கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவின் தொடர்ந்து பதவியில் நீடிப்பாரா என்பது இன்று தீர்மானிக்கப்படும். ட்ராவிஸ் சின்னையா 55ஆவது வயது பூர்த்தி காரணமாக கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் இருந்தார்.
அக்காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொள்ள இருந்த நிலையில் கடற்படைத் தளபதிக்கு ஒருமாத கால பதவி நீடிப்பை வழங்கி, இது தொடர்பாக நாடு திரும்பிய பின் கலந்துரையாட அவகாசமளிப்பதாக உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், நாளையுடன் ட்ராவிஸ் சின்னையாவின் பதவி நீடிப்புக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவருக்கு மற்றுமொரு பதவி நீடிப்பு வழங்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.
ட்ராவிஸ் சின்னையாவை கடற்படைத் தளபதி பதவியில் நீடிக்க விடக் கூடாது என்பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அலுவலர் ரவீந்திர விஜேகுணவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோர் மும்முரமாக செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் காரணமாகவே இதுவரை அவருக்கு கடற்படைத் தளபதிக்கான உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனத் தொகுதி என்பன வழங்கப்படவில்லை. இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கான வீடமைப்புத் தொகுதிலேயே அவர் தொடர்ந்தும் வசிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ட்ராவிஸ் சின்னையாவுக்கு மற்றொரு பதவி நீடிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உறுதியாக உள்ளார்.சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ட்ராவிஸ் சின்னையாவுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதை அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளார். இவர்கள் இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் நாளை பதவி நீடிப்பு நிறைவடையவுள்ள நிலையில் ட்ராவிஸ் சின்னையாவுக்கான பதவி நீடிப்பு வழங்கப்படுவதாயின் அதற்கான அறிவிப்பு இன்று வௌியாக வேண்டும். நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கட்டார் நாட்டுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.