக்கிவிடப்பட்டதாகும்.

amparaiஇக்கரையோர மாவட்ட உருவாக்கம் பற்றிய மாற்றுக் கருத்தொன்றினை அம்பாறை மாவட்டத் தமிழர்களின் எதிர்கால சமூக, பொருளாதார, அரசியல் நலன்களை மனம் கொண்டு வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மேற்கூறப்பட்ட கரையோர மாவட்டம் உருவாக்கப்படுவதை அம்பாறை மாவட்டத் தமிழர்கள் இப்போது விரும்பவில்லை.

ஏன் இப்போது விரும்பவில்லை என்பதில் உள்ள நியாயங்களை அம்பாறை மாவட்டத் தமிழர்களின் 1947 இன் பின்னரான கடந்த அறுபத்தியேழு வருடகால அரசியல் வரலாற்றினைத் தெரிந்து கொள்வதன் ஊடாகவே புரிந்துகொள்ள முடியும்.

அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி துண்டாடப் பெற்று 1961 இல் புதிய ‘அம்பாறை மாவட்டம்’ மாக உருவாக்கப்படும்வரை தற்போதைய அம்பாறை மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டமும் இணைந்த நிலப்பரப்பே முன்னைய ‘மட்டக்களப்பு’ நிருவாக மாவட்டமாக இருந்தது.

இதன் எல்லைகள் வடக்கே வெருகல் ஆறு, தெற்கே குமுக்கன் ஆறு, கிழக்கே வங்காள விரிகுடாக்கடல், மேற்கே வடமத்திய – மத்திய – ஊவா மாகாண எல்லைக்கோடுகள். (ஊவா மலைக்குன்றுகள்).
இலங்கையின் சோல்பரி அரசியலமைப்பின் கீழான முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 1947 இல் நடைபெற்றது.

சோல்பரி ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய பாராளுமன்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை, 1946 இல் 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் 89 தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

இத்தேர்தல் தொகுதிகளின் அடிப்படையிலேயே இலங்கையின் முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அம்பாறை மாவட்டம் உருவாகி இருக்கவில்லை.

1947 க்கு முன்னர் பின்னைய (1947–1959) பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய முழுநிலப்பரப்பும் சட்டசபைக் காலத்தில் (1931 – 1947) ‘மட்டக்களப்பு தெற்கு’ என அழைக்கப்பட்ட தனித் தேர்தல் தொகுதியாக இருந்தது.

மேற்கூறப்பட்ட மட்டக்களப்பு தெற்கு தேர்தல் தொகுதியே, 1946 தேர்தல் தொகுதிகள் எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் தொகுதிகளாகின.

அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த அதாவது, 1947 இல் பிரதானமாக கல்முனை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களே தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ஆவர்.

அப்போதைய பட்டிருப்புத் தொகுதியின் (1947 -– 1959) தெற்கு எல்லை கல்முனை தாளவெட்டுவான் சந்திவரை – தாளவட்டுவான் சந்தியிலிருந்து கிட்டங்கித் துறையை ஊடறுத்து அம்பாறைக்குச் செல்லும் பிரதான வீதி வரை – பரந்திருந்தது என்பதை மனங்கொள்ளும் போது, அப்போதைய (1947 –- 1959) கல்முனை, பொத்துவில் தொகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களும் அப்போதைய பட்டிருப்புத் தொகுதியின் தெற்கு எல்லையில் வாழ்ந்த தமிழ் மக்களும் சேர்ந்தே தற்போதைய ‘அம்பாறை மாவட்டத் தமிழர்கள்’ எனக் கணிக்கப்பட வேண்டும்.

ஏனெனில், அப்போதைய (1947 – 1959) பட்டிருப்புத் தொகுதி 1959 இல் மீண்டும் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்படும் வரை தற்போதைய கல்முனைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ள பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை போன்ற கிராமங்களையும் உள்ளடக்கியிருந்தன.

அதேபோல் தற்போதைய அதாவது, 1976 ஆம் ஆண்டு தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது ஏற்படுத்தப்பட்ட சம்மாந்துறைத் தேர்தல் தொகுதியின்கீழ் இருப்பதும் 1959 இலிருந்து 1976 வரை பழைய பொத்துவில் தொகுதியின்கீழ் இருந்ததுமான சவளக்கடை, சொறிக்கல்முனை, மத்திய முகாம், அன்னமலை, நாவிதன்வெளி, 6 ஆம் கொலனி போன்ற தமிழ்க் கிராமங்களும் 1947 இருந்து 1959 வரை பழைய பட்டிருப்புத் தொகுதியிலேயே அமைந்திருந்தன.

அப்போதைய (1947 – 1959) பட்டிருப்புத் தொகுதியில் அடங்கியிருந்த மேற்கூறப்பட்ட கிராமங்கள் யாவும் பின்னாளில் 1959 தேர்தல் தொகுதி எல்லைகளை மீள்நிர்ணயத்தின் போது புதிய கல்முனைத் தொகுதியின் கீழும் புதிய பொத்துவில் தொகுதியின் கீழும் உள்வாங்கப்பட்டன. இவைகள் யாவும் 1947 – 1959 வரை பழைய பட்டிருப்புத் தொகுதியின் தென் எல்லையில் அடங்கியிருந்தன.

1946 இல் ஏற்படுத்தப்பட்ட அப்போதைய பொத்துவில், கல்முனை ஆகிய இரு தேர்தல் தொகுதிகளையும் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளே பிரதிநிதித்துவப்படுத்தினர்.

