வாட்ஸ்அப் சொந்த எமோஜி

ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலிக்கு என பிரத்தியேக எமோஜிக்கள் செயலியின் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய எமோஜிக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புதிய வகை எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பதிப்பில் சோதனை செய்யப்படும் புதிய வகை எமோஜிக்கள் ஆப்பிள் எமோஜிக்களை போன்றே காட்சியளிக்கிறது.

ஆப்பிள் போன்றே ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களில் தங்களுக்கென பிரத்தியேக எமோஜிக்கள் வழங்குகின்றன. வாட்ஸ்அப்பில் சோதனை செய்யப்படும் புதிய எமோஜிக்கள் ஆப்பிள் வடிவமைப்பை சார்ந்து இருப்பதால், ஒரே மாதிரியாக காட்சியளிக்கிறது. நடுவிரல் மற்றும் ஒலிம்பிக் வளையங்கள் எமோஜிக்களாக வழங்கப்பட்ட முதல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது.

தற்சமயம் வெளியாகியுள்ள எமோஜிக்கள் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டிருப்பதால் இவை அனைவருக்கமான செயலியில் அப்படியே வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. சமீபத்திய தகவல் ஐஓஎஸ் எமோஜிக்களை வாட்ஸ்அப் முந்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் ஜூலை மாத வாக்கில் வாட்ஸ்அப் செயலியில் தினமும் 100 கோடி பேர் குறுந்தகவல் பரிமாறி கொள்வதாக வாட்ஸ்அப் அறிவித்தது. அந்த வகையில் இந்த செயலியில் தினமும் 5500 கோடி குறுந்தகவல்கள், 450 கோடி புகைப்படங்கள் மற்றும் 100 கோடி வீடியோக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

உலகம் முழுக்க 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் இதுவரை 60 மொழிகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. சமீபத்திய எமோஜிக்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பயன்தரும் பல்வேறு அம்சங்களும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது.