பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்தால் ரசிகர்கள் அவரை சீண்ட வேண்டும் என்று அவுஸ்ரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 28-ந்தேதி முதல் அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக விளங்கும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இரவு விடுதியில் வாலிபரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட சர்ச்சையால் ஆஷஸ் தொடரில் ஆடுவதில் சந்தேகம் நீடிக்கிறது.
இந்த வழக்கு காவல் துறை விசாரணையில் இருப்பதால் பென் ஸ்டோக்ஸ் அணியினருடன் சேர்ந்து புறப்படமாட்டார் என்று ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெளிவுப்படுத்தி விட்டது.
இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் அவுஸ்ரேலியாவுக்கு வருகை தந்தால் ரசிகர்கள் அவரை சீண்ட வேண்டும் என்று அவுஸ்ரேலியாமுன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டார்க் அளித்த பேட்டியில், ‘ஸ்டோக்ஸ் அவுஸ்ரேலியாவுக்கு வருகை தந்தால் நன்றாக இருக்கும். அவருக்கு எதிராக அவுஸ்ரேலிய ரசிகர்கள் உரக்க கூச்சலிடுவதை பார்க்க விரும்புகிறேன். அவர் விளையாடினால் நிச்சயம் ரசிகர்களின் கரகோஷம் அதிகமாக இருக்கும். ஆனால் அதை அவர் சமாளிப்பார் என்று நம்புகிறேன். அதே சமயம் அவர் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் இந்த தொடர் சிறப்பானதாக இருக்கும்’ என்றார்.