மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மடிக்ககூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சாம்சங் சமீபத்தில் கோரியுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் X மற்றும் கேலக்ஸி நோட் 8 என ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வசதி கொண்ட ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை கோரியுள்ளது.

முன்னதாக மைக்ரோசாப்ட், சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இவை 2018-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில்ஸ தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் முதல் முறையாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது. பாக்கெட்நௌ வெளியிட்டுள்ள தகவல்களின் படி தென் கொரியாவின் தேசிய ரேடியோ ஏஜன்சி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான விண்ணப்பம் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.

சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் SM-G888N0 என்ற பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கொரியாவில் பயன்படுத்த அனுமகி பெற்றால் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி X அல்லது கேலக்ஸி X1 என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2019-ம் ஆண்டு வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தயாராவது மட்டும் தற்சமயம் உறுதியாகியுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை.