“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது, அவர் தமிழ் மக்களிடம் நான் என்ன சொன்னாலும் அவர்கள் அதனை நம்புவார்கள் என நினைத்து இறுமாப்பில் கூறிய கருத்து, அதனை மக்கள் சரியாக விளக்கி கொள்ளவேண்டும், இல்லையேல் அதன் விளைவுகளை பெற தயாராகவேண்டும்” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று (16)தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசும்போது அடுத்த தீபாவளி பண்டிகை மகிழ்வான சூழலில் நடக்கும் என கூறியுள்ளார், இது சம்பந்தனின் கோமாளிதனமான கருத்து என எவரும் நினைக்க கூடாது, அவர் கோமாளி அல்ல, தான் தமிழ் மக்களுக்க எதை சொன்னாலும் அவர்கள் அதனை நம்புவார்கள் என இறுமாப்பில் கூறும் கருத்து. இந்த கருத்தின் ஊடாக இரா.சம்பந்தன் தமிழ் மக்களை அவமதித்துள்ளார்.
எனவே தமிழ் மக்கள் அவருடைய கருத்தில் உள்ள சரியான அர்தங்களை புரிந்து கொள்ளவேண்டும். கடந்த தீபாவளி, அடுத்த தீபாவளி அதாவது இந்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்றார். இப்போது இந்த தீபாவளிக்கும் இல்லை அடுத்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு தீர்வு வருமாம், எனவே தமிழ் மக்கள் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் இந்த பொய்களை நம்பியதால் உண்டாகும் விளைவுகளை ஏற்பதற்கு தயாராக இருக்கவேண்டும்” என்றார்.