கணினிகளின் மூளையான, சிலிக்கன் சில்லுகளை தயாரிக்கும், ‘என்விடியா’ செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களை கையாளும், அதிதிறன் வாய்ந்த கணினிகளை தயாரிக்க உள்ளது. இந்த கணினிகள், தானோட்டி வாகனங்களில் பயன்படுத்துவதற்காகவே, உருவாக்கப்பட்டு உள்ளதாக, ‘என்விடியா’ அறிவித்துள்ளது.
‘டிரைவ் பி.எக்ஸ்., பிகாசஸ்’ என்ற, இந்த அதிதிறன் கணினிகள், தானோட்டி வாகனங்களில் உள்ள, கேமரா மற்றும் பல உணர்வான்கள் தரும் தகவல்களை, அதிவேகமாக பரிசீலித்து, உடனே முடிவுகள் எடுத்து, வாகனங்களை விபத்தில்லாமல் ஓட்டிச் செல்ல உதவும்.
தானோட்டி வாகனங்களில், ஐந்து நிலைகள் உள்ளன. இதில், நான்காம் நிலையில், 90 சதவீத நேரம், வாகனம் தன்னைத்தானே செலுத்தும் திறன் கொண்டது. ஆனால், ஓர் ஓட்டுனர், எப்போதும் சாலையை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். ஐந்தாம் நிலையில், வாகனத்தை செலுத்தும் ஸ்டியரிங், பிரேக் போன்றவை கூட இருக்காது. அதாவது, முழுக்க முழுக்க, வாகனம் தன்னைத்தானே செலுத்தும் நிலை இது. ‘என்விடியா’வின் கணினி, இத்தகைய வாகனங்களுக்காக உருவாக்கப்படுகிறது.
இந்த கணினியை வாங்க, பல கார் நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாகவும், ஏற்கனவே, சில வாகனங்களில் சோதனைக்காக, இந்த கணினி பொருத்தப்பட்டு உள்ளதாகவும், ‘என்விடியா’ அறிவித்துள்ளது.