சூரிய மின் தகடுகளில், ஏதாவது ஒரு புதுமை, மாதத்திற்கு ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில், பிரிட்டனைச் சேர்ந்த, ‘ரெனோவாஜென்’ என்ற நிறுவனம், பாய் போல விரிக்கக்கூடிய, சூரிய ஒளி மின் கருவியை உருவாக்கி உள்ளது.
‘ரேப்பிட் ரோல் சோலார் பி.வி.,’ என்றழைக்கப்படும், இந்த சூரிய மின் பாயை, பிரிட்டனின், சிறிய தீவான, பிளாட் ஹோம் ஐலண்டில் நிறுவி உள்ளது, ரெனோவாஜென். சுற்றுலா பயணியர் வந்து போகும் இந்தத் தீவிற்கான மின்சாரத்தை, இரு டீசல் ஜெனரேட்டர்களை வைத்தே உற்பத்தி செய்தனர்.
இங்கு, ரேப்பிட் ரோல் சூரிய மின் பாயை, இரண்டே நிமிடத்தில், ஒரு மைதானத்தில் விரித்துப் போட்டு, 11 கிலோவாட் மின்சாரத்தை, ரெனோவாஜென் உற்பத்தி செய்து காட்டி இருக்கிறது. தேவைப்பட்டால், சற்று பெரிய அளவில், சூரிய மின் பாயை நிறுவி, 300 கி.வா., மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் என, ரெனோவாஜென் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலி இடங்களில், வீட்டுக் கூரைகளில், ரேப்பிட் ரோலை, விரைவில் ஆணியடித்து நிறுவ முடியும். வழக்கமான, சூரிய மின் பலகைகள் விரைப்பானவை. அவற்றை நிறுவ, தனி மேடைகளை நட வேண்டியிருக்கும். எனவே, ரேப்பிட் ரோலை நிறுவுவதற்கு ஆகும் செலவு, குறைவு என, ரெனோவாஜென் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.