உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும்

உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும் என போர்த்துக்கள் நாட்டின் தூதுவர் ஹெலனா பரோகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சர்வதேச உயர்கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் “அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க உயர்கல்வி அடிப்படையானது. அவர்களே நாட்டினை மீண்டும் கட்டியெழுப்பக் கூடியவர்கள்.

நெருக்கடியில் இருக்கும் அகதிகள் இளைய சமுதாயத்திற்காக நாம் முதலீடு செய்யவில்லை என்றால் போரால் அழிவுண்ட நாடுகளை யார் மீண்டும் கட்டியெழுப்புவார்கள்.

150 சிரிய மாணவர்களின் உயர்கல்விக்கான போர்த்துகல் நாட்டின் உதவித்திட்டத்தை முன்னெடுத்து வரும் ஹெலனா பரோகோ, இது போன்ற உதவிகள் பல அகதிகளுக்கு தேவைப்படுவதாகவும்” கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் அகதிகள் கவுன்சிலுடன் பணியாற்றும் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட மாணவர் கரேன் துன்வுட்டே கருத்து தெரிவிக்கையில், “தற்காலிக பாதுகாப்பு விசாவில் உள்ளவர்கள் சர்வதேச மாணவர்களின் கட்டணத்தைக் கொடுத்தே இங்கு பயில வேண்டியுள்ளது. அதில் சிலருக்கே அரசு மற்றும் பல்கலைக்கழக உதவிக் கிடைக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலியா ஆண்டு தோறும் 1.9 பில்லியன் டொலர்கள் அகதிகளின் நலனிற்காக செலவிடப்படுவதாகவும், அகதிகளுக்கான நல உதவிகளை செய்யும் நாடுகளில் அவுஸ்திரேலியா முதன்மையாக இருப்பதாவும் அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் பேச்சாளர் கூறியுள்ளார்.