தமிழ்த்தேசியப் பணியில் ஒப்பற்று உழைத்த பெருமனிதர் பொன் சத்தியநாதன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22 – 09 – 2017 அன்று வெள்ளிக்கிழமை தமிழ்த்தேசியத்திற்கான மதிப்பளித்தலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
காலை பத்து மணிக்குத் தொடங்கிய தேசிய வணக்க நிகழ்வில் பொன் சத்தியநாதன் அவர்களின் புகழுடலுக்கு தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உரையாற்றிய வசந்தன் அவர்கள், “பொன். சத்தியநாதன் அவர்களின் பணிகளும் செயற்பாடுகளும் பல்தளங்களில் அறியப்பட்டபோதும் அவரின் அனைத்துச் செயற்பாடுகளும் ஒரு புள்ளியை நோக்கியதாகவே அமைந்திருந்தன. அப்புள்ளியானது தமிழினம் தனது அரசுரிமையைப் பெற்றுக்கொள்வதாகவே அமைய முடியும். அவ்வகையில் மருத்துவர் பொன். சத்தியநாதனின் தமிழர் இறைமை மீட்புப் பங்களிப்பென்பது அளவிட முடியாதது. குறிப்பாக எமது ஈழவிடுதலைப் போராட்டத்தின்பால் அவர் கொண்டிருந்த பேரன்பும் அர்ப்பணிப்பும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை. தமிழினத்தினதும் தமிழ்மொழியினதும் பாதுகாப்பும் வளர்ச்சியும் ஈழநாடு அமைவதிலேயே தங்கியிருக்கிறது என்பதை அவர் திடமாக நம்பினார்.“அவ்வகையில் அவர் ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும், அதன் தலைமைமீதும் ஆழமான நம்பிக்கையையும் பற்றையும் கொண்டிருந்தார். மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்களின் விடுதலை வேட்கையும், எமது விடுதலை இயக்கம்பால் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் அன்பும் என்றும் வீண்போகாது. மருத்துவர் தமிழினத்துக்கும் எமது விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக அவருக்கு அதியுயர் விருதான ‘மாமனிதர்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய திரு. செந்தூரன் அவர்கள், மருத்துவர் பொன். சத்தியநாதனின் செயற்பாடுகளை விரிவாக விளக்கி ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்றினார். அவர் தனதுரையில் அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மெல்பேர்ண் அலுவலகத்தை நிறுவுவதற்கான மிக முக்கிய பங்களிப்பை வழங்கி அதற்கான அடித்தளத்தை உருவாக்கினார் எனவும், தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவதற்காக பலதரப்பட்டவர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணினார் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முகிலரசனின் இசையில் சிறிவிஜய் பாடி பொன். சத்தியநாதன் அவர்களின் நினைவாக எழுதப்பட்ட சிறப்புப்பாடல் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. அத்தோடு மாமனிதர் பொன். சத்தியநாதன் அவர்கள் நினைவாக ‘தணியாத தமிழ்த் தாகன்’ என்ற சிறப்பு நூலும் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
இந்நூலில் மாமனிதர் பொன். சத்தியநாதன் அவர்களுக்காக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன், முனைவர் கு.அரசேந்திரன், ஓவியர் புகழேந்தி, நடிகர் சிவகுமார் மற்றும் அவுஸ்திரேலியா தமிழர் அமைப்புக்கள் சார்பாக வெளியிடப்பட்ட இரங்கற்செய்திகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
பின்னர், சமய வழிபாடுகளுடன் வணக்க நிகழ்வு நிறைவுற்றது. வேலைநாளாக இருந்தபோதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொன். சத்தியநாதன் அவர்களுக்குத் தமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.