விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘மெர்சல்’ படம் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல் செய்து ரஜினியின் ‘கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் பல்வேறு இடையூறுகளை கடந்து நேற்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
முதலில் ‘மெர்சல்’ பட தலைப்புக்கு பிரச்சினை ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய-மாநில அரசுகளை தாக்கும் வசனங்கள் இருப்பதாக புகார் எழுந்தது. படத்தில் பறவைகள் இடம் பெற்றதற்காக விலங்குகள் நலவாரியம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆட்சேப காட்சிகள் நீக்கப்பட்டு நேற்று முன்தினம் திரைக்கு வந்தது.
விஜய் ரசிகர்கள் முதல் காட்சியிலேயே படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்ததால் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. விஜய்க்கு ரசிகர் மன்றங்கள் சார்பில் கட்-அவுட் அமைத்து மாலை அணிவித்து கொண்டாடினார்கள்.
ரசிகர்களின் ஆர்வம் காரணமாக முதல் காட்சியின் முதல் டிக்கெட் ரூ.300 முதல் ரூ.1000 வரை பல இடங்களில் விற்கப்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் 700 தியேட்டர்களில் மெர்சல் படம் திரையிடப்பட்டது. ஒரே காம்ப்ளக்ஸ் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டது அங்கு கூட்டம் அலைமோதியது.
விஜய்யின் முந்தைய படங்களை விட மெர்சல் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் படம் வசூலில் சாதனை படைத்தது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.22 முதல் ரூ.24 கோடி வரை வசூலித்து இருப்பதாக வினியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரஜினியின் கபாலி பட முதல் நாள் வசூல் சாதனையையும், விஜய்யின் ‘தெறி’ பட முதல் நாள் வசூல் சாதனையையும் ‘மெர்சல்’ முறியடித்துள்ளது. முந்தைய படங்கள் அதிக காட்சிகளில் ஓடின. ஆனால் மெர்சல் படம் விசேஷ காட்சி இல்லாமலேயே வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘மெர்சல்’ படம் ரசிகர்களுக்காக பிரத்யேகமாகவும் திரையிடப்பட்டது. இதன் மூலமும் வசூல் குவிந்தது. ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யப்படுகிறது. மெர்சல் பட வசூல் எதிர்பார்த்ததை விட திருப்திகரமாக இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.