கூகுள் நிறுவனத்தின் ஹார்டுவேர் அறிமுக விழா அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுடன் பல்வேறு இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற கூகுள் ஹார்டுவேர் விழாவில் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கேமரா, பிக்சல் ஸ்மார்ட்போன்கள் என பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்தது.
மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கூகுள் விழாவில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தன. கூகுளின் ஹார்டுவேர் விழாவில் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகமான மற்ற சாதனங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் பிக்சல் 2 & பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்:
கூகுள் விழாவின் முக்கிய சாதனங்களாக பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் இருந்தது. அதிகப்படியான புதிய அம்சங்கள் கொண்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் முதற்கட்ட விற்பனை நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் புதிய பிக்சல் 2 விலை ரூ.61,000 முதல் துவங்கி பிக்சல் 2 XL 128 ஜிபி ஸ்மார்ட்போனின் விலை ரூ.82,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டேடிரீம் வியூ:
பிக்சல் ஸ்மார்ட்போன்களை போன்றே கூகுளின் டேடிரீம் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய நிறங்கள் மற்றும் புதுவகை லென்ஸ் கொண்டிருக்கும் டேடிரீம் வியூ அதிக துல்லியமாக காட்சிகளை வழங்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரயிருக்கும் டேடிரீம் வியூ 99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற இருக்கிறது.
கூகுள் ஹோம்:
கூகுள் ஹார்டுவேர் விழாவில் இரண்டு ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கூகுள் ஹோம் மேக்ஸ் மற்றும் கூகுள் ஹோம் மினி என அழைக்கப்படும் புதிய ஸ்பீக்கர்கள் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விற்பனைக்கு வரயிருக்கிறது.
ஹோம் மினி சிறிய ரக ஸ்பீக்கர் என்பதோடு டச் கண்ட்ரோல் மற்றும் குரல் மூலம் இயக்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது. கூகுள் ஹோம் மேக்ஸ் 4.5 இன்ச் ஊஃபர்கள் மற்றும் 0.7இன்ச் டுவீட்டர்களை கொண்டிருக்கிறது. கூகுள் ஹோம் மினி 49 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,200 மற்றும் கூகுள் ஹோம் மேக்ஸ் 399 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல்புக்:
குரோம் இயங்குதளம் கொண்டு இயங்கும் பிக்சல்புக் சாதனமும் நேற்றைய கூகுள் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 12.3 இன்ச் அளவு கொண்ட பிக்சல்புக் லேப்டாப், வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப டேப்லெட் போன்று மடித்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் சர்ஃபேஸ் பென் போன்றே புதிய பென் சாதனமும் ஆண்ட்ராய்டு செயலிகளை இயக்கும் வசதியையும் கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல்புக் விலை 999 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.65,000 மற்றும் பிக்சல்புக் பென் 99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட முதல் லேப்டாப் என்பதோடு, 10 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பிக்சல் பட்ஸ்:
ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக கூகுளின் வயர்லெஸ் ஹெட்போன்களாக பிக்சல் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்பாட்ஸ் போன்று இல்லாமல் பிக்சல் பட்ஸ் முழுமையாக வயர்லெஸ் வசதி கொண்டிருக்கவில்லை என்றாலும் ஒற்றை வையர் கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல்பட்ஸ் விலை 159 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்படும் பிக்சல்பட்ஸ் இந்திய விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஹெட்போன்களுடன் வழங்கப்படும் கேஸ் பேட்டரி பேக் போன்று செயல்படுவதோடு எவ்வித பட்டன்களையும் கொண்டிருக்கவில்லை.
இயர்பீஸ் சாதனத்தை ஸ்வைப் செய்தே முழுமையாக இயக்கும்படி பிக்சல்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதி கொண்டிருப்பதால் மொழி தெரியாதவர்களிடமும் எவ்வித தயக்கமும் இன்றி பேச முடியும்.
கிளிப்ஸ்:
கூகுள் நிறுவனத்தின் முதல் கேமரா தான் கூகுள் கிளிப்ஸ். செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட கிளிப்ஸ் கேமரா மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தானாகவே புகைப்படங்களை எடுக்கும் வசதி கொண்டுள்ளது. மேனுவல் முறையில் இயக்கும் வசதி கொண்ட கிளிப்ஸ் கேமரா விலை 249 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அருமையான நிகழ்வுகளை படமாக்குவதில் துல்லியமாக செயல்படும் கிளிப்ஸ் பதிவு செய்யும் போது மின்விளக்கை எரியவிடுகிறது. கேமரா வாங்குவோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி கூகுள் போட்டோஸ் கிளவுட் ஸ்டோரேஜ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.