அரசியல் கைதிகளின் வழக்குகளை இடம்மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதற்கு தீர்வு வழங்காத ஜனாதிபதியின் யாழ் வருகையைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று(14) வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரின் போராட்ட இடத்தில் வைத்துதே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் கறுப்புக்கொடியுடன் நின்றவர்களைக் கண்டு காரில் இருந்து இறங்கிவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை நோக்கி கும்ப்பிட்டவாறு வந்தார். ஜனாதிபதிக்குக் காட்ட கறுப்புக்கொடியோடு நின்ற மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் கைகளைப் பற்றிப்பிடித்த அவர் எதிர்ப்புக் கோசங்களுக்கு மத்தியில் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் யாழ். இந்துக்கல்லூரியில் தமிழ் மொழித்தினவிழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.