மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட தமிழ் இளைஞனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு 9ஆயிரம் டொலரை அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளதாக குறித்த இளைஞனின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலியாவின் இடைத்தங்கல் முகாமில், தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 வயதான, ரஜீவ் ராஜேந்திரன் நேற்று அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
2013ஆம் அண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் புகுந்த இவர் மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
அங்கு தனது உடலுக்கு தானே தீங்கிளைக்க முற்பட்டவேளையில் உளவளச் சிகிச்சைக்காக மனுஸ்தீவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்படாத நிலையில் அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
ரஜீவ் ராஜேந்திரனின் உடலை சிறிலங்காவுக்குக் கொண்டுவருவதற்கு அவரது உறவினர்கள் அவுஸ்ரேலியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டபோது 9ஆயிரம் டொலரினைச் செலுத்துமாறு தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்இ ரஜீவ் ராஜேந்திரனின் உடலை, எந்த பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல், கூடிய விரைவில் அவரது குடும்பத்தினரிடம் ஒபபடைப்பதற்காக சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ் அகதிகள் பேரவை அவுஸ்ரேலிய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.