பலூன்!

Man blowing air into a balloon“மாமா பெரிசாக ஊதாதையுங்கோ….. அப்பா….. மாமாவை ஊதவேண்டாம் என்று சொல்லுங்கோ…..“

என்று கண்கள் அகல விரிய முகத்தில் பயம பரவ சத்தமாக கத்தி அழுதுகொண்டு காதுகள் இரண்டையும் தனது பிஞ்சுக் கைகளால் பொத்திக்கொண்டு ஓடிப்போய் இரு கண்களையும் இறுக மூடிக்கொண்டு கதிரைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டான் எட்மன். எட்மனுக்கு 9 வயது தான் ஆகிறது. அந்தக் குடும்பத்தில் மூத்த பையன்.

5 வருடங்களின் முன்னர் அவன் மிகச் சுட்டிப்பையன். அவனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது தத்தளிக்கும் அவனது பெற்றோரும் அம்மம்மாவும், 4 வயதிலேயே அவனது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் விவேகமும் திறமையும் அவர்களை ஆச்சரியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது.

அவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். கிறிஸ்மஸ் என்றாலே அவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அவர்களது வீட்டை பலூன்கள் அலங்கார வளைவுகள் என்பவற்றுடன் கிறிஸ்மஸ் மரத்தினை வர்ண வர்ண மின்குமிழ்கள் கொண்டு அலங்கரித்து தமது அனைத்து வசதிகளையும் முயற்சியையும் வெளிப்படுத்தி தமது ஆனந்தத்தை பகிர்ந்து கொள்வார்கள். பலூன்கள் ஊதி கட்டி அலங்கரிப்பதற்குள், ஒவ்வொரு பலூனாக அவற்றின் மேல் விழுந்து உடைத்து விட்டு, கொக்கட்டம் போட்டுச் சிரிப்பான் எட்மன்.

சில வேளைகளில் எட்மனின் சுட்டித்தன வேலைகளை நிறுத்த அவனுக்கு ஒரு அடி போட்டு பலூன் உடைப்பதை நிறுத்த முயற்சி செய்வாள் அம்மா மேரி.
அம்மம்மா மரியமோ ‘ ஏன்டி பிள்ளைக்கு அடிக்கிறாய்…..? ‘
என்று மகள் மேரிக்குத் திட்டிவிட்டு எட்மனைக் கூட்டிக்கொண்டு கடைக்குச் சென்று ஒரு பக்கற் பலூன் வாங்கி வந்து அவன் உடைப்பதற்கென்றே அப்பக்கற்றில் இருக்கும் 50 பலூன்களையும் ஒவ்வொன்றாக ஊதிக்கொடுத்து உடைக்கச் செய்வாள்.அப்பலூன்களை உடைப்பதற்காக ஒவ்வொரு பலூன்களின் மேலும் விழுந்து அவன் உடைக்க எடுக்கும் முயற்சியையும் உடைந்தபின்னர் அவன் ஏதோ ஒரு சாதனை செய்து விட்டது போன்று பெரிதாகச் சிரித்து ஆனந்தமடையும் அப்பிஞ்சினைப் பார்த்து புளகாங்கிதமடைவாள் மரியம்.

எட்மன் அம்மம்மாவின் செல்லக்குட்டி. எனென்றால் அவன் தான் அவளுடன் சேர்ந்து இருக்கும் முதலாவது பேரப்பிள்ளை. மரியத்தின் மற்றப் பிள்ளைகளின் ஊடாக பேரப்பிள்ளைகள் இருந்த போதும் அவர்களுடன் சேர்ந்திருக்கும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் கனடாவிலேயே வசித்து வருகின்றனர். அதனை விட எட்மன் அச்சு அசலாக மரியத்தின் மூத்த பிள்ளை போன்று இருப்பான். எல்லாமாகச் சேர்ந்து மரியத்துக்கு எட்மன் மீது அளவு கடந்த பாசத்தை அள்ளிக் கொட்டியிருந்தது.

இப்படி பலூன் என்றாலே ஊதி உடைத்து அந்தச் சத்தத்தில் சந்தோசமடையும் எட்மன், ஏன் இப்போ பயந்து ஓடுகின்றான் என்றால் அவனது 5வது வயதில் நடந்த பயங்கரமான சம்பவம் ஒன்று தான் காரணமாக இருந்தது. இப்போதும் மாறாத வடுவாகவும் இனிமேலும் அப்படி ஒரு சத்தத்தைக் கேட்டு விடக் கூடாது என்றும், நினைத்தாலே பயங்கரமானதாக நிரந்தரமாக அந்தப் பிஞ்சு நெஞ்சில் ஒட்டிக்கொண்டு விட்டது.

