அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.

சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் 26 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்திலும், இந்தூரில் நடைபெற்ற 3-வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

ஏற்கனவே தொடரை கைப்பற்றிய வீராட்கோலி அணியின் வெற்றி இந்த ஆட்டத்திலும் நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக 9 ஆட்டத்தில் வென்ற (வெஸ்ட் இண்டீஸ் 1, இலங்கை 5, அவுஸ்ரேலியா 3) இந்தியா நாளைய போட்டியிலும் வென்று சாதனை படைக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

இந்த ஆட்டத்தில் வென்றால் கோலி தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்பு டோனி, ராகுல் டிராவிட் தலைமையில் 9 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கிடைத்து இருந்தது.

3 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படாத வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் பெங்களூர் ஆட்டத்துக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது.

கேதர் யாதவ், புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு பதிலாக ராகுல், முகமது ‌ஷமி இடம் பெறலாம் என்று தெரிகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் கோலி, ரோகித்சர்மா, ரகானே, டோனி, மனிஷ் பாண்டே ஆகியோரும், பந்துவீச்சில் யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோரும், ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்த்திக் பாண்ட்யாவும் நல்ல நிலையில் உள்ளனர்.

அவுஸ்ரேலிய அணி இந்த ஆட்டத்திலாவது பதிலடி கொடுத்துவிட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது. ஆரோன்பிஞ்ச் வருகை அந்த அணிக்கு பலத்தை கொடுத்துள்ளது. கடந்த போட்டியில் அவரது அதிரடி சதம் பலன் இல்லாமல் போனது.

ஆஸ்திரேலியா தனது முழு திறமையை பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்த கடுமையாக போராடும். காயம் அடைந்து நாடு திரும்பிய ஆஸ்டன் அகருக்கு பதிலாக ஆடம் ஜம்பா இடம் பெறுவார் என்று தெரிகிறது.

இரு அணிகளும் நாளை மோதுவது 127-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 126 போட்டிகளில் இந்தியா 44-ல், ஆஸ்திரேலியா 72-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

பகல்-இரவாக நடைபெறும் இந்த ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.