அவுஸ்ரேலிய குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கென, முன்னெடுப்புகள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் நாடாளுமன்றில் அரசு முன்வைத்த சட்டமுன்வடிவு, எதிர்கட்சிகளின் தந்திரோபாயமான நகர்வு மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஒக்டோபர் 18 புதன்கிழமைக்கு முன்னர், தேவைப்படும் மாற்றங்களுடனான சட்டமுன்வடிவை தம்முன் சமர்ப்பிக்க வேண்டுமென, எதிர்கட்சிகளின் செனட்டர்களால் அரசுக்கு காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் அரச தரப்பினரால் இதனை நிறைவேற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்றிரவு குறித்த சட்டமுன்வடிவு Senate Notice Board-இலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சட்டமுன்வடிவு மீண்டும் செனட் அவையில் கலந்துரையாடலுக்கு எடுக்கப்படுவதும் அதற்கான ஒப்புதலைப் பெறுவதும் மிகக்கடினம் என தெரிவிக்கப்படுகிறது.
சுயாதீன செனட்டர்களுடன் தாம் தொடர்ந்தும் பேச்சு நடத்தவுள்ளதாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டமுன்வடிவை அரசு மீண்டும் நாடாளுமன்றில் கொண்டுவரலாம்.
இருப்பினும் தற்போதைக்கு குடியுரிமைச்சட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைய வேண்டியதில்லை இங்கு குடியேறிய பலர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
மறு அறிவித்தல் வரை குடிவரவுத் திணைக்களத்தில் தாக்கல் செய்யப்படும் குடியுரிமை விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே இருக்கும் சட்டம் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பரிசீலிக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Permanent Residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் என்ற நிலை இருந்தது.
இந்நிலையை மாற்றி ஒருவர் வதிவிட உரிமையுடன் 4 ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும்.
அத்துடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல், அவுஸ்திரேலிய விழுமியங்களை ஏற்றல் போன்ற பல மாற்றங்களை அரசு முன்மொழிந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.