அவுஸ்ரேலிய வீரர்கள் பஸ் மீது கல்வீச்சு!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி துவங்கவுள்ள நிலையில், அவுஸ்ரேலிய வீரர்கள் பயணம் செய்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வரும் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது.

இரு அணிகளும் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது, போட்டியில் அவுஸ்ரேலியாவும் வெற்றி பெற்றன. 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று இரவு ஐதராபாத்தில் நடக்கிறது.

கவுகாத்தியில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் அவுஸ்ரேலியா  வெற்றி பெற்ற பிறகு அந்த அணி வீரர்கள் பஸ்சில் ஓட்டலுக்கு திரும்பிய போது கற்கள் வீசப்பட்டது. இதில் அவுஸ்ரேலியா வீரர்களுக்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இன்று நடக்கும் 3-வது போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. துணை ராணுவப்படை உள்பட கூடுதலாக 1800 காவல் துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மைதானத்தை சுற்றி 56 கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ரசிகர்கள் தண்ணீர் பாட்டில், ஹெல்மெட், லேப்-டாப், கமரா ஆகியவை எடுத்து செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. வீரர்கள் செல்லும் பஸ்களுடன் சிறப்பு காவல் துறை  பிரிவு படையினர் உடன் செல்கிறார்கள்.