அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவிடம் அபூர்வ திறமை இருப்பதாக இந்திய வீரர்கள் பாராட்டியுள்ளனர்.
கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேத்யூ வேட் (2 ரன்), ஆஷ்டன் அகர் (0), கம்மின்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக சாய்த்து இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதன் மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது இந்தியர் (ஏற்கனவே 1987-ம் ஆண்டில் சேத்தன் ஷர்மா, 1991-ம் ஆண்டில் கபில்தேவ்) என்ற சிறப்பை குல்தீப் யாதவ் பெற்றார்.
22 வயதான குல்தீப் கூறுகையில், ‘ஹாட்ரிக் சாதனை படைப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. உண்மையிலேயே இது எனக்கு பெருமைமிக்க தருணமாகும். ஹாட்ரிக் விக்கெட்டுக்குரிய 3-வது பந்தை எப்படி வீச வேண்டும் என்று விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்டேன். அதற்கு அவர், நீ எப்படி விரும்புகிறாயோ அதே போல் வீசு என்று கூறினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக இங்கு விளையாடி உள்ளேன். அதனால் இதனை எனது சொந்த மைதானம் போல் உணர்கிறேன். இங்குள்ள ஆடுகளத்தன்மையை நன்கு அறிவேன்’ என்று உற்சாகமாக கூறினார்.
குல்தீப்புக்கு இந்நாள் மற்றும் முன்னாள் இந்திய வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சச்சின் தெண்டுல்கர்: குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் நன்றாக பந்து வீசியதோடு நிற்கவில்லை. தங்களது சுழல் மூலம் ஆட்டத்தை இந்தியாவுக்கு சாதகமாக திருப்பினார்கள்.
கவுதம் கம்பீர்: குல்தீப் யாதவின் சீருடை வேண்டும் என்றால் ஊதா நிறத்தில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) இருந்து நீல நிறத்துக்கு (இந்திய அணிக்குரிய) மாறியிருக்கலாம். ஆனால் அவரது புதிரான சுழற்பந்து வீச்சு தொடர்ந்து அப்படியே இருக்கிறது. அற்புதம்.
ஹர்பஜன்சிங்: அதே மைதானம், அதே எதிரணி, அதே வயதில் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் (குல்தீப்) சாதித்து இருக்கிறார். குல்தீப்பின் பந்து வீச்சை பார்த்த போது, இதே ஈடன்கார்டனில் 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் ‘ஹாட்ரிக்’ நிகழ்த்திய இனிமையான நினைவுகளை மனதில் கொண்டு வந்தது. குல்தீப்பின் சாதனை மகத்தானது. இந்த மைல்கல் எந்த ஒரு வீரராக இருந்தாலும் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. ஈடன்கார்டன் மைதானம் யாரையும் ஒரு போதும் வெறுங்கையுடன் அனுப்பியதில்லை. குல்தீப்பின் சாதனை வரலாற்று புத்தகத்தில் இருந்து என்றுமே நீக்கப்பட முடியாதவை.
இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் அபாரமாக பந்து வீசும் போது, மூத்த சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஒரு நாள் போட்டி அணிக்குள் மீண்டும் திரும்புவது கடினமே. குல்தீப், சாஹல் இருவரும் மிக நன்றாக செயல்படுவதால், இப்போதைக்கு அவர்களை நீக்கிவிட்டு அஸ்வின், ஜடேஜாவை சேர்க்க வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன்.
சுரேஷ் ரெய்னா: மூன்று வீரர்களையும், மூன்று விதமாக ஆட்டம் இழக்கச் செய்த விதம்… சபாஷ்!.
முகமது கைப்: குல்தீப்பிடம் அபூர்வ, சிறப்பு வாய்ந்த திறமை இருக்கிறது. அவரது முன்னேற்றத்தை பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.