இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஐ.சி.சி.யின் புதிய விதிமுறையை பயன்படுத்தாமல்அவுஸ்ரேலிய அணி சரிவை சந்தித்தது தெரியவந்துள்ளது.
இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று ராஞ்சியில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த அவுஸ்ரேலியா 18.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் அவுஸ்ரேலியாவின் இன்னிங்ஸ் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது.
அதன்பின் இந்தியாவிற்கு 6 ஓவரில் 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட் விதிமுறையில் ஐ.சி.சி. பல மாற்றங்களை கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. அப்போது இந்தியா – அவுஸ்ரேலியா இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றதால் இந்த தொடருக்கு விதிமுறை நடைமுறை படுத்தப்படாது என்று கூறப்பட்டது.
ஐ.சி.சி.யால் மாற்றப்பட்ட விதிமுறையில் பேட்டின் அளவு, பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்தல், பேட்ஸ்மேன்கள் ஓடும்போது க்ரீஸ் கோட்டை தொடுவதில் மாற்றம் என பல்வேறு அம்சங்கள் அடங்கும். அதில் ஒன்று மழைக் காரணமாக ஓவர் குறைக்கப்பட்டால் ஒரு பந்து வீச்சாளர் இரண்டு ஓவர்களுக்கு குறையாமல் பந்து வீசலாம். இந்த விதிமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி நேற்றைய போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பந்து வீசிய அவுஸ்ரேலியா 6 ஓவரை மூன்று பந்து வீச்சாளர்களுக்கு பிரித்து கொடுத்திருக்க முடியும். ஆனால் கவுல்டர் நைலுக்கு மட்டும் இரண்டு ஓவர் கொடுக்கப்பட்டது. பின்னர் புதுமுக வீரர் பெரெண்டர்ஃப், சம்பா, டை, கிறிஸ்டியன் ஆகியோர் பந்து வீசினார்கள்.
அவுஸ்ரேலிய வீரர்கள் யாருக்கும் புது விதிமுறை தெரியவில்லை. இதனால் ஐந்து பந்து வீச்சாளரை பயன்படுத்தியது. பெரெண்டர்ஃப் சிறப்பாக பந்து வீசியும் ஒரு ஓவருடன் நிறுத்தப்பட்டார். ஒருவேளை விதி தெரிந்திருந்தால் பெரெண்டர்ஃப்க்கு மேலும் ஒரு ஓவர் கொடுக்கப்பட்டிருக்கும். சம்பாவும் ஒரு ஓவர் கூடுதலாக வீசியிருப்பார். இப்படி இருந்திருந்தால் அவுஸ்ரேலியாவிற்கு சாதகமாக போட்டி இருந்திருக்கும். அது இல்லாமல் போய்விட்டது.
இதுகுறித்து அவுஸ்ரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் ‘‘புதிய விதிமுறை குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது. 5-வது ஓவரின்போது ஸ்மித் ட்ரிங்ஸ் கொண்டு வந்தார். அப்போது எங்களிடம் ஸ்மித் கூறியபோதுதான் எங்களுக்கு தெரிய வந்தது’’ என்றார்.