எந்தச் சத்தத்தைக் கேட்டு சிரித்து அளவில்லா ஆனந்தமடைவானோ அதே போன்ற ஒரு வெடிச்சத்தம் அவனுக்கு ஒரு முடிவில்லாத் துன்பத்தைக் கொடுத்து அந்தச் சத்தத்தின் மீது வெறுப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அப்படியொரு சத்தத்தை மீண்டும் கேட்டு விடக் கூடாது என்று எண்ணியது. உள்ளம் உயிர் அனைத்தையும் நடுங்க வைக்கும் பயத்தையும் கொடுத்திருந்தது.

2009ம் ஆண்டு இலங்கையில் இலங்கை அரசின தந்திரக் கதைகளைக் கேட்டு தமது உடமைகள் நிலங்கள் வீடுகளை விட்டு உடுத்த துணிகளுடன் காவிச்செல்லக் கூடிய உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட ‘ பாதுகாப்ப வலயங்கள் ‘ ஒவ்வான்றாகச் சென்று இறுதியாக முள்ளிவாய்கால் கடற்கரையில் அனைவரும் அனல் பறக்கும் வெயிலில் துணிகளாலும் தறப்பாள்களாலும் கூடாரம் அமைத்து தமது உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு விட்டு அடுத்த அறிவிப்புக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு பக்கம் சமுத்திரக்கடல் யாரும் எங்கும் செல்ல முடியாதவாறு தடுத்துக் கொண்டிருந்தது. மறுபக்கம் சுற்றிவர இலங்கையரசின் கொடும் இராணுவப்படைகள் உயிர்க்கொல்லி ஆயுதங்களால் சூட்டையும் ஏவுகணைத் தாக்குதல்களையும் புலிகள் மீது தாக்குவதாகக் கூறிக்கொண்டு தனது சொந்த மக்கள் மீதே ஏவிக் கொன்று கொண்டு முன்னேறியது. உலகில் எந்த நாடும் இலங்கையரசை ஒரு கேள்வி கேட்கவில்லை. பதிலாக அவர்களுக்கு உயிர்க்கொல்லி ஆயுதங்களைக் கொடுத்து உதவியது.

தமது கேந்திர அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இலங்கையைத் தமது கைக்குள் வைத்திருப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு வந்து தமது உதவிகளை வழங்கி இலங்கையைத் தமது பக்கம் சாய்த்துக் கொள்ள முயற்சிகள் செய்தார்கள்.

பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டித் தப்பிக் கொள்ளும் விலாங்கு மீனைப் போல எந்த நாட்டுக்கு எந்தமுகத்தைக் காட்ட வேண்டுமோ அந்த நாட்டுக்கு அந்த முகத்தைக் காட்டி தனது காரியங்களைச் சாதித்ததோடல்லாமல் யாருடைய தொந்தரவுகளுமின்றி மிகப்பெரிய இனஅழிப்பையே செய்து கொண்டிருந்தது இலங்கையரசு. இதனால் உலக நாடுகளால் தயாரிக்கப்படும் அனைத்து புதிய ரகக் குண்டுகளான கொத்துக் குண்டுகள் இரசாயனக் குண்டுகள் விமானக் குண்டுகள் எரிகுண்டுகள் விதம் விதமான ஏவுகணைகள் என அனைத்தும் இலங்கைத் தமிழர்கள் மீது அனைத்து நாடுகளின் ஆசீர்வாதத்துடன் பரிசீலித்துப் பார்க்கப்பட்டது.உலக நாடுகளால் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களினதும் குண்டுகளினதும் பரிசீலனைக் களமாக இருந்த முள்ளிவாய்க்காலிலேயே அந்தப் பிஞ்சின் மனதில் ஆறாத வடுவாக ஒரு சம்பவம் நடந்தேறியது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே கடலில் சென்று குளித்து விட்டு வந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள் மரியம். என்ன கஸ்ரம் வந்தாலும் வெள்ளிக்கிழமை என்றால் கடவுளைப் பிரார்த்தனை செய்வதை நிறுத்தமாட்டார்கள் தமிழர்கள். தமது கஸ்ரங்களையும் துன்பங்களையும் கடவுளிடமே கண்ணீர் விட்டு முறையிட்டு தமது கவலைகளைப் போக்கி நிம்மதியடைவார்கள். அவ்வகையில் மரியம் பிரார்த்தனையை ஆரம்பிக்க எட்மனை மரியத்துடன் விட்டு விட்டு மேரியும் கணவரும் கடலுக்குக் குளிக்கச் சென்றார்கள்.

