அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே செய்ததில் 50 சதவீதம் செய்தாலே எனது கிரிக்கெட் வாழ்க்கை வெற்றியாகி விடும் என குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அக்சார் பட்டேல், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மூவரும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக மணிக்கட்டை திருப்பி பந்து வீசும் ‘விரிஸ்ட் பவுலர்’ என அழைக்கப்படும் குல்தீப் யாதவ் தனது அபார பந்து வீச்சால் அசத்தி வருகிறார். 6 பந்துகளை வெவ்வேறு விதமாக வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார்.
விரிஸ்ட் பந்து வீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அவுஸ்ரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. அவர் செய்ததில் 50 சதவீதம் செய்தாலே, தன்னால் சிறந்த வீரராக செயல்பட முடியும் என குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘நானும் சாஹலும் சிறந்த பார்ட்னர்ஷிப். இருவரும் ஐந்து வருடங்களாக இணைந்து விளையாடுகிறோம். ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட இது உதவுகிறது.
ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய உதவியாக இருக்கிறது. இதை நீங்கள் போட்டியின் முடிவில் பார்த்து இருப்பீர்கள். ஒருவருக்குப்பின் ஒருவர் பந்து வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறோம்.
நான் சிறுவயதில் இருந்தே வார்னே பந்து வீச்சை பின்தொடர்கிறேன். வார்னர் அவரது காலத்தில் என்ன செய்தாரோ? அதில் 50 சதவீதம் செய்தாலே, நான் கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவேன். அவருடைய விரிஸ்ட் வொர்க், பிளைட் மற்றும் ஏமாற்றும் பந்து வீச்சை முறை முக்கியமானது’’ என்றார்.