அண்மையில் டோக்கியோவில், காலணி தைக்கும் ரோபோ ஒன்றை, ‘யுனீக்’ காலணி தயாரிப்பாளர்கள் அறிமுகம் செய்தனர். ‘உலகின் மிகச் சிறிய காலணி தொழிற்சாலை’ என்று விளம்பரப்படுத்தப்பட்ட அந்த ரோபோ, 15 அடிக்கு 5 அடி இடத்திற்குள் அடங்கிவிடுகிறது.
இரண்டு ரோபோ கரங்கள், ஒரு ஜோடி காலணிகளை ஆறு நிமிடத்திற்குள் தைத்துத் தருகின்றன.
வாடிக்கையாளர் கால் அளவுகளை எடுத்துத் தந்ததும், காலணிக்கான பொருட்களை எடுத்து, நுாலைக் கோர்த்து, தைத்து தருகிறது யுனீக் ரோபோ.
ஆனால், காலணியின் இறுதி வடிவத்தை, ஒரு காலணி வடிவமைப்பாளர்தான் சரிபார்த்து, திருத்தி தருகிறார். இந்த ரோபோ கரங்களை காலணி தயாரிக்கும் விதத்தில் உருவாக்க ஆறு ஆண்டுகள் பிடித்ததாக யுனீக் காலணி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரபல காலணி தயாரிப்பாளர்கள், இனி புதிய காலணிகளை வடிவமைத்து, அதற்கான மென்பொருளை மட்டும் தங்கள் கிளைகளுக்கு அனுப்பினால் போதும். கிளைக் கடைகளில் உள்ள ரோபோ, அங்கு வரும் வாடிக்கையாளரின் அளவுகளை எடுத்து ஆறு நிமிடங்களில் தைத்துத் தந்துவிடும்!