மாகாணசபைகளுக்கு நிர்வாக மாவட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேர்தல் தொகுதிகளை ஏற்படுத்துவதற்கு தேவையான யோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் வாக்கெடுப்பு திருத்த சட்டமூலத்தின் அடிப்படையிலே இந்த தேர்தல் தொகுதிகள் ஏற்படுத்தப்படுவதாகஆணைக்குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணசபைகளுக்கு குறிப்பிட்ட நிர்வாக மாவட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படவுள்ள முழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு 50 க்கு ஈடான தொகையை தெரிவு செய்துகொள்வதற்காக பொது மக்களிடம் இந்த யோசனைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள விருக்கின்றோம். அத்துடன் பொது மக்கள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை நவம்பர் மாதம் 2ஆம் திகதிவரை வழங்கலாம்.
ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை எழுத்துமூலமான அறிக்கையாக அல்லது கடிதம் ஊடாக தலைவர், மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, சர்வே ஜனரல் காரியாலய கட்டிடத்தொகுதி, தபால் பெட்டி இலக்கம் 506, நாரஹேன்பிட்டி, கொழும்பு 5 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். அத்துடன் எல்லை நிர்ணய நடவடிக்கை தொடர்பான தகவல்கள் தேவைப்படின் 0112 369452 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதன் செயலாளர் அறிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் தலைவராக கலாநிதி கே. தவலிங்கம் செயற்படுவதுடன் கலாநிதி அகில டயஸ் பண்டார, பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ், பீ.எம்.சிறிவர்த்தன, எஸ்.விஜய சந்திரன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.