தலை குனிந்து வாழ்வதை விட தலை நிமிர்ந்து செத்துப்போவது மேல் என்று முழங்கிய புரட்சியாளரான சே குவேரா மரணமடைந்து 50வது ஆண்டு நிறைவடைந்து விட்டன. இதனை குறிக்கும் வகையில் கியூபாவில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சாண்ட்டா கிளாராவில் உள்ள சே குவெராவின் சிலை மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர்
ஒவ்வொரு புரட்சியும் ஒரு நாள் அடங்கும். ஒவ்வொரு போராட்டமும் ஒரு நாள் முடியும். ஆனால் புரட்சியாளர்களுக்கும், போராளிகளுக்கும் முடிவே கிடையாது. ஒவ்வொருவரின் மனதிலும் வாழ்கிறார்கள் புரட்சியாளர்கள். அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி ஒவ்வொரு காலகட்டத்திலும் புரட்சியாளர்கள் வைக்கும் முதல் வணக்கம் சே குவெராவுக்குத்தான்.
ஒவ்வொரு புரட்சியாளருக்கும், போராளிகளுக்கும், அநீதியை எதிர்த்துப் போராடுபவர்களுக்கும், சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஞானத் தந்தை சே தான். அர்ஜென்டினாவில் பிறந்தவரான சே… ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போருக்காக, தென் அமெரிக்கர்களின் விடியலுக்காக தன் இன்னுயிரை முழுமையாக அர்ப்பணித்தவர்.
இவர் புரட்சிகளில் ஈடுபட்டதற்காக பொலியாவில் 1967ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி அரச படையினரால் கைது செய்யப்பட்டு 9ஆம் தேதி அவரை பொலிவிய படையினர் கொலை செய்தனர். புரட்சியாளரான சே குவேரா பிடிபட்டு கொல்லப்பட்ட 50வது ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ மற்றும் பல பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
அவரது கல்லறையில் ஒரு வெள்ளை ரோஜாவை ரவுல் காஸ்ட்ரோ வைத்து அஞ்சலி செலுத்தினார். இன்றும் கூட அந்த புரட்சித் தலைவனின் உணர்வோடு உலவும் மனங்கள் கோடானு கோடியாக உள்ளன. இந்த நாளில் அவரது வார்த்தைகள் மூலமாகவே நினைவு கூறுவோம்…
•ஒவ்வொரு அநீதிக்கு எதிராகவும் நீங்கள் பொங்குகிறீர்களா.. அப்படியானால் நீங்கள்தான் நான் – சே
•நாம் ஒன்றுக்காக சாகத் தயாராக இருந்தால்தான் அதற்காக வாழ முடியும் காரியத்திற்கு உதவாத எந்த வார்த்தையும் முக்கியத்துவம் இல்லாதது நீ என்னைக் கொல்ல வந்துள்ளாய் என்று எனக்குத் தெரியும். உடனடியாக அதைச் செய்.
•உண்மையான புரட்சி எது தெரியுமா.. அன்புதான். அன்பு உணர்வுதான் உண்மையான புரட்சிக்கு வித்து. அதுதான் புரட்சியை வழி நடத்தக் கூடிய சக்தி. அன்பு உணர்வு இல்லாத, நேச உணர்வு இல்லாத எந்தப் புரட்சியும் உண்மையானதாக இருக்க முடியாது.
•எங்கெல்லாம் எதிரிகள் உள்ளனரோ அங்கெல்லாம் நமது போரை எடுத்துச் செல்வோம். ஒரு முழுமையான போராக அது இருக்கட்டும். எங்கெல்லாம் நமது எதிரி இருக்கிறானோ அங்கெல்லாம் தாக்குங்கள். அவன் ஒரு நொடி கூட அமைதியாக இருக்கக் கூடாது.
•ஒரு கொரில்லா போராளிக்கு மக்களின் ஆதரவு தேவை. அவன் சார்ந்த மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தப் போராளியும் வெல்ல முடியாது.
•வறண்ட பொருளாதார சோசலிசத்தை நான் விரும்பவில்லை. நாம் துயரங்களுக்கு எதிராக மட்டும் போராடவில்லை. ஒதுக்கப்படுவதற்கு எதிராகவும் நாம் போராடுகிறோம். எனக்கு விடுதலை செய்யும் அதிகாரம் இல்லை. என்னால் அதைச் செய்யவும் முடியாது.
•நான் போராளி மட்டுமே. மக்கள்தான் உண்மையான விடுவிப்பாளர்கள். எப்போது ஒரு அரசு மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கிறதோ (அது நேர்மையாக இருந்தாலும் சரி அல்லது மோசடியாக இருந்தாலும் சரி) அதற்கு எதிராக யாரும் போராட முடியாது. காரணம், அது மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
•கோழையே.. ஒரு மனிதனைப் போய் கொல்ல வந்துள்ளாயே! (சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு சொன்ன கடைசி வார்த்தை)