முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-அவுஸ்ரேலியா இன்று மோதல்

இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.

இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய  கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு நடக்கிறது.

ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்த இந்திய அணியினர் தங்களது ஆதிக்கத்தை தொடர்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த ரோகித் சர்மா (296 ரன்), ஆல்-ரவுண்டராக ஜொலித்து தொடர்நாயகன் விருதை பெற்ற ஹர்திக் பாண்ட்யா, சுழலில் மிரட்டிய குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் 20 ஓவர் போட்டியிலும் அசத்துவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

38 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா, இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. இறுதிகட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய அவர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விக்கெட் கீப்பர் டோனியின் சொந்த ஊர் என்பதால், அவரது ஹெலிகாப்டர் ஷாட்டுகளை காண்பதற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாதால் ஒரு நாள் தொடரில் ஒதுங்கி இருந்த ஷிகர் தவான் அணிக்கு திரும்பி உள்ளதால் லோகேஷ் ராகுலுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறி தான்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஒரு நாள் தொடரில் அடைந்த தோல்விகளுக்கு பரிகாரம் தேடுவதற்கு முனைப்பு காட்டும். அந்த அணி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், கேப்டன் ஸ்டீவன் சுமித் ஆகியோரைத் தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது. ஒரு நாள் தொடரில் நல்ல தொடக்கம் கிடைத்தும் மிடில் வரிசை சொதப்பியதால் அவர்களால் எழுச்சி பெற முடியவில்லை. ஆனால் 20 ஓவர் போட்டிக்கு என்று 5 வீரர்கள் வருகை தந்திருப்பதால் மோசமான நிலைமையை மாற்ற முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள். இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பெரென்டோர்ப் அறிமுக வீரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது.

ராஞ்சியில் நேற்று பிற்பகலில் பலத்த மழை பெய்ததால் இந்திய வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் உள்அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டனர். இன்றும் பிற்பகலில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது ஆட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ராஞ்சியில் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

20 ஓவர் அணிகளின் தரவரிசையில் இந்தியா 5-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 7-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் ஊதித்தள்ளினால், தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறும். இதே முடிவு ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்தால் அந்த அணி 3-வது இடத்தை எட்டிப்பிடிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே அல்லது லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் அல்லது அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், ஆஷிஷ் நெஹரா அல்லது புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்ரிக்ஸ் அல்லது கிளைன் மேக்ஸ்வெல், டேனியல் கிறிஸ்டியன், டிம் பெய்ன், நாதன் கவுல்டர்-நிலே, ஆடம் ஜம்பா, கனே ரிச்சர்ட்சன், ஜாசன் பெரென்டோர்ப்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.