1948 பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. சுதந்திர இலங்கையின் முதற் பிரதமரும் சுதந்திரத்திற்கு முன்பு விவசாய, காணியமைச்சராகவும் இருந்தவரான காலஞ்சென்ற டி.எஸ்.சேனநாயக்க ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபையின் கீழ் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் என அழைக்கப்பட்ட நீர்ப்பாசனக் குடியேற்றத்திட்டத்தை உருவாக்கி இலங்கையின் வடக்கு –கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள மாவட்டங்களிலிருந்து சிங்களவர்களை அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியாக விளங்கிய ‘பட்டிப்பளை’ ஆற்றுப் பிரதேசத்தில் குடியேற்றினார். காலவரையில் இக்குடியேற்றம் பெருகி தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமான ‘பட்டிப்பளை’ ஆற்றுப்பிரதேசம் ‘கல்லோயா’ எனப் பெயர் மாற்றம் பெற்று சிங்களமயமானது.

பின்பு 1959 இல் மீண்டும் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்டபோது அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கில் புதிய கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளுடன், தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமான பட்டிப்பளை ஆற்றுப் பிரதேசத்தில் கல்லோயாத்திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களவர்களின் நன்மை கருதி சிங்களப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதியாக ‘அம்பாறை’ எனும் புதிய தேர்தல் தொகுதியும் உருவானது.

அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியை அதாவது, 1947 – 1959 ஆம் ஆண்டு வரை அப்போதைய கல்முனை, பொத்துவில் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சியில் உள்ளோரிடமிருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தங்கள் தேர்தல் வெற்றிகளை உறுதி செய்யும் வகையிலேயும், இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்காதவகையிலேயும் திட்டமிட்டு 1959 இல் புதிதாக உருவான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வகுக்கப்பட்டன.

அம்பாறை சிங்களப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்ட அதேவேளை புதிய கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகள் இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு முஸ்லிம் பெரும்பான்மையாக வரக்கூடியவாறு உருவாக்கப்பட்டமை இப்பிரதேச மக்களுக்கு இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளால் இழைக்கப்பட்ட அரசியல் பாரபட்சமாகும். மறைந்த எம்.எஸ்.காரியப்பர் தமிழரசுக்கட்சியுடன் நல்ல உறவை வைத்துக் கொண்டுதான் இப்படியான தமிழர்களுக்குப் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

1959 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவாறு புதிய மட்டக்களப்புத் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது. அதேபோல் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டது.

ஆனால்! இதே வாய்ப்பு அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு – தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு – வழங்கப்படாது அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டது. உண்மையில் என்ன நடந்திருக்க வேண்டுமென்றால் 1959 இல் உருவான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளிலொன்றை இரட்டை அங்கத்தவர் தொகுதி ஆக்கி இப்பிரதேசத்தமிழர்களுக்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்க ஆவன செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது இப்பிரதேசத்திலிருந்து தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படக் கூடியவாறு தமிழ்ப் பெரும்பான்மைத் தொகுதியொன்றிற்கான எல்லைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.

1959 இல் இப்பிரதேசத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் தவறு காரணமாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள், சுதந்திர இலங்கையில் 1947 இலிருந்து 1976 ஆம் ஆண்டின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் போது உருவான புதிய பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடந்த 1977 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகக் காலஞ்சென்ற ம.கனகரட்ணம் தெரிவு செய்யப்படும்வரை சுமார் முப்பது ஆண்டுகள் (1947 – 1977) தங்களுக்கென்று தங்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதியொருவரைக் கொண்டிருக்கவில்லை. இது அவர்களது சமூக, பொருளாதார, அரசியல் இருப்பிற்குப் பெரும் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்தியது.

சுதந்திர இலங்கையின் போது விந்தனைப்பற்றுப் பிரதேசம் அப்போதைய (1947) மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாணத்துள் அமைந்திருந்தது. இது பின்னர் மொனராகலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு ஊவா மாகாணத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1959 இல் அம்பாறை தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்ட போது மேற்கூறப்பட்ட விந்தனைப்பற்று இத்தொகுதிக்குள் அடங்கியிருக்கவில்லை.

1959ஆம் ஆண்டின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது உருவான அம்பாறை, கல்முனை, பொத்துவில், நிந்தவூர் ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாக 10.04.1961 இல் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி துண்டாடப்பட்டு புதிய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதிய அம்பாறை மாவட்ட உருவாக்கத்தின் போது விந்தனைப்பற்று பிரதேசம் மொனராகலை மாவட்டத்தில் ஊவா மாகாணத்தில் அடங்கியிருந்தது. அப்போது இப்புதிய அம்பாறை மாவட்டம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாக உருவானதால் இம்மாவட்டம் உருவாவதற்கு இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதரவு கொடுத்தனர்.
குறிப்பாக இம்மாவட்ட உருவாக்கத்திற்குக் காலஞ்சென்ற எம்.எஸ்.காரியப்பர் உடந்தையாக இருந்தார்.

மேற்கூறப்பட்ட ‘விந்தனைப்பற்று’ பின்னர் விந்தனைப்பற்று தெற்கு (பதியத்தலாவ) விந்தனைப்பற்று வடக்கு (மகாஒயா) என இரண்டு பிரிவுகளாக்கப்பட்டு பின்பு இவ்விரு பிரிவுகளும் 1976 இல் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இன்று அம்பாறை மாவட்டம் (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) சிங்களப் பெரும்பான்மை மாவட்டமாக ஆக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவுதான் இன்று அம்பாறை மாவட்டத்தில் அம்பாறைத் தேர்தல் தொகுதி நீங்கலான முஸ்லிம் பெரும்பான்மைக் கல்முனைக் கரையோர மாவட்டக் கோரிக்கையைச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தின்கீழ் சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட போதும், 1956 இல் இக்குடியேற்றத்திட்டத்தின்கீழ் தாமாகவே காடுவெட்டிக் குடியேறிய தமிழர்கள் இராணுவத்தின் துணைகொண்டு அடித்து விரட்டப்பட்டபோதும், அம்பாறைத் தேர்தல் தொகுதி உருவாக்கத்தின் போதும், ‘அம்பாறைமாவட்டம் உருவாக்கத்தின்போதும் இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுடன் சமரசம் செய்துகொண்டு சலுகைகளை அனுபவித்தார்களே தவிர தமிழர்களுடன் இணைந்து உரிமைக்குப் போராடவில்லை.

