அவுஸ்ரேலியாவின் சிட்னி நோக்கி சென்ற எத்திஹாட் விமானத்தில் இருந்து புகை வெளியேறியதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அபிதாபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு எத்திஹாட் பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 349 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் இன்று அதிகாலை அவுஸ்ரேலியா வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்து புகை வெளியேறியதைக் குறிக்கும் எச்சரிக்கை விளக்கு எரிந்தது.
இதனைக் கவனித்த பைலட், விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து, அருகில் உள்ள அடிலெய்டு விமான நிலையம் நோக்கி விமானத்தை திருப்பினார். விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும் விமானம் அடிலெய்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமானத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து பொறியாளர்கள் சோதனை செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓடுபாதையின் அருகில் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் உள்நாட்டு விமானங்கள் மூலம் சிட்னி செல்ல உள்ளனர்.