யூ டியூப்பில் 1½ கோடி பேரை மயக்கிய ‘ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்கு நடனம் ஆடிய கல்லூரி ஆசிரியை தமிழ் சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
‘என்ட அம்மையிட ஜிமிக்கி கம்மல், என்ட அப்பன் அத கொண்டு போயி’ என்ற மலையாள பாடல், மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடின்றே புத்தகம்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்றிருந்தது.
அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, என்றாலும் அதில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடல் மட்டும் கேரளா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. கல்லூரி ஒன்றில் மாணவர்களும், மாணவிகளும் இணைந்து ஆசிரியர்களை கிண்டல் அடிக்கும் வகையில் இந்த பாடல் எடுக்கப்பட்டிருக்கும். இதில் நடனத்தை விட பாட்டுக்கே முக்கியத்துவம் இருக்கும். இதனை கேரள கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட இளைஞர் பட்டாளம் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஓணப்பண்டிகையின் போது பாடி மகிழ்ந்தனர். இதற்காக அவர்களே நடன அசைவுகளையும் செய்து கொண்டனர்.
அப்படி நடந்த ஒரு நடன காட்சி கடந்த சில வாரங்களுக்கு முன்பு யூ டியூப்பில் வெளியானது. அன்று முதல் இன்று வரை சுமார் 1½ கோடிக்கும் அதிகமானோர் இப்பாடலையும், இதற்காக ஆடப்பட்ட நடன காட்சியையும் பார்த்தும், கேட்டும் பரவசம் அடைந்துள்ளனர்.
குறுகிய காலத்தில் இப்பாடல் இந்த அளவுக்கு மக்களை ஈர்த்தது எப்படி? என்ற ஆச்சரியம் பல இசையமைப்பாளர்களையே வியப்பில் ஆழ்த்தியது.
அவர்கள் யூடியூப்பில் வெளியான பாடலையும், அதில் நடனமாடியவர்களையும் பார்த்த போது அது சினிமாவில் வெளியான காட்சிகள் அல்ல. மாறாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கல்லூரி ஆசிரியைகளும், மாணவிகளும் இணைந்து ஆடிய நடனம் என்பதை கண்டுபிடித்தனர்.
குறிப்பாக இந்த நடனத்தில் முன்வரிசையில் இரு இளம்பெண்கள் நின்று ஆடுவார்கள். அவர்கள் கல்லூரி மாணவிகளாக இருப்பார்கள் என்றே எல்லோரும் முதலில் நினைத்தனர். யூ டியூப்பில் வெளியான பின்பு அந்த பெண்கள் யார்? என அனைவரும் விசாரித்த போது அந்த பெண்கள், மாணவிகள் அல்ல, அக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியைகள் என்று தெரியவந்தது.
அவரது பெயர் ஷெரில். இவரும் அன்ன ஜார்ஜ் என்ற இன்னொரு ஆசிரியையும் இணைந்து சக மாணவிகளுடன் சேர்ந்து இந்த நடனத்தை ஆடியிருப்பார்கள்.
இதில் ஆசிரியை ஷெரிலின் ஆட்டம்தான் அபாரம். அவர் வெகு இயல்பாக ஆடியிருப்பார். அவரின் நடன அசைவுகளும், ஆடும் போது முகத்தில் விழும் தலைமுடியை இயல்பாக தள்ளிவிடுவதும், பாட்டின் ராகத்திற்கு ஏற்ப கைகளையும், கால்களையும் அசைத்து ஆடியவிதமும், குறிப்பாக நடனத்தை ரசித்து ஆடிய பாங்கும் அனைவரையும் கவர்ந்தது. இதுதான் இப்பாடலை கோடிக்கணக்கானவர்கள் பார்த்த காரணம் என்பதும் தெரியவந்தது.
இதன்மூலம் ஒரே நாளில் இந்த நடனத்தை ஆடிய ஆசிரியை ஷெரில் புகழின் உச்சத்திற்கு சென்று விட்டார். கேரளம் மட்டுமின்றி தென்மாநிலம் முழுவதும் அவருக்கு ரசிகர் பட்டாளமும் உருவாகிவிட்டது. இதுவும் யூடியூப்பில் ’போஸ்டிங்‘ ஆக, அவரை சினிமாவில் நடிக்க வைக்க பல முக்கிய இயக்குனர்கள் திட்டமிட்டனர்.
தமிழ் பட டைரக்டர் ஒருவரும் ஆசிரியை ஷெரிலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரது அடுத்த படத்தில் நடிக்க விருப்பமா? என்றும் கேட்டுள்ளார்.
ஆனால் ஆசிரியை ஷெரில் இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே இப்பாடல் மூலம் பிரபலமான கல்லூரி நிர்வாகம் இதன்மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை மக்களின் நலத்திட்ட பணிகளுக்கு செலவிட உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.