மரியம் பிரார்த்தனையில் இருக்கும் போது எட்மன் கூடாரத்தின் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தான்.ஏவுகணைகள் ஆங்காங்கு வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. மக்கள் காயப்பட்டுச் செத்துக் கொண்டிருந்தார்கள். தினம் தினம் ஆயிரக்கணக்கில்…. கொத்துக் கொத்தாக….!
ஆரம்பத்தில் தமது சாவுக்கு அஞ்சியவர்கள் இப்போது எதனையும் கருத்தில் எடுப்பதில்லை. திறந்த வெளியில் இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட ‘ பாதுகாப்பு வலயம் ‘ எனுமிடத்தில் இலங்கையரசின் கொடும் இராணுவத்தினால் அங்கிருந்து எங்கும் தம்பி ஓடிவிட முடியாதபடி சுற்றிவளைக்கப்பட்டு வஞ்சகமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கண்மூடித்தனமாக மக்களையே குறிவைத்துத் தாக்கப்படும் ஏவுகணைகளுக்கு அந்த வெள்ளை வெளேரென்ற கடற்கரை மண்ணிலும் கடும் நீலக்கலரில் இருக்கும் சமுத்திரக் கடலிலும் எங்கே சென்று ஒழித்துக் கொள்வது? மூன்று லட்சம் பேரும் எங்கே சென்று மறைந்து கொள்வது..? அதனால் அங்கிருந்த மக்களுக்கு ‘ போற உயிர் எப்போதோ ஒரு நாளைக்குப் போகத் தானே போகிறது…. இனியும் எங்கோ போய் ஒழித்துக் கொள்வது….’ என்று விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டார்கள். ஏவுகணைகள் ஏவப்படும் சத்தங்கள் கேட்ட போதும் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தமது அன்றாட வேலைகளில் ஈடுபட்டனர்.

ஆனாலும் காயப்பட்டு அழுந்திச் சாவதை விட ஒரேயடியாகச் செத்து மடிந்து விட வேண்டும் என்பதே கடவுளிடம் அவர்களது பிரதான மன்றாட்டமாக இருந்தது. அப்படி வந்த ஏவுகணையில் ஒன்று தான் மரியம் பிரார்த்தித்துக் கொண்டிருந்த கூடாரத்தின் மீதும் வீழ்ந்து வெடித்து ஒரே நொடியில் அவளை இரத்தமும் சதையுமாக்கி அவளது உயிரைக் காவு கொண்டு அப்பிஞ்சின் மனதை சுக்கு நூறாக்கியிருந்தது.

கூடாரத்தின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததால் எட்மன் அதிஸ்டவசமாகத் தப்பி விட்டான்.
மேரியும் கணவரும் வந்து கத்திக் குளறி ஒப்பாரி வைத்தனர். அப்போது எட்மனும் அழுதான். அவனது கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. அழுகிறான் அழுகிறான் சத்தமே வரவில்லை..அழுது அழுது குரல் எல்லாம் அடைத்து விட்டது… ஏனென்றால் இரத்தமும் சதையுமாக மீண்டும் வரமுடியாதபடி கிடப்பது அவனது அன்புக்குரிய அம்மம்மா என்பதே.

அம்மா தனக்கு அடிக்க வந்தால் அம்மம்மா எட்மனுக்கு அடைக்கலம் கொடுப்பதோடு அல்லாமல் தனது தாயாரை தடுத்து கட்டுப்படுத்தும் அதிகாரம் அம்மம்மா ஒருவருக்கே இருந்ததாக அவன் நம்பியிருந்தான். தனது சிறிய சிறிய ஆசைகளையெல்லாம் நிறைவேற்றி வைத்த அம்மம்மா இப்போ உயிருடன் இல்லை. எந்த மாதிரியான வெடிச்சத்தத்தை விரும்பி விளையாடி மகிழ்ந்தானோ அந்த விதமான ஒரு வெடிச்சத்தமே தனது அளவில்லா அன்புக்குரியவரின் உயிரைப் பறித்தது…. தன்னிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்தது.. என்று அந்தப் பிஞ்சின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விட்டது. இனிமேலும் அந்தச் சத்தத்தைக் கேட்டு விடக் கூடாது என்று அந்த ஒன்பது வயதுப் பிஞ்சின் மனம் உறுத்திக் கொண்டிருந்தது.

அன்று கிறிஸ்மஸ் தினத்துக்காக வீட்டை அலங்கரிப்பதற்காக போதே நண்பர் ஒருவர் பலூன் ஊதும் போதே தனது காதுகளைப் பொத்திக் கொண்டு ஓடிப்போய் கதிரையின் பின் ஒளிந்து கொள்ளவும் கோழி தனது இறகுகளுக்குள் தனது அனைத்துக் குஞ்சுகளுக்கும் அடைக்கலம் கொடுத்துக் காப்பது போல் மேரி தன்மகனைக் கட்டி அணைத்து விம்மத் தொடங்கினாள். ஏனென்றால் மரியத்தின் இழப்பு எட்மனுக்கு மட்டுமல்லாமல் மேரிக்கும் அந்தச் சம்பவத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

மீண்டும் அந்த நினைவழியா தடங்களுடன் தனக்கிருந்த கவலைகளை மறைத்து வீட்டை அலங்கரிப்பதனை நிறுத்தி விட்டு எட்மனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு மேரியையும் சமாதானம் செய்ய முற்பட்டார் கணவர் ஜோசப்.

-அழகன் –

Leave a Reply