4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 335 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது அவுஸ்ரேலியா

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 335 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கும். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இந்திய அணியில் குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அக்சார் பட்டேல், உமேஷ் யாதவ் மற்றும் மொகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேக்ஸ்வெல், ஆஷ்டோன் அகர் நீக்கப்பட்டு விக்கெட் கீப்பர் வடே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சம்பா சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் முதலில் இருந்தே நிதானமாக விளையாடினர். அதன்பின்னர், வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.

தனது நூறாவது போட்டியில் விளையாடும் வார்னர் 45 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தியதுடன், 103-வது பந்தில் சதமடித்தார். அவரை தொடர்ந்து பின்ச்சும் அரை சதமடித்தார். இந்த ஜோடி 8 ரன்ரேட் விகிதத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தது.

இறுதியில் இந்த ஜோடியை கேதர் ஜாதவ் பிரித்தார். 35 ஓவரில் 231 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜாதவ் வீசிய பந்தை தூக்கியடித்த வார்னர் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 119 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரியுடன் 124 ரன்கள் எடுத்தார்.

அவரை தொடர்ந்து சதத்தை நெருங்கிய பின்ச், உமேஷ் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். இவர் 96 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித்தையும் உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். அப்போது ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் அவுட்டானார். கடைசியில் அதிரடியாக ஆடிய ஹாண்ட்ஸ்கோம்ப், 30 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து உமேஷிடம் வீழ்ந்தார்.

இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், கேதர் ஜாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த போட்டியில் உமேஷ் யாதவ் தனது 100வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து 335 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது.