இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. இரு அணிகளும் தொடரை வெல்லப்போகும் ஆர்வத்துடன் உள்ளனர்.
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
மூன்று 20 ஓவர் தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 2-வது ஆட்டத்தில் அவுஸ்ரேலிய 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
ஒருநாள் தொடரை வென்ற விராட்கோலியின் அணி 20 ஓவர் தொடரையும் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது. ஒருநாள் தொடரை இழந்த அவுஸ்ரேலிய அணி 20 ஓவர் தொடரையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதுவதால் தொடரை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
கவுகாத்தி போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதை சரி செய்தால் தான் நாளைய ஆட்டத்தில் வெல்ல முடியும். இதனால் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து கடுமையாக போராடினால் தான் அவுஸ்ரேலியாவை வீழ்த்த இயலும். ஜேசன் பெரென்டோர்ப் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார். இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வார்னர் தலைமையிலான அவுஸ்ரேலிய அணி வெற்றியுடன் பயணத்தை முடிக்கும் நம்பிக்கையில் உள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 16-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 15 ஆட்டத்தில் இந்தியா 10-ல், ஆஸ்திரேலியா 5-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), தவான், ரோகித்சர்மா, கேதர் ஜாதவ், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, புவனேஸ்வர்குமார், குல்தீப் யாதவ், யசுவேந்திர சஹால், பும்ரா, ராகுல், அக்ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், நெக்ரா.
அவுஸ்ரேலிய: வார்னர் (கேப்டன்), ஆரோன்பிஞ்ச், டிரெவிஸ் ஹெட், ஹென் ரிக்ஸ், மேக்ஸ்வெல், கிறிஸ்டியன், டிம்பெய்ன், நாதன் கோல்ட்டர், ஆடம் ஜம்பா, ஸ்டோனிஸ், பெரென்டோர்ப், ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை.