அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் டி-ரெக்ஸ், மெர்மெயிட், வேம்பையர் என நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெற்றிருக்கும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 11.1 அப்டேட்டில் நூற்றுக்கும் அதிகமான புதிய எமோஜிக்கள் இடம்பெறும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. எமோட்டிவ் ஸ்மைலிக்கள், இரு பாலினத்தவருக்குமான கதாபாத்திரங்கள், மற்றும் பல்வேறு இதர உருவங்கள் நிறைந்திருக்கும். இதில் ஸ்லெட், மோனோக்கிள் ஃபேஸ், மேன் ஃபேரி உள்ளிட்டவை அடங்கும்.
ஜுலை மாதம் உலக எமோஜி தினத்தன்று அறிவிக்கப்பட்ட எமோஜிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படும். இதில் தலைப்பாகை அணிந்த பெண், தாடி கொண்டிருக்கும் ஆண், பாலூட்டுவது, சோம்பி, தாமரை உருவம் கொண்ட மனிதன் மற்றும் பல்வேறு புதிய உணவு வகைகள் இடம்பெற்றிருக்கிறது.
இத்துடன் அமெரிக்க சைகை மொழியில் காதலை வெளிப்படுத்தும் எமோஜியும் சேர்க்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாத வாக்கில் யுனிகோடு 10.0 பதிப்பு 56 வகையான புதிய எமோஜி, 8518 கதாபாத்திரங்கள், நான்கு புதிய ஸ்க்ரிப்ட்களை கொண்டிருந்தது. இவை ஆப்பிள், கூகுள், சாம்சங் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்று கொண்டுள்ளன.
தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள புதிய எமோஜிக்கள் ஐஓஎஸ் 11.1 டெவலப்பர் மற்றும் பீட்டா பிரீவியூ 2 மற்றும் ஐஓஎஸ் 11.1 இறுதி பதிப்புகளில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய இயங்குதளமானது இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அம்சங்கள் மேக் ஓஎஸ் மற்றும் வாட்ச் ஓஎஸ் புதிய பதிப்புகளில் வழங்கப்பட இருக்கிறது.