கல்முனைக் கரையோர மாவட்டத்தை அம்பாறை மாவட்டத் தமிழர்கள் விரும்பாத காரணம்.

கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக சுதந்திர இலங்கையில் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் முஸ்லிம் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதிகளின் கீழும், முஸ்லிம் பெரும்பான்மை நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அலகுகளின் கீழும் உள்வாங்கப்பட்டிருந்த காலத்தில் தங்கள் வாழ்விடங்களையும், வயற்காணிகளையும், வணக்கஸ்தலங்களையும் படிப்படியாக இழந்தமைதான் கடந்தகால அனுபவங்களாகும்.

அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ்க்கிராமங்கள், தமிழ்ப்பாடசாலைகள் முஸ்லிம் மயப்படுத்தப்பட்டன. முஸ்லிம் அரசியல்வாதிகளின் தமிழர் விரோத நடவடிக்கைகளும் – அவர்கள் கொண்டிருந்த அரசியல் செல்வாக்கும் – அவ்வரசியல் செல்வாக்கினால் தேடிக்கொண்ட பொருளாதார பலமும் – அவ்வப்போது அவர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட தமிழ் – முஸ்லிம் இனக்கலவரங்களும் இத்தகைய இழப்புக்களுக்கு ஊக்கியாக அமைந்தன. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் கல்முனையை இதற்கு உதாரணமாகக் காட்டமுடியும்.

இப்படியான இழப்புக்கள் நிகழ்ந்து அம்பாறை மாவட்டத் தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகி நிர்க்கதியாகியிருந்த வேளைகளிலெல்லாம் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் இப்பகுதிக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை வெறுமனே ஓதிவிட்டுச் சென்றார்களேயொழிய பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பரிகாரம் பெற்றுக் கொடுக்கவோ அல்லது அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவோ அவர்களால் இயலாது போயிற்று. இன்றும் அதுதான் தொடர்கிறது.

இத்தகையதொரு பின்புலத்தில்தான் தங்கள் சமூக, பொருளாதார, அரசியல் இருப்பை எதிர்காலத்தில் தக்கவைத்துப் பேணிப்பாதுகாப்பதற்காக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தங்களுக்கென்று தனியான தமிழ்ப்பெரும்பான்மை நிர்வாக அலகுகளையும் (பிரதேச செயலாளர் பிரிவு), உள்ளூராட்சி அலகுகளையும் (பிரதேச சபைகள்). கோரத்தலைப்பட்டார்கள். 1967 இல் கல்முனையில் நிகழ்ந்த தமிழ் – முஸ்லிம் இனக்கலவரத்தின் பின்னர் காலஞ்சென்ற தோ.அந்தோனிப்பிள்ளை தலைமையிலான கல்முனை முன்னேற்றச் சங்கம் அப்போதைய ஸ்தலஸ்தாபன அமைச்சர் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அமரர் மு.திருச்செல்வம் கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியை பிரிக்கும் எல்லையாகக் கொண்டு அப்போதைய கல்முனைப்பட்டின சபையை இரண்டாகப் பிரித்து இதன் பகுதியை முஸ்லிம் பெரும்பான்மை அலகாகவும், வடபகுதியை தமிழ்ப் பெரும்பான்மை அலகாகவும் உருவாக்கித் தருமாறு கோரிக்கை விடுத்ததிலிருந்து இது ஆரம்பமாயிற்று.

அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தங்கள் இருப்பைப் பேணிப் பாதுகாப்பதற்கும், தங்கள் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கான திட்டங்களைத் தாங்களே வகுத்து மேற்கொள்வதற்கும் தங்களுக்கென்று தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிருவாக அலகுகள் (பிரதேச செயலாளர் பிரிவுகள்), உள்ளூராட்சி அலகுகள் (பிரதேச சபைகள்), பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகிய மூன்று அடிப்படைக் கட்டுமானங்களும் அவசியம்.

இதற்கு அடிப்படையாக முதலில் வேண்டப்படுவது தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிருவாக அலகுகளேயாகும். அம்பாறை மாவட்டத் தமிழர்களின் பின்வரும் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

(i) கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு தரமுயர்த்தல்.
(ii) பொத்துவில் (வடக்கு) தமிழ்ப்பிரதேச செயலகப் பிரிவு உருவாக்கம்
(iii) சம்மாந்துறைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு உருவாக்கம்.
(iv) ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச சபையின் எல்லைப்பிரச்சினை.
(v) காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச சபையின் எல்லைப் பிரச்சினை.

மேற்கூறப்பட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் கடந்த ஐம்பது வருடங்களாக எடுத்துக் கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு கட்டமாக 1994 – 2000 ஆம் ஆண்டு கால பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் நியமித்த ‘பனம்பாலன’ ஆணைக்குழுவிடம் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் விபரமான யோசனைகள் அடங்கிய மகஜரைச் சமர்ப்பித்ததுடன் ஆணைக்குழு முன் நேரில் சாட்சியமளித்தது. ஆணைக்குழுத் தலைவர் எமது நியாயமான கோரிக்கைகளை உடன்பாட்டு ரீதியாக ஏற்றுக் கொண்டிருந்த நிலையிலும் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு அப்போதைய அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாகவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கவில்லை. அப்போதைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரோடு இது குறித்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தினர் கலந்துரையாடிய போது எமது கோரிக்கையிலுள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அப்போதைய அமைச்சருமான எம்.எச்.அஸ்ரப்புடன் பேசி ஓர் உடன்பாட்டிற்கு வருமாறு அறிவுரை வழங்கினார்.

எமது மேற்படி கோரிக்கைகளையிட்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்போது அரசியல் அரங்கில் முன்வைத்திருந்த தென்கிழக்கு அலகு சம்பந்தமான எனது கருத்துக்களுக்கும் கூர்ந்து செவிமடுத்த அஸ்ரப் இதுபற்றிப் பேச அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்துடன் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள விரும்பியிருந்தார். துரதிஷ்டவசமாக அப்போதைய (1994- – 2000) பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் 2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் காலத்தில் அவர் அகாலமாக மரணித்ததும் அவர் விரும்பியிருந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட முடியாமற் போனமைக்குக் காரணமாயிற்று. மேற்கூறப்பட்ட சந்திப்பில் சகோதரர் எம்.ரி.ஹஸனலி நேரடியாகக் கலந்து கொள்ளாவிட்டாலும் இச்சந்திப்பு பற்றி அறிவார்.

தாங்கள் வாழும் பிரதேசத்தின் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் கலாசார, பண்பாட்டுக்கு ஏற்றவகையிலான சமூக, பொருளாதார நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளவும் அரசாங்கம் மேற்கொள்ளும் நிர்வாக மற்றும் உள்ளுராட்சிச் சீர்திருத்தங்கள் – சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் -புனர்வாழ்வு, புனரமைப்பு, நிவாரண கொடுப்பனவுகள் – வன்செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டுக்கொடுப்பனவுகள், சலுகைகள் – ஜனசவிய, சமுர்த்தி, திவிநெகும போன்ற வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் – அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீடுகள் என்பவற்றின் பயன்பாடுகளைப் பாரபட்சமின்றிப் பெற்றுக்கொள்ளவும் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கென தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிருவாக அலகுகள் அவசியமானவை.

ஏனெனில் மேற்கூறப்பட்ட விடயங்கள் யாவும் நிர்வாக அலகுகள் மட்டத்தில்தான் அதாவது பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவே அமுல் செய்யப்படுகின்றன. பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் கூட பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. மாகாண அரசின் நிதியும் பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் அதன் அதனடிப்படையில் அமைந்த பிரதேச சபை ரீதியாகவும் தான் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சில அரசாங்க நியமனங்கள் கூட பிரதேச ரீதியாகவே வழங்கப்படுகின்றன. இவற்றிலெல்லாம் பாரபட்சமின்றித் தங்களுக்கு உரித்தான நியாயமான பங்கை அனுபவிக்க இத்தனியான பிரதேச செயலகங்கள் மூலம் வாய்ப்பு ஏற்படும்.

தென்கிழக்கு மாகாணம் அல்லது பிராந்தியம் என அரசியல் அரங்கிலே இன்று வர்ணிக்கப்படும் முஸ்லிம்களுக்கான உத்தேச தனித்துவ அரசியல் அலகு தமிழர்களுக்குச் சமமான அதிகாரப் பகிர்வுடன் தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, சம்மாந்துறைப்பற்று, கரவாகு-நிந்தவூர்ப்பற்று ஆகிய இறைவரி உத்தியோகத்தர் பிரிவுகளையும் வேகம்பற்று தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் உள்ளடக்கிய நிலப்பரப்பில் அமையவேண்டும். இத்தனியான முஸ்லிம் அரசின் ஆளுகையின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் இனம்காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களும் கொண்டுவரப்படல் வேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முன்மொழிந்துள்ள யோசனைகளின் ஒட்டுமொத்த வடிவம் ஆகும். (ஆதாரம் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13ஆவது தேசிய மாநாட்டு மலர் (02.04.1995) பக்கங்கள் 31,32)

மேற்கூறப்பட்ட நிலப்பரப்பானது 1976 இல் எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலப்பரப்பு அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லைக்கிராமமான பெரிய நீலாவணையிலிருந்து தெற்கே பொத்துவில் பாணமைவரை மக்கள் செறிந்துவாழும் சுமார் 72 கிலோமீற்றர் நீளமான கரையோரப் பிரதேசத்தை உள்ளடக்கியதாகும். இதில் அக்கரைப்பற்றிலிருந்து தெற்கே பொத்துவில் வரையிலான கரையோரப்பிரதேசத்தில் தமிழர்கள் முஸ்லிம் கலப்பின்றி தொடர்ச்சியாக வாழும் சுமார் 45 கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பு உண்டு.

இத்தனித் தமிழ் நிலப்பரப்பு தற்போதைய ஆலையடிவேம்பு, திருக்கோவில் தமிழ்ப்பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் வடபாதியையும் (உத்தேச பொத்துவில் (வடக்கு) தமிழ்ப்பிரதேச செயலகப்பிரிவு) கொண்டுள்ளது. இதைத் தவிர உத்தேச தென்கிழக்கு அலகினுள் காரைதீவு தமிழ்ப்பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவு, கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு மற்றும் உத்தேச சம்மாந்துறை தமிழ்ப்பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நாவிதன்வெளி தமிழ்ப்பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவும் அடங்குகின்றன.

