அது என்னமோ தெரியவில்லை, விஜய்யின் படம் ரிலீஸாகும் போது ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகளை சந்தித்து கொண்டு இருக்கின்றன. காவலன், துப்பாக்கி, தலைவா, கத்தி, புலி என தொடர்ந்த பிரச்னை இப்போது மெர்சலிலும் தொடர்கிறது.
இதுநாள் வரை மெர்சலுக்கு தலைப்பு பஞ்சாயத்து மற்றும் கேளிக்கை வரி தொடர்பான பஞ்சாயத்தால் படம் ரிலீஸாகுமா, ஆகாது என்ற நிலை நீடித்தது. தற்போது அந்த பிரச்னைகள் எல்லாம் தீர்வாகி மெர்சல் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இப்போது புதிதாக ஒரு பிரச்னை வந்துள்ளது. மெர்சல் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளதாக மெர்சல் படத்தை தயாரித்துள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. ஆனால் படம் இன்னும் சென்சார் ஆகவில்லையாம். இதுப்பற்றிய விபரம் வருமாறு…
மெர்சல் படத்தில் மேஜிக் கேரக்டர் விஜய், புறா, பாம்பு போன்ற விலங்குகளை பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், ஆனால் இன்னும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இது கிடைக்கும் பட்சத்தில் தான் மெர்சல் படத்திற்கு தணிக்கை குழுவால் சான்று அளிக்க முடியும். ஆனால் அதற்குள் யு/ஏ பெற்றுவிட்டதாக தயாரிப்பு தரப்பு பொய்யான தகவலை வெளியிட்டிருக்கிறது.
யு/ஏ சான்று கிடைத்த விஷயம் குறித்து விலங்குகள் நல வாரியம், தணிக்கை குழுவிற்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. தணிக்கு குழு, தாங்கள் இன்னும் மெர்சல் படத்திற்கு சான்று அளிக்கவில்லை என்று உறுதிப்பட தெரிவித்திருக்கிறது.
மெர்சல் படம் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தணிக்கை முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
முன்பதிவு தொடக்கம் மெர்சல் தணிக்கை சிக்கல் நீடித்தாலும், படத்திற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் ஆரம்பமாகியுள்ளது. அதேப்போன்று ஆன்-லைனிலும் முன்பதிவு தொடங்கியிருக்கிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.