மென்பொருள், வன்பொருள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்தால், போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ள முடியும் என, ‘கூகுள்’ நினைக்கிறது. அதற்கான முதல் படியாக, ‘பிக்செல் பட்ஸ்’ என்ற காதணி ஒலிபெருக்கியை, ‘கூகுள்’ வெளியிட்டிருக்கிறது. இதன் விலை, 13,680 ரூபாய்.
இது, வெறும் ஒலிபெருக்கியல்ல. 40 மொழிகளில், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழி பெயர்க்கும் திறன் கொண்டது. ஆனால், இந்தத் திறன், பிக்செல் பட்சுக்குள் இல்லை.
அதிதிறன் வாய்ந்த, செயற்கை நுண்ணறிவு மென்பொருளை கொண்டு இயங்கும், ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ சேவை, இதற்கு பயன்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் மொழி பெயர்ப்பை, ஒரு குரல் மூலம், உங்கள் மொபைல் போனில் உள்ள, ஒலிபெருக்கி வழியே, எதிரே இருப்பவருக்கு போட்டுக் காட்டலாம்.
அதே போல, எதிரே இருப்பவர் பேசும் மொழியை, மொபைல் போனின் ஒலிவாங்கி மூலம் பெற்று, அதன் மொழி பெயர்ப்பை, உங்கள் மொழியில், உங்கள் காதிலுள்ள, ‘பிக்செல் பட்ஸ்’ மூலம், நீங்களும் புரிந்து கொள்ளலாம். ஒரே சிக்கல், இந்த பிக்செல் பட்ஸ் மொழி பெயர்ப்புக் கருவி, ‘கூகுள்’ தற்போது வெளியிட்டுள்ள, ‘பிக்செல் 2 மற்றும் பிக்செல் 2 எக்ஸ்.எல்.,’ ஆகிய மொபைல் போன்களில் மட்டுமே, பயன்படுத்த முடியும்.