பிரபல பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூருக்கு திரையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பிரபல வங்காள மொழி திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே இயக்கத்தில் 1959-ம் ஆண்டில் வெளியான ‘அபுர் சன்சார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷர்மிளா தாகூர்.
1964-ம் ஆண்டு வெளியான ‘காஷ்மிர் கி காலி’ இந்தி படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகுக்கு அறிமுகமான ஷர்மிளா தாகூர் நடிப்பில் பின்னர் வெளியான ‘ஆராதனா’, ’மவுசம்’, ‘அமர் பிரேம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் உச்சநட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
1970-களில் மிகவும் பிரபலமாக இருந்த ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுகள், பல பில்ம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள ஷர்மிளா தாகூர் சுமார் 50 படங்களில் தனது தனித்துவமான நடிப்பு முத்திரையை பதித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான மன்சூர் அலி கான் பட்டவ்டியை 1969-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட ஷர்மிளா தாகூர், இஸ்லாமியரான கணவரின் மதத்தை தழுவி, தனது பெயரை ஆயிஷா சுல்தானா என்று மாற்றி கொண்டார்.
இந்த தம்பதியருக்கு சைப் அலி கான், சாபா அலி கான், சோஹா அலி கான் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மன்சூர் அலி கான் பட்டவ்டி கடந்த 2011-ம் ஆண்டு காலமான பின்னர், 2013-ம் ஆண்டு பத்மபூஷன் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பி.ஹெச்.டி. அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற விழாவில் தற்போது 72 வயதாகும் ஷர்மிளா தாகூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிரி கோட்டை அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜித்தேந்திரா பிரசாத், டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி ஆகியோர் இந்த விருதை அவருக்கு வழங்கி வாழ்த்தினர்.
இந்திப்பட தயாரிப்பாளரும், கவிஞருமான முசாபர் அலி, பாடகி உஷா மங்கேஷ்கர் உள்ளிட்டோருக்கும் சிறப்பு விருதுகள் அளிக்கப்பட்டன.