அத்துடன் நிந்தவூர் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் ‘அட்டப்பள்ளம்’ எனும் பழந்தமிழ்க் கிராமமும், மாட்டுப்பளை மீனாட்சி அம்மன் ஆலயமும், அட்டாளைச் சேனை முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் ‘திராய்க்கேணி’ எனும் தமிழ்க்கிராமமும், இறக்காமம் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழ்வரும் (முன்பு சம்மாந்துறை முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ்) ‘மாணிக்க மடு’ எனும் தமிழ்க்கிராமமும், லகுகல சிங்களப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் பிரசித்தி பெற்ற உகந்தை முருகன் ஆலயமும் அடங்கும். ஆனால் உத்தேச தென்கிழக்கு முஸ்லிம் மாகாண அலகின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் இனம் காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களும் கொண்டுவரப்படல் வேண்டும்.

என முன்மொழிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேச தென்கிழக்கில் இனம் காணப்பட்ட மேற்கூறப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களையிட்டு மௌனம் சாதித்தமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கினை அன்றே இனம் காட்டியுள்ளது. கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்மொழியப்பட்ட உத்தேச தென்கிழக்கு அலகின் வடிவம் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் இருப்பை மறுதலித்த – கேள்விக்குறியாக்கிய ஒன்றாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கோரும் கல்முனைக் கரையோர மாவட்டத்தின் நிலப்பரப்பும் அது முன்னர் முன்வைத்த உத்தேச தென்கிழக்கு முஸ்லிம் மாகாண நிலப்பரப்பும் ஒன்றாகவே அமைவதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கரையோர மாவட்டக் கோரிக்கையைத் தமிழர்கள் சந்தேகக்கண் கொண்டே நோக்க வேண்டியுள்ளது. உத்தேச தென்கிழக்கு அலகினால் சாதிக்க நினைத்ததைத் தற்போது வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட பின் உத்தேச கல்முனைக் கரையோர மாவட்டத்தினால் சாதிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயல்வது போல் தெரிகிறது.
தம்பியப்பா. கோபாலகிருஸ்ணன்
(மாவட்ட இணைப்பாளர்,
அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம்)

 

ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ

முஸ்லிம் மக்களின் கருத்து

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரும் தென் கிழக்கு நிர்வாக அலகு என்பது தனி நாடு அல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்படும் போதே மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்த கோரிக்கையை முன்வைத்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது இக்கோரிக்கை உட்பட ஏழு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு வழங்கியுள்ளார்.

இதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரும் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இப்போது இந்த கோரிக்கையை திரிபுபடுத்தி இனமோதலை ஏற்படுத்தி சிலர் அரசியலில் குளிர்காய எத்தனிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் எம்.ரி. ஹசன் அலி வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது குற்றஞ்சாட்டினார்.

அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகிறது,

கேள்வி: கடந்த புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார் த்தை தொடர்பில் கூறுங்கள்?
பதில்: முஸ்லிம் காங்கிரஸிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என்று நீண்டகாலமாக ஆலோசிக்கப்பட்டு வந்த ஒன்றாகும். அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் தமிழ்க் கிராமங்களும் முஸ்லிம் கிராமங்களும் மாறி மாறிக் காணப்படுகின்றன. இவ்வாறான பிரதேசங்களில் சிறிய சிறிய பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமானது. இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது, அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் முன்வராத காரணத்தினாலும், தலைமை வகிக்காத காரணத்தினாலும், பொதுபலசேனாவுடன் இணைந்த சில சக்திகள் பொதுபலசேனாவிடம் இந்த பிரச்சினையைக் கொண்டு செல்கின்றன. மேலும், சில பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் முறையிடுகின்றன. இவ்வாறு செயற்பட்டு சாதாரண பிரச்சினையை பெரிதாக்குகின்றன. இதனை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, நாங்கள் தலைமைத்துவத்தினை பெற்றிருக்க வேண்டும்.
உதாரணமாக, கல்முனையை எடுத்துக்கொண்டால் ஒரேயொரு பிரதேச செயலாளர் காரியாலயம் மாத்திரமே இருக்கின்றது. 1987 ஆம் ஆண்டு, 1990 ஆம் ஆண்டுகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சினை ஏற்பட்டபோது, இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் முஸ்லிம் பிரதேசங்களுக்குச் செல்லமுடியாத நிலைமையும், முஸ்லிம் மக்கள் தமிழர் பிரதேசங்களுக்குச் செல்ல முடியாத நிலைமையும் ஏற்பட்டது. இதன் காரணமாக மேலதிகமான காரியாலயம் ஒன்று கல்முனையில் நிறுவப்பட்டது. அந்த காரியாலயமே இதுவரை இயங்கி வருகின்றது. தற்போது அதனைத் தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதற்கு முஸ்லிம் மக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதற்கு நாங்களும் எதிப்புத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் கலந்துரையாடியுள்ளோம்.
ஆனால், இதில் இருக்கின்ற பிரச்சினை என்னவெனில், அதனை ஓர் தனிப் பிரதேச செயலாளர் பிரிவாக தரமுயர்த்துகின்ற போது, அதற்கான எல்லையை வகுக்கவேண்டியுள்ளது. அந்த எல்லையை வகுப்பதற்கு இரண்டு சமூகங்களும் ஒன்றிணைந்து எல்லையை வகுக்க வேண்டும். முன்னர் மேலதிக காரியாலயம் நிறுவப்பட்ட போது, புலிகளின் ஆதிக்கம் காணப்பட்டிருந்தது.
ஆகவே, அவர்கள் கூறியதற்கு இணங்கவே எல்லைகள் வகுக்கப்பட்டன. அவ்வாறான எல்லை வரையறையை இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று முஸ்லிம் மக்கள் தெரிவிக்கின்றார்கள். முன்னர் எல்லை வகுக்கப்பட்டபோது, குறித்த பிரதேசங்கள் வெற்றுப் பிரதேசங்களாகவே காணப்பட்டிருந்தன. ஆனால், இப்போது முப்பது வருடங்கள் கடந்து விட்டன. எனவே, தற்போது முஸ்லிம் மக்களின் கடைகள், வர்த்தக நிலையங்கள் என அப்பிரதேசம் மிகப்பெரிய அபிவிருத்தியினை அடைந்துள்ளது. எனவே புதிதாக எல்லை வகுக்கும்போது அவர்கள் தமது இடங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எனவே, அரசாங்கத் தரப்பிலுள்ள சிலர் இந்த விடயத்தைப் பெரிதாக்கி சில அமைச்சர்களிடமும், பொதுபலசேனாவிடமும் முறையிடுகின்றனர்.
இதற்கு அமைய அமைச்சர் ஒருவர் இந்தப் பிரச்சினை தொடர்பில் எங்களைக் கலந்துரையாட அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று நாங்கள் அங்கு சென்றிருந்த போது, அங்கு எம்முடன் கலந்துரையாடலை மேற்கொள்ள வந்த எவரும் கல்முனையைச் சேர்ந்தவர்களல்ல. உடனடியாக நாங்கள் எமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தோம். மேலும் குறித்த சந்திப்பில் எமக்கு சில ஆவணங்கள் வழங்கப்பட்டன. அவை அனைத்தும் பொய்யான தகவல்களாகவே காணப்பட்டன.
எனவே எம்முடன் கலந்துரையாட வந்தவர்கள் எவரும் கல்முனையைச் சேர்ந்தவர்களல்ல பொருத்தமானவர்களுடன் மாத்திரமே கலந்துரையாட முடியும் என்று நாங்கள் தெரிவித்திருந்தோம். அதாவது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதே பொருத்தமானது என்று நாங்கள் தெரிவித்துத் திரும்பிவிட்டோம். அந்த வகையில் தான் கல்முனை விடயம் இப்போதும் கையாளப்படுகின்றது.
இந்த விடயத்தில் அரச தரப்பினர் சிலர் தலையிட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரச்சினையையும், முறுகல் நிலைமையையும் கொண்டு வருகின்றனர். இதனையே தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றனர். இதனால் தான் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். இதனைக் கூட்டமைப்பிடம் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளோம். இவ்வாறான செயற் பாடுகளுக்கு தொடர்ந்தும் இடம்கொடுக்க முடியாது என்பதற்காகவே நாங்கள் அண்மை யில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையினை நடத்தியிருந் தோம்.
கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தையில் ஏதாவது முடிவு எட்டப்பட்டதா?
பதில்: இடம்பெற்ற விடயங்கள் அனைத்தையும் கூட்டமைப்பினர் அறிந்து வைத்திருந்தார்கள். அவர்கள் எமது கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். இந்தச் சந்திப்பை கல்முனையில் நடத்துவதற்கே திட்டமிட்டிருந்தோம். ஆனால் அரச தரப்பைச் சேர்ந்த குறித்த தமிழர்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் திட்டமிட்டதை அறிந்த பின்னரே அந்த முடிவைக் கைவிட்டோம். இந்தப் பேச்சுவார்த்தை மூலம் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம். அடுத்த எமது சந்திப்பு, பிரதேசசபை மட்டத்தில் இடம்பெறவுள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எமது மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன. தமிழ்- –முஸ்லிம் மக்களுக்கிடையிலான முறுகல் நிலைமையைத் தவிர்ப்பதே இதற்குக் காரணமாகும்.
அதைவிடுத்து, ஜனாதிபதி தேர்தலுக்காகவோ அல்லது வேறு விடயங்களுக்காகவே நாம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எமது இந்தப் பேச்சுவார்த்தையினை, சிங்கள ஊடகங்கள் தமிழ்-, முஸ்லிம் தலைமைகள் தமிழீழத்துக்காக முயற்சிக்கின்றார்கள் என விமர்சிக்கின்றன. இதை வைத்து சில பெரும்பான்மை அரசியல்வாதிகள் தமது ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களையே ஆரம்பித்துள்ளன.
கேள்வி: கரையோர மாவட்டங்கள் தொடர்பில் என்ன பிரச்சினைகள் நிலவுகின்றன. அது தொடர்பில் குறிப்பிடுங்கள்?
பதில்: கரையோர மாவட்டங்களை நாங்கள் கோருவது தொடர்பில் சிலர் தவறாக நினைக்கின்றனர். எமது கரையோர மாவட்டக் கோரிக்கை இன்று அல்லது நேற்று விடுக்கப்பட்ட கோரிக்கையல்ல. எமது கட்சியை ஆரம்பித்த 1986 ஆம் ஆண்டு வெளியிட்ட எமது கொள்கைப் பிரகடனத்திலேயே இந்தக் கோரிக்கையினை முன்வைத்திருந்தோம். தொண்டமான்- – அஷ்ரப் ஒப்பந்தத்திலேயே இது உள்ளடக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தலைமைகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திலும் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது. சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் காலத்திலும் கரையோர மாவட்டக் கோரிக்கையை முன்வைத்திருந்தோம். அதனை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார். அதேபோல் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இது தொடர்பில் உடன்படிக்கைகளை செய்துள்ளோம். 2007ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும்போதும் இந்தக் கோரிக்கையினை முன்வைத்திருந்தோம். அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் ஏற்றுக்கொண்டிருந்தார். கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட போதும் இந்த விடயத்தை முதன்மையாக நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். அதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கமும் கையெழுத்திட்டது. ஆனால், இப்போது மீள்வும் இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைக்கின்றபோது, இதனைப் புதிய விடயமாகப் பார்க்கின்றனர்.
ஏற்கனவே மொனராகலை மாவட்டத்திலிருந்து சில பிரதேசங்களை கல்முனையுடன் இணைத்து உருவாக்கப்பட்டது தான் அம்பாறை மாவட்டம். அத்துடன் தலைநகராக இருந்த கல்முனையை அம்பாறைக்கு மாற்றினர். இது தான் இனவாதம். முன்னர் எமக்கிருந்த அதிகாரத்தை மீண்டும் கோருவது இனவாதமா?அல்லது அம்பாறை உருவாக்கப்பட்டது இனவாதமா? அப்போது இந்த மாவட்டத்தில் மூன்று தொகுதிகளே இருந்தன. கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகியவையே இத்தொகுதிகளாகும். 1960களின் இறுதியில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தி அம்பாறை தொகுதியொன்றையும் ஏற்படுத்தி கொண்டார்கள். எமது பிரச்சினை என்னவென்றால் சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய பிரதேசங்கள் மக்கள் செறிந்து வாழும் கடலோரப் பிரதேசங்களாகும். கடற்கரை பிரதேசத்தை தாண்டிய பிரதேசங்கள் வயல் பிரதேசங்களாகவும் காடுகளாகவும் இருக்கின்றன. இந்த மக்களின் வயல்கள் அந்தப் பிரதேசத்திலேயே இருந்தன.
1986 ஆம் ஆண்டு புதிய பிரதேச சபை சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. முன்னர் இருந்த டி.ஆர்.ஓ. முறை மாற்றப்பட்டு புதிய பிரதேச சபை சட்ட மூலம் அமுலுக்கு வந்தது. அப்போது எல்லை நிர்ணய சபையொன்றை நியமித்து எல்லைகளை எப்படி பிரிப்பது என மக்களின் கருத்துக்கள் கண்டறியப்படவில்லை. ஆறில் ஐந்து அதிகாரத்தை கொண்டிருந்ததால் அப்போதைய அரசு கொழும்பில் இருந்து கொண்டே எல்லையை நிர்ணயித்து பிரதேச சபைகளை உருவாக்கினர்.
டட்லி சேனாநாயக்க ஆட்சியின் போது கரையோரப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு பொத்துவில் பிரதேசத்தில் விவசாயத்துக்கென காணிகள் வழங்கப்பட்டன. இங்கு சிங்கள பிரதேசங்களும் இருக்கின்றன. கரையோர மக்கள் அப்பகுதிகளுக்கு சென்று விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் யுத்தம் ஆரம்பமானது.
ஆரம்பமானவுடன் கரையோரத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் விவசாயம் செய்ய அப்பகுதிகளுக்கு போக முடியாத நிலை ஏற்பட்டது. 30வருட நீடித்த யுத்தம் காரணமாக முஸ்லிம் மக்கள் விவசாயம் செய்த காணிகள் காடுகளாக மாறிவிட்டன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது மக்கள் அக்காணிகளுக்கு சென்று விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்க முற்பட்ட போது சிக்கல்கள் ஏற்பட்டன.
ஏற்கனவே கொழும்பிலுள்ள அதிகாரிகள் ஹெலிகொப்டரில் இப் பிரதேசத்தை பார்வையிட்டு இப்பிரதேசத்தை கொழும்பிலிருந்து கொண்டே வனப் பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தி வர்த்தமானியிலும் பிரசுரித்துவிட்டனர். எமது மக்கள் அங்கு சென்ற போது இது வனப் பாதுகாப்பு பிரதேசம். இதில் விவசாயம் செய்ய முடியாதென வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து அவர்களை வெளியேற்றிவிட்டனர். வனப் பாதுகாப்பு பிரதேசமொன்றை பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் முன்னர் அப்பகுதி பிரதேச சபை மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த விடயத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்த விவசாய காணிகளில் விவசாயத்தை மேற்கொள்ள மக்களுக்கு இடமளிக்கப்படாததால் அம்மக்கள் காணி உறுதியுடன் எம்மிடம் வந்து முறையிட்டனர். சுமார் 25000 முதல் 30000 ஏக்கர் வரையிலான முஸ்லிம்களின் விவசாய காணிகள் இவ்வாறு பறிபோயுள்ளன.
கேள்வி: – இது தொடர்பாக நீங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லையா?
பதில்: – நாங்கள் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றோம். நாங்கள் அரசாங்க அதிபர், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பாராளுமன்ற ஆலோசனை குழு ஆகியவற்றிலும் இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்கிறோம். பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகளுக்கு இந்த விடயத்தை நிறைவேற்றிக்கொடுக்கும்படி உத்தரவிடுவார். நாங்கள் எழுந்து அப்பால் சென்றதும் அதே அமைச்சர் அந்த அதிகாரிகளுக்கு இந்த விடயம் குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாமென உத்தரவிடுவார்.
காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது அதற்கான அடிக்கட்டைகள் மாவட்ட செயலகங்களில் இருக்கும். இந்த அடிக்கட்டைகளை யுத்தம் முடிந்த பின்னர் மாவட்ட செயலகத்தில் தீயிட்டு எரித்துள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்துக்கும் மாவட்ட செயலகம் அம்பாறையில் இருப்பது தான் காரணமாகும். அம்பாறை மாவட்ட செயலகம் ஆரம்பிக்கப்பட்டு 53 வருடங்கள் ஆகின்றன. இருந்தும் இன்று வரை ஒரு தமிழ் பேசும் நபர் கூட மாவட்ட செயலாளராக நியமிக்கப்படவில்லை. இப்போதுள்ள சனத்தொகை அடிப்படையில் தமிழ் பேசும் மக்களே இங்கு பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
வடக்கு, கிழக்குக்கு வெளியே மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். வடக்கு கிழக்கில் மூன்றில் ஒரு பகுதியினரே வாழ்கின்றனர். இருந்தும் அம்பாறை மாவட்டத்தில் தான் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள ஏழு பிரதேச சபைகளை நாம் கைப்பற்றி பரிபாலித்து வருகின்றோம். முஸ்லிம் காங்கிரஸ் 6 பிரதேச சபைகளையும் அதாவுல்லாஹ்வின் கட்சி இரண்டு பிரதேச சபைகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
மொத்தத்தில் இப்பிரதேசத்தில் முஸ்லிம்களே ஆட்சி புரிகின்றனர். இப்பிரதேசத்தில் நான்கு அல்லது ஐந்து முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவர். கிழக்கு மாகாண சபையிலும் ஆளுங்கட்சியை தீர்மானிப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது. முஸ்லிம்கள் ஒருமித்து வாக்களித்தால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை நாமே கைப்பற்றுவோம். இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் தலைமை உருவாவதால் வடக்கு கிழக்குக்கு வெளியே வசிக்கும் முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நாமே அதற்கு எதிராக குரல் கொடுப்போம். தர்கா நகர் சம்பவம், தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவம் ஆகியவை தொடர்பாக நாங்களே முதன்முதலாக குரல் எழுப்பினோம்.
இது தொடர்பாக ஜனாதிபதியுடன் அமைச் சரவையில் வாக்குவாதப்பட்டதுடன் இப்பிரச்சினை குறித்து சர்வதேச மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடமும் முறையிட்டோம். இவை அனைத்தையும் செய்தது நாங்களே. முஸ்லிம் தலைமை அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டும் தான் வரமுடியும். அமைச்சர் பௌஸி இருக்கின்றார். அவர் ஒரு முஸ்லிம் மாத்திரமே. அவர் முஸ்லிம்களின் பிரதிநிதி எனக் கூறமுடியாது.
அவர் சிங்கள மக்களின் வாக்குகளிலேயே வெற்றி பெற்றுள்ளார். ஏ.ஆர்.எம்.ஏ காதரும் இப்படித்தான். இவர்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகள் எனக் கூறமுடியாது. தம்புள்ளை பள்ளிவாசலுக்குள் கைக்குண்டு எறியப்பட்ட போது அங்கு வெடி கொளுத்திப் போடப்பட்டதாகவே அவர் தெரிவித்தார். அவர் அப்படித்தான் கூறவேண்டும். ஆனால் எம்மால் குண்டுகளே எறியப்பட்டன என அச்சமின்றி தெரிவிக்க முடியும். ஏனென்றால் எமது வாக்குவங்கியை எவராலும் அசைக்க முடியாது.
மக்கள் எங்களுடனேயே இருக்கின்றனர். இங்கிருந்து முஸ்லிம் தலைமைகள் உருவாவதை தடுக்கும் வகையிலேயே முஸ்லிம்களின் இனப்பரம்பலை குறைப்பதற்கு குடியேற்றங்களை மேற்கொள்வது இங்கு தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் சிறு பிரச்சினைகளில் கூட அநாவசியமாக தலையிட்டு அதை பூதாகரப்படுத்தி மோதல்களை ஏற்படுத்துவது போன்ற கைங்கரியங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த விடயங்களுக்கு எம்மவர்கள் சிலரும் துணை போகின்றனர். தேசிய ரீதியாக முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து உருவாகும் முஸ்லிம் அரசியல் தலைமைகளே தலையிட்டு தீர்வு பெற்றுக் கொடுக்கின்றது.
இதை பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் தனி நிர்வாக அலகை கோருகின்றோம். இது அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினை மாத்திரமல்ல அனைத்து முஸ் லிம்களினதும் பிரச்சினையாகும். தலை வர் அஷ்ரப் இது குறித்து தெளிவாக விளக் கியுள்ளார். 1983ஆம் ஆண்டு தமிழர்கள் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட போது அரசாங்கமே அவர்களை கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தது. ஏனென்றால் அது அவர்களது தாயகம். இதேபோல் இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் தாயகம் எமது பிரதேசம் தான். எவ்வளவோ பிரச்சினைகள் ஏற்பட் டன. புலிப்பிரச்சினையும் ஏற்பட்டது.
அதையும் நின்று பிடித்து தாங்கிக் கொண்ட பிரதேசம் அம்பாறை மாவட்டம். சம்மாந் துறை தொகுதி, கல்முனை தொகுதி மற்றும் பொத்துவில் தொகுதி ஆகியன ஒன்றிணைந்த தென் கிழக்கு நிர்வாக அலகையே நாம் கோருகின்றோம். 70 சதவீதமான தமிழ் பேசும் மக் கள் இங்கு வசிப்பதால் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தை எம்மால் தமிழ் மொழி யிலேயே நடத்த முடியும். இப்போது விவ சாயிகள் தமது பிரச்சினைகளை அரசாங்க அதிபரிடம் தெரிவிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. ஏனென்றால் அவருக்கு தமிழ் தெரியாது.
தனி நிர்வாக அலகை நாங்கள் கோரும் போது அதை இனவாதமென முத்திரை குத்தி கொச்சைப்படுத்துகின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனி நிர்வாக அலகை ஒவ்வொரு கட்டத்திலும் முன்னிலைப்படுத்தி வந்துள்ளது. அரசாங் கத்துடனோ அல்லது வேறு தரப்பினருடனோ ஒப்பந்தங்கள் அல்லது பேச்சுவார்த்தைகளை நடத்தும்போது தனி அலகு விடயத்தை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்.
மொத்தத்தில் நாங்கள் தனிநாடு கோரவில்லை. அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட தென்கிழக்கு கரையோர நிர்வாக அலகையே நாங்கள் கோருகின்றோம். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

 

Leave a Reply