போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள் என்று கிண்டல் செய்தவர்கள் மீது காயத்ரி ரகுராம் கடும் சாடியிருக்கிறார்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி ரகுராம் வெளியேறியதிலிருந்தே, சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக அவரை கிண்டல் செய்து வந்தார்கள். இதனால் அவ்வப்போது காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் கிண்டல்களும், மீம்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை கடுமையாக சாடி ட்வீட்களை பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
முகம் காட்டாமல் கிண்டல் செய்பவர்களைப் பார்க்க விரும்புகிறேன். மற்றவர்களிடம் குறையை மட்டுமே பார்க்கும் அந்த திரு, திருமதி கச்சிதமான, மிகத் தூய்மையானவர்களை சந்திக்க வேண்டும். இந்த மீம் உருவாக்கம் 100 கணக்குகளில் நடக்கிறது. அதை ஒருவர்தான் நடத்துகிறார்.
ஒருவரைப் பின் தொடர்ந்து தாக்க எவ்வளவு வெட்டியாக இருக்க வேண்டும். இந்த கிண்டல் செய்பவர்களைப் போல நான் என்னை கச்சிதமானவள் என்று கூறிக்கொள்ளவில்லை. அவர்களிடம் சொல்ல விரும்புவது இதுதான். என்னிடம் நேரத்தை வீணாக்குகிறீர்கள். போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள். புலம்புவதை நிறுத்துங்கள். உங்களுக்கு ஒரு யோசனை தருகிறேன். காயத்ரி மோசமானவள் என்று ரூம் போட்டு அழுதுவிடுங்கள். மற்றவர்களை வெட்கமின்றி கிண்டலடித்துவிட்டு தங்களை உத்தமர்கள் என சிலர் கூறிக்கொள்கின்றனர். விரக்தியின் உச்சத்தில் இருப்பார்கள் போல. உங்களுக்குப் புரிகிறதா இல்லையா? பிக் பாஸ் ஒரு விளையாட்டு. அது முடிந்து விட்டது. அவ்வளவுதான்.
வேறு வேலையைப் பாருங்கள். முக்கியமான பிரச்சினைகளுக்கு போராடுங்கள். குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி, பெண்கள் மீதான வன்முறை, வன்கொடுமை, விவசாயிகள், நீட் என பலப் பிரச்சினைகள் இருக்கின்றன. நான் ஏதோ கோபத்தில் வெறுப்பில் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் நான் இந்த வெளிச்சத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும். நீங்கள் எல்லாம் ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டீர்கள். எளிதில் உங்களைத் தூண்டிவிட முடியும்.
அனைவரும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக, அதிக கோபமுள்ளவர்களாக இருக்கிறீர்கள். நானும் உங்களைப் போலத்தான். எனக்கும் அது விளையாட்டு என்று முதலில் தெரியாது. நான் யார் மீதும் பழி போடவில்லை. அது விளையாட்டு என்று புரிந்துகொள்ள எனக்கு நேரமானது. எனவே, வேறு வேலையைப் பாருங்கள்.
இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.