முதல் சம்பளமாக ரூ.75 வாங்கியதாக நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக திகழும் நடிகர் சல்மான்கான், படத்துக்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். மேலும், இந்தி திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான் 2-வது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.
இது தவிர, டி.வி.யில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி மொத்தம் 11 பாகங்களை கொண்டது. இதன் ஒவ்வொரு பாகத்துக்கும் சல்மான்கான் தலா ரூ.11 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
திரையுலகில் புகழின் உச்சத்தில் இருக்கும் 51 வயது நடிகர் சல்மான்கான், தன்னுடைய ஆரம்ப நாட்களில் வாங்கிய சம்பளம் குறித்து நிருபர்களிடம் மனம் திறந்து பேட்டி அளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
என்னுடைய ஆரம்ப நாட்களில், தாஜ் ஓட்டலில் சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று நடன குழுவின் பின்னால் நின்று ஆடியிருக்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவர் அந்த நடன குழுவில் இருந்ததால், அவர் என்னையும் அழைத்து சென்றார். நானும் வேடிக்கையாக சென்று ஆடுவேன். அப்போது, எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம், 75 ரூபாய். இது தான் நான் முதன்முதலாக வாங்கிய சம்பளம்.
பின்னர், தனியார் குளிர்பான விளம்பரத்தில் நடித்ததற்காக ரூ.750 வாங்கினேன். அதன்பின்னர், இந்த தொகை ரூ.1,500 ஆக உயர்ந்தது. அதை தான் ரொம்ப நாட்களாக வாங்கினேன். ‘மைனே பியார் கியா’ படத்துக்காக ரூ.31 ஆயிரம் சம்பளம் வாங்கினேன். அதன்பின்னர், ரூ.75 ஆயிரமாக என்னுடைய சம்பளம் உயர்ந்தது. இவ்வாறு சல்மான்கான் தெரிவித